உலகச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்!

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி : கடற்கரை விடுதி முழுவதும் எரிந்து நாசம்

எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4,140 கோடி அபராதம் 



ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு 

Published By: Vishnu

04 Dec, 2025 | 08:59 PM

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (04) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

புது டில்லியில் அமைந்துள்ள பாலம் விமானப்படை தளத்தில் அவரது விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். ரஷ்ய தலைவருக்கு இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

புட்டின் – மோடி இடையிலான இந்த சந்திப்பில் :  இருநாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டுறவு,

எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள், உலக அரசியல்


சூழ்நிலை, முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய வீதிப் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன.


இந்திய–ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய விஜயமாக இது அமையவுள்ளது.  நன்றி வீரகேசரி 












இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு 


02 Dec, 2025 | 11:39 AM

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன. 

இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட  அனர்த்தங்களில் சிக்கி  1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 






இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்! 

Published By: Digital Desk 1

07 Dec, 2025 | 12:02 PM

இந்தோனேசியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான சூறாவளியால் 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. இது தென்கிழக்காசிய நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் அண்மைய வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும்.

மேலும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

லிண்டாங் பவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். 

"மூன்று நாட்கள் சாப்பிடாமலும் குடிக்காமலும் தங்கள் நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருந்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கிராமத்தில் சுமார் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் செல்ல இடமில்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறைச்சாலையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை அனுப்புவதற்கு வேறிடம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிபோல்கா நகரம் மற்றும் மத்திய தபனுலி ஆகிய இரண்டு பகுதிகளுக்கான நில அணுகல் ஞாயிற்றுக்கிழமை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. உதவிகள் விமானம் மற்றும் கடல் வழியாக மட்டுமே அவர்களை அடைய முடிந்தது. சில பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கொள்ளை நடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 




கோவா தீ விபத்தில் 23 பேர் பலி : கடற்கரை விடுதி முழுவதும் எரிந்து நாசம் 

Published By: Digital Desk 1

07 Dec, 2025 | 08:15 AM

இந்தியாவின், வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா கடற்கரைப் பகுதியில் செயல்பட்டு வந்த இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பரிதாபகரமான தீ விபத்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேலும் விடுதியில் தங்கியிருந்த ழூ4 சுற்றுலா பயணிகளும் தீக்கிரையானதாகழூ தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருந்ததாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளிலும், சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அப்பகுதி எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளனர். 

சம்பவத்துக்கான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த துயரச் சம்பவம் கோவா சுற்றுலா பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,

கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 





எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4,140 கோடி அபராதம் 

06 Dec, 2025 | 11:02 AM

ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் சமூக வலைத்தளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டங்களை அமுல்படுத்தியது. அவை பின்பற்றப்பட வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம் அந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஆணையம் பல மாதங்களாக விசாரணை நடத்தியது.

விதிமுறைகளை மீறியதற்காக, எக்ஸ் நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ, அதாவது இலங்கை பண மதிப்பில் சுமார் ரூ.4,140 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களை தவறாக வழிநடத்தும் ஏமாற்றும் வடிவமைப்புகள் (Deceptive Designs), விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்க மறுத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபராதங்களில் இதுவும் ஒன்றாகும்.   நன்றி வீரகேசரி 






No comments: