மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி
அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி
துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி
பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்
தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி
தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி
தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி
தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி
பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை
பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி
கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான்
கடமையைச் செய்யென கட்டளை இட்டான்
வேதம் படித்தான் புராணம் படித்தான்
வேண்டாக் கருத்தை விலக்கியே நின்றான்
பாதகம் கடிந்தான் பக்குவம் உரைத்தான் பார்க்கும்
அனைத்திலும் பரம்பொருள் கண்டான்
நாத்திகம் பேசிடும் ஆத்தீகன் பாரதி
வேண்டா அனைத்தையும் விலக்கிடச் சொன்னான்
கடவுளை வெறுத்திடச் சொல்லவும் இல்லை
கள்ளம் போக்கிடல் கட்டாயம் என்றான்
கண்ணனைப் பாடினான் சக்தியைப் பாடினான்
கீதையை மனத்தில் இருத்தியே வாழ்ந்தான்
பாரத தேசத்தைப் பராசக்தி என்றான்
மண்ணினைத் தெய்வமாய் மனமதில் கொண்டான்
பாரதி சிந்தனை பரந்தது விரிந்தது
பாப்பாவைப் பாடுவான் பரமனைப் பாடுவான்
ஏய்த்திடு மாந்தரை இகழ்ந்துமே பாடுவான்
எவருக்கும் அஞ்சா பாடினான் பாரதி
வள்ளுவன் கம்பனை மனமதில் இருத்தினான்
இளங்கோக் கவிஞனை ஏந்தியே நின்றான்
தெள்ளிய திருமுறை உள்ளத்தி லிருத்தினான்
திருமால் அடியார் பாடலும் விரும்பினான்
வேதிய குலத்தில் பிறந்தவன் பாரதி
வேதம் நன்றாய்க் கற்றவன் பாரதி
சாதியை எதிர்த்து சன்னதம் கொண்டு
சமத்துவம் பேசி நின்றவன் பாரதி
பாட்டில் புரட்சி செய்தவன் பாரதி
ஏட்டில் புரட்சியை காட்டியே நின்றவன்
நாட்டில் புரட்சிக்கு வித்தினை விதைத்தவன்
நற்றமிழ் கவிஞனாய் ஒளிர்கிறான் பாரதி
அஞ்சா நெஞ்சனாய் பாரதி வாழ்ந்தான்
அவனிடம் சரஸ்வதி ஐக்கிய மாகினாள்
அன்னைத் தமிழில் கவிமழை பொழிந்தான்
அனைத்தும் தமிழின் பொக்கிஷம் ஆனது
பாஞ்சாலி சபதம் வியந்திட வைக்கும்
கீதையின் சிந்தனை உயர்ந்திடு படைப்பே
குயிலின் பாட்டு பாரதி தத்துவம்
ஆத்தி சூடியோ அவனது வித்துவம்
பாப்பாப் பாட்டு எத்தனை அறிவுரை
கேட்கக் கேட்க கருத்துகள் விரிந்திடும்
பாரதி வரமாய் தமிழுக்கு வாய்த்தான் பாரதி
பாட்டை பக்குவப் படுத்துவோம் !
.jpeg)

No comments:
Post a Comment