தமிழ்த் திரையுலகில் நட்சத்திர நடிகர்களை பார்த்திருக்கிறோம் , நட்சத்திர நடிகைகளை பார்த்திருக்கிறோம் ஆனால் நட்சத்திர படத் தயாரிப்பாளர் என்று ஒருவரை குறிப்பிடுவதென்றால் அவர் ஏவி எம் சரவணன் தான்.
இது வெறும் புகழ்ச்சிக்கான வர்ணனை அல்ல , உண்மையான கருத்தாகும் . தனது 18வது வயதில் படவுலகில் அடியெடுத்து வைத்த சரவணன் மிக குறுகிய காலத்திலேயே திரையுலகின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ந்து விட்டார் . தன்னுடைய தந்தையான ஏவி மெய்யப்பனின் தொழில் நுணுக்கங்களை அருகில் இருந்து பார்த்து தேர்ந்த அவர் சகோதரர்களுடன் இணைந்து 1961ல் வீரத் திருமகன் படத்தை தயாரித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை தராத போதும் அடுத்து எடுத்த நானும் ஒரு பெண் வெற்றி படமானது. அதன் பின் அவர் சம்பந்தப் பட்ட பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாகவே திகழ்ந்தன.
சரவணனின் நட்பு வட்டாரம் மிகவும் பெரிது. இன்னார் இவர் என்று
இல்லாமல் எல்லாத் துறையிலும் அவருக்கு நண்பர்கள் பரந்து இருந்தார்கள்.
இல்லாமல் எல்லாத் துறையிலும் அவருக்கு நண்பர்கள் பரந்து இருந்தார்கள்.
அவர்களுள் சினிமாவுலகில் சரவணனின் நெருங்கிய நண்பர்கள் எஸ் .ஏ .அசோகன், எஸ் .வி . சுப்பையா ஆவர் . அசோகன் மூலம் ஏசி திருலோகசந்தரின் அறிமுகம் கிடைத்து அதன் பின் திருலோக்கின் இறுதிக்கு காலம் வரை அந்த நட்பு நீடித்தது. திருலோக்க்குடன் மட்டும் தினசரி பேசுவதற்கு என்று ஒரு மொபைல் போனை வைத்திருந்தார் சரவணன். தினமும் அதில் அவருடன் பேசி விட்டு எடுத்து வைத்து விடுவார். அதே போல் திருலோக் ஏவி எம் ஸ்டுடியோவுக்கு சரவணனை பார்க்க வந்ததும் அலுவலக அறையில் சரவணனுக்கு அருகில் திருலோக்குக்கு ஒர் ஆசனம் போடப் படும். இருவரும் அருகருகில் இருந்து தான் பேசுவார்கள். திருலோக்கின் இறுதி காலத்தில் தினமும் அவரை சென்று மருத்துவமனையில் பார்ப்பதை வழக்கப் படுத்தியிருந்தார் அவர்.
சுப்பையா காவல் தெய்வம் படம் எடுத்த போது சிவாஜியின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் இருந்த போது தங்களின் உயர்ந்த மனிதனுக்கு சிவாஜி கொடுத்த சில நாட்களை சுப்பையாவுக்கு விட்டுக் கொடுத்து உதவினார் சரவணன் .
அதே போல் பாலாஜி சிவாஜி நடிப்பில் படம் எடுக்க முனைந்த போது அவருக்கு திருலோக்கை அறிமுகம் செய்து , அதன் விளைவாக தங்கை உருவாகி , பாலாஜியின் நிரந்தர இயக்குனரானார் திருலோக் !
காசேதான் கடவுளடா படத் தயாரிப்பு தொடங்கிய போது எஸ் .பி .முத்துராமன் அபிப்பிராய பேதம் காரணமாக ஏவி எம்மிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால் செட்டியாரின் மறைவுக்கு பின் மீண்டும் படத் தயாரிப்பில் ஏவி எம் நிறுவனம் இறங்கிய போது ரஜினியின் முரட்டுக் காளை படத்தை இயக்க சரவணன் தன் நண்பன் எஸ் பி எம்மைத் தான் தேர்வு செய்தார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா வல்லவன் , போக்கிரி ராஜா , நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி எல்லாம் வெற்றி படமாகின.
திரையுலகில் இருந்து விலகி தன் சொந்த ஊருக்கு போய் தங்கி விட முத்துராமன் தீர்மானித்த போது அவரைத் தடுத்து தனக்கு கம்பெனி கொடுக்கும் விதத்தில் இங்கேயே இருந்து விடுங்கள் என்று சரவணன் கேட்டுக் கொண்டார். அது மட்டுமன்றி தாங்கள் தயாரித்த சிவாஜி படத்தில் முத்துராமனையும் ஒரு பார்ட்னராக சேர்த்து கௌரவப்படுத்தினார் அவர்.
சிவாஜி பட வெளியீட்டுக்கு முன் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை அழைத்து படத்தை போட்டு காட்டிய சரவணன் , மறுநாள் ஜெயலலிதாவுக்கும் படத்தை போடு காட்ட தவறவில்லை. இந்த வகையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பை அவர் எல்லாத் தலைவர்களுடனும் பேணி வந்தார்.
சினிமாத் துறை என்றால் வதந்திகள், கிசுகிசுக்கள் , அபாண்டங்கள் என்பனவற்றுக்கு பஞ்சம் இருக்காது! ஆனால் சரவணனைப் பொறுத்த வரை அவ்வாறான எந்த புரளிகளுக்கும் இடம் இருந்ததில்லை.
இனிய சுபாவம், அடக்கமாக பழகும் தன்மை, மென்மையான போக்கு என்பன அவரை எல்லோருக்கும் நெருகமாக வைத்திருந்தது. எம் ஜி ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் என்று தொடங்கி அனைவரும் அவரிடம் அன்பு பாராட்டினார்கள்.
1980 ம் வருடம் இலங்கை கொழும்புக்கு சரவணன் வருகை தந்த போது அவரின் இலங்கை நண்பர் எஸ் .கே .அரியரட்னத்தின் பிரைட்டன் ஹோட்டலில் அவரை முதல் தடவை வையாக சந்திக்கக் வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு இறுதி வரை நீடித்ததில் மன நிறைவு!


No comments:
Post a Comment