மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா
கொடுப்பதும் மழை கெடுப்பதும் மழை
அடுத்தடுத்து பெய்து அழிவைக் கொடுப்பதா
நீரின்றி வாடினார் நீருக்காய் ஓடினார்
நீராலே மக்கள் நிலம்விட்டோ ஓடுகிறார்
தயையின்றி மழை நிலமதை விழுங்கிறது
நிலையிழந்து மக்கள் நிர்க்கதியாய் நிற்கின்றார்
உயிருடமை மண்ணுக்குள் புதையுண்டு போகிறது
ஓலிமிடும் பேரொலியே உலுக்கியே நிற்கிறது
பாலகரும் பறிபோனார் வாலிபரும் மண்புதைந்தார்
ஓலமிடும் உறவெல்லாம் உணர்விழந்து நிற்கின்றார்
காலனுக்கு கண்ணிலையா கதியற்று கதறுகிறார்
மழைவேண்டிக் கோவிலில் மண்டியிட்டார் மக்கள்
மழவெள்ளம் கோவிலை விழுங்கிடவே வருகிறதே
அலைந்துலையும் மக்களை ஆண்டவனே காப்பாற்று
ஆதாரம் நீயென்று அழுகின்றார் அனைவருமே
நல்மனத்தைக் கொண்டவர் ஓடோடி வருகின்றார்
கல்மனத்தைக் கொண்டவர் கைகட்டி நிற்கின்றார்
விளம்பரத்தை நாடுவார் வேகமாய் வருகின்றார்
கொடுப்பதாய் நடித்து எடுக்கின்றார் படமெல்லாம்
எரிகின்ற வீட்டை எட்டநின்று பார்ப்பதுபோல்
இருக்கின்ற தலைமைகளும் எட்டியே நிற்கின்றார்
செல்வாக்கை நிலைநாட்டும் பாங்கினிலே அவர்கள்
செய்கின்ற அத்தனையும் தீங்காகும் அவர்கட்கே
பாசங்கு செய்யாமல் பக்குவமாய் உதவுவார்
பலபேர்கள் வந்து கைகொடுத்து நிற்கின்றார்
உதவும் மனங்களை உளமார வாழ்த்துவோம்
உணர்வுடனே செயற்பட்டு உதவிடுவோம் யாவர்க்கும் !


No comments:
Post a Comment