இலங்கைச் செய்திகள்

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான உதவியை £1 மில்லியனாக உயர்த்திய ஐக்கிய இராச்சியம்

மலையக மார்க்கத்தில் 12 ரயில்கள் நிறுத்தி வைப்பு

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !  


அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!  

05 Dec, 2025 | 07:02 PM

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில், நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த  2,082,195 பேர் வெள்ளப் பாதிப்பு, இடம்பெயர்வு மற்றும் சொத்து சேதங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன் 4, 164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி 

 



டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான உதவியை £1 மில்லியனாக உயர்த்திய ஐக்கிய இராச்சியம்  

05 Dec, 2025 | 06:11 PM

டித்வா புயலால் இலங்கையில் 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியம் (UK) மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட அவசர மனிதாபிமான உதவிகளுக்கு மேலாக, இலங்கைக்கான தனது நிதி உதவியை £1 மில்லியன் (அமெரிக்க டாலர் 1.32 மில்லியன்) ஆக உயர்த்துவதாக UK அறிவித்துள்ளது. இந்த உதவி உயிர்காக்கும் அவசர பொருட்கள், ஆரம்ப நிலை மீட்பு, மற்றும் அவசர தேவைகளுக்கான ஆதரவுகளை வழங்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இந்த உதவிகள் இலங்கையின் மிகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது சென்றடைந்து வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), UNOPS – United Nations Office for Project Services, Vriddhi Foundation உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து முக்கிய நிவாரணச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை குடிநீர், சுகாதாரப் பொருட்கள், தற்காலிக தங்குமிட உதவி,


அவசர மருத்துவ உதவி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தொடக்க மீட்பு ஆதரவுகளை உள்ளடக்கியவை ஆகும்.

இதேவேளை, “டித்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆதரவளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மக்களின் உயிரைக் காக்கவும், அவர்கள் மீண்டும் வாழ்வை கட்டியெழுப்பவும் தேவையான இடங்களில் உடனடி உதவி வழங்கப்படும்.  என பிரித்தானிய குறிப்பிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




மலையக மார்க்கத்தில் 12 ரயில்கள் நிறுத்தி வைப்பு  

Published By: Digital Desk 3

05 Dec, 2025 | 04:42 PM

சீரற்ற வானிலையினால் மலையக ரயில் மார்க்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரம்புக்கனை, பொல்கஹவெல, குருநாகல் மற்றும் கனேவத்த ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 12 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ரயில் நிலையங்களுக்கு இடையில் புஜ்ஜொமுவ பாலம் மற்றும் யட்டல்கொடவில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளை மீண்டும் திறக்க 24 மணி நேரமும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதி அமைச்சர், இதன் மூலம் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க முடியும் என தெரிவித்தார்.

“இந்த சீரமைப்பு பணிகளுக்காக இரவும் பகலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து ரயில் ஊழியர்களுக்கும், பேரிடர் முகாமைத்துவத்துக்கு பங்களித்த இலங்கை இராணுவத்திற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.   நன்றி வீரகேசரி 




4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்  

Published By: Digital Desk 3

05 Dec, 2025 | 04:10 PM

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம்.

சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார்.   நன்றி வீரகேசரி 






இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !  

Published By: Digital Desk 3

05 Dec, 2025 | 03:43 PM

வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர்.

டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர்.

இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில்,  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது.

கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும்  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர்.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது.

நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன.   நன்றி வீரகேசரி 







No comments: