அன்று பாதிநாள் சிம்கார்டு வாங்குவதிலேயே போய்விட்டதால் ஹுட்டால் போவதில் தடை ஏற்பட்டது. அதுசரி, என்ன அது ஹுட்டாங் அப்படி இப்படின்னு உடான்ஸ் விட்டுட்டிருக்க என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதனால் புதிர் போடாமல் விளக்கி விடுகிறேன். என்னதான் தொழில் நுட்பத்திலும் கட்டுமானத்திலும் அசுரவளர்ச்சி பெற்றிருந்தாலும் பழைய நிலையை மறக்கவில்லை.
சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நாகேஷ் ஒரு உணவகத்தில் சர்வராக வேலைபார்த்து மிகவும் கடினமாக உழைத்து முன்னேறினான். முன்னேறியதும் பழசை மறக்காமல் இருக்கவும் அவனுக்கு கர்வம் ஏற்படாமல் இருக்கவும் தன் பார்வையில் படும்படி சர்வர் உடையை தொங்கவிட்டிருப்பான். அதைப்போல பழசை மறக்காமல் இருக்கத்தான் சீனாவில் இந்த ஹுட்டாங்கை ஞாபகார்த்தமாக விட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் அன்று ஹுட்டாங் செல்ல முடியாமல் போனது. அடுத்ததாக செல்ல வேண்டிய டெம்பிள் ஆப் ஹெவன் சென்றோம். அதாவது சொர்க்க கோவில் சென்றோம். நாம் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் ஆண்டுக்கு ஒருமுறைதான் சொர்க்கவாசல் திறக்கும். அதுவும் வாசல்தான். தற்காலிகமாக ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும். அன்று தவறவிட்டால் அடுத்த ஒரு ஆண்டு கழித்துத்தான் போகமுடியும்.
அதுவும் நம் தலையில் எழுதியிருந்தால்தான் போகமுடியும். ஆனால் ஒரு ஆண்டு சொர்க்கவாசலில் நுழைந்து சொர்க்கம் சொன்றவர்கள் அடுத்த ஆண்டும் செல்வது ஏன்? அதற்கு ஒரு ஆண்டுதான் மதிப்பா? மறு ஆண்டும் சென்று புதுப்பிக்க வேண்டுமா? பூமியில் இருக்கும்போதே சொர்க்கத்தில் இவ்வளவு குழப்பம் இருக்கிறதே. அந்த வம்பு நமக்கெதற்கு? அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.
ஆனால் சீனாவில் சொர்க்க கோவிலே நிரந்தரமாக உள்ளது. ஆதலால் எடுத்த எடுப்பிலேயே நிரந்தரமாக சொர்க்கம் கிடைத்துவிட்டதே என்று புளகாங்கிதம் அடைந்தோம். நாம் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் அந்த வீடு நமக்கு மிக மிகப் பிடித்துப் போனால் அந்த வீட்டை எந்த மதத்தினர் விற்கிறார் என்றா பார்ப்போம்? உடனே வாங்கி அதற்குண்டான சடங்குகளைச் செய்து சரிசெய்து விடுவோம் அல்லவா?
வீட்டுக்கே இப்படி மதங்கடந்த மாண்பைக் கடைப்பிடிக்கும் நாம் வீடுபேறு என்றால் விடமுடியுமா? எந்த மதம் என்றால் என்ன? சீனா சென்றதற்கு பலனாக சொர்க்கம் கிடைத்தது. சொர்க்கம் என்றால் சும்மா கிடைக்குமா? அதற்கும் போராட வேண்டியிருந்தது. சிம் கார்டு கிடைத்துமா? மாவு இருந்தாலும் பனியாரத்தை நாம்தனே சுடவேண்டும்.
அங்கு செல்ல மூத்த பிரஜைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. அவர்கள் எந்த நாட்டு குடிமக்களாக இருந்தாலும் சரி. சொர்க்கம் செல்ல நல்ல மனதுடன் எல்லோருக்கும் வேறுபாடின்றி கட்டணத்தை தளர்த்தி இருக்கிறார்கள். ஆனால் சீனாவில் எல்லா இடங்களில் இந்த அனுமதி இல்லை. மற்ற இடங்களில் சீனநாட்டு முதியவர்களுக்கு மட்டுமே அனுமதி இலவசம்.
இனி இந்த டெம்பிள் ஆப் ஹெவன் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்த இடம் பீஜிங்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வாடகை வாகனத்தில் இருபது நிமிடத்துக்குள் சென்று விடலாம். நுழைவிடத்தில் இருந்தி சில கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். இது மிங் மற்றும் க்யிங்க் பேரரசுகளால் நல்ல அறுவடைக்காக வேண்டித் தொழுவதற்காக கட்டப்பட்ட மதம்சார்ந்த கட்டிடங்களாகும்.
பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கட்டிடம் வட்டவடிவமான மூன்று அடுக்குகளைக் கொண்ட வெண்கற்களால் கட்டப்பட்ட பலிபீடம் ஆகும். இங்கு பேரரசர்கள் பெரும்பாலான பலியிடுதல்களை நிகழ்த்தி இருக்கிறார்கள். இது தவிர நல்ல அறுவடை கிடைப்பதற்காக பிரார்த்தனை செய்ய மிகவும் பிரம்மாண்டமான கட்டிடமும் உள்ளது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இக்கட்டிடம் மரங்களை மட்டுமே கொண்டு ஆணிகள் எதுவும் பயன்படுத்தாமல் கட்டியிருப்பதுதான் இதன் சிறப்பாகும். நான் இந்த சொர்க்க கோவிலைப் பற்றி நினைத்தது வேறு ஆனால் அங்கு நடந்தது வேறு. அதைப் பற்றியும் கொஞ்சம் அறிவோம். பண்டைய காலத்தில் சீனாவில் பேரரசர்கள் சொர்க்கத்தில் இருப்பவர்களின் பிரதிநிகளாக கருதப்பட்டிருக்கிறார்கள்.
சொர்க்கத்தின் மகனாகப் பார்கப்பட்ட பேரரசன் அவர்களின் சார்பாக பூமியில் ஆட்சி நடத்துவதாக கருதப் பட்டிருக்கிறான். சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு பலிபீடத்தையும் இவர்கள் கட்டியுள்ளார்கள். இவ்வாறு பலிகொடுக்கவும் நல்ல அறுவடை நடக்க பிரார்த்தனை செய்யவும் இந்த கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள்.
ஆண்டுக்கு இருமுறை இப்பேரரசர்கள் தங்கள் அரண்மணையிலிருந்து தங்கள் பரிவாரங்களுடன் இங்கு வந்து தங்குவார்கள். அப்படி தங்கும்போது சிறப்பான ஆடைகளை அணிவதோடு மாமிசம் எதுவும் சாப்பிட மாட்டார்களாம். பேரரசர்கள் அரண்மணையில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு செல்லும்போது சாதாரண குடிமக்கள் அந் ஊர்வலத்தைப் பார்க்கவோ பிரார்த்தனையில் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்களாம்.
இக்கோவிலில் பேரரசன் மட்டும் தனிப்பட்ட முறையில் நல்ல அறுவடைக்காக பிரார்த்தனை செய்வானாம். என்ன சொர்க்கமோ என்ன கோவிலே இது ஒருவகையான தீண்டாமையும் ஆதிக்கமும்தான் என்ற எண்ணம் ஏற்படவே சொர்கத்தின் போலித்தன்மையை தெரிந்து கொண்டேன். இது தெரியாமல் சொர்க்கமே கிடைத்து விட்டதுபோல் புளகாங்கிதம் அடைந்து எழுதிவிட்டேன்.
இதற்குத்தான் எதையும் நன்றாக அறிந்து கொள்ளாமல் முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நடந்து கொள்ளக்கூடாது. இப்படித்தான் நாட்டில் பலர் சுற்றித் திரிகிறார்கள். வாயைத் திறந்தால் பொய்தான். அவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டால் பொய் சொன்னதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். முடிந்தவரை சமாளிப்பார்கள்.
முடியாத பட்சத்தில் அப்படித்தான் சொன்னார்கள். அது இது என்று எதையாவது சொல்லி மழுப்பி விடுவார்கள். இப்படிப் பட்டவர்களை ஒன்றிரண்டு தடவை சொன்னால் பரவாயில்லை ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கலாம்.
ஆனால் பொய்சொல்லுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டவர்களை என்னவென்று சொல்லமுடியும்.
-சங்கர சுப்பிரமணியன்.





No comments:
Post a Comment