இலங்கைச் செய்திகள்

யோஷித்த ராஜபக்ஷ கைது!

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம்

யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு 


யோஷித்த ராஜபக்ஷ கைது!

25 Jan, 2025 | 12:23 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பண மோசடி தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதியினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 






வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

Published By: Vishnu

25 Jan, 2025 | 12:37 AM
image

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு  நேற்று வெள்ளிக்கிழமை  வைபவரீதியாக   சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இதுகருதப்படுகிறது.

இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள்,   குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர,  சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்,அமைச்சர்   ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்   அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,  அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,   பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம்குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்தகுலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய,   சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் கலாசாரம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல்,தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல், இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தைவளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் குறிப்பிடுகையில், மனிதர்கள் இயற்கையுடன் எவ்வளவுநெருக்கமாகன தொடர்புகளுடன் இருக்கின்றார்கள் என்பதை தைப்பொங்கல் எடுத்துக் காட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வுநிரூபிக்கப்படுவதாகவும் கூறினார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஹினிதும சுனில் செனெவி கருத்துரை வழங்கியதுடன், அனைத்து இனக்குழுக்களுக்கிடையேயானஒற்றுமைக்கு மொழித் தடையை கடக்க வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இதனை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி வீரகேசரி 






படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் 

24 Jan, 2025 | 05:08 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் இன்று (24) பகல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் புகைப்படத்துக்கு தீபமேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டவுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதனை ஆளுநரின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றிய சுகிர்தராஜன் தனது தொழில் நிமித்தமாக திருகோணமலையில் வசித்துவந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார். 

வீரகேசரி பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் “ஈழவன்” என்ற பெயரிலும் சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார். 

இந்நிலையில், 24.01.2006 அன்று காலை வேலைக்குச் செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தபோது ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். 

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார். 

குறிப்பாக அந்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சிகள் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் காயங்களை நுட்பமாக படமெடுத்து, அந்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்; அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல, அவை துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை வெளிச்சமிட்டுக்  காட்டியிருந்தார்.

மட்டக்களப்பு – குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். 

இவர் தமிழ் சமூகத்தின் ஊடகப் போராளியாக செயற்பட்டு, தனது 36ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார். 

இவரது இழப்பு தமிழ் ஊடக சமூகத்துக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.

நன்றி வீரகேசரி 




யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி 

24 Jan, 2025 | 01:38 PM
image

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை  (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. 

இன்று வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர் நாடா வெட்டி வைக்கப்பட்டு புகைப்பட கண்காட்சி ஆரம்பமாகியது.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் தூதுவர் கலந்து சிறப்பித்ததுடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு 

Published By: Vishnu

23 Jan, 2025 | 11:53 PM
image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும்  திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில்  வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக வீட்டிலோ அல்லது வெளியில் செல்வோர்  தனிமையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் குறுக்கரத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளது. 

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மழையுடன் கூடிய வானிலை இன்று குறைவடைந்தாலும், நீர்த் தேக்கங்களில் இருந்து வெளியேறும் நீர் மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்து செல்வதால் மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 


No comments: