திருவிளையாடல் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 புராண, பக்திப் படங்களில் இருந்து தமிழ் சினிமா விலகி சமூகப்


படங்களில் அக்கறை காட்டிக் கொண்டிருந்த அறுபதாம் ஆண்டு நடுப் பகுதியில் ட்ரெண்ட் சேன்ஜ் என்பது போல் ஒரு பக்திப் படம் வந்து தமிழ் திரையுலகையே வியந்து அண்ணாந்து பார்க்க வைத்தது . அந்தப் படம்தான் திருவிளையாடல். அன்றைய கால கட்டத்தில் இப்படி ஒரு படம் வந்ததே ஈசன் திருவிளையாடல் தானோ என்பது போல் இப் படம் வந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது.

 
நாடகத் துறையிலும், பின்னர் திரைத் துறையிலும் நீண்ட கால

அனுபவம் கொண்ட ஏ பி நாகராஜன் கதை வசனம் எழுதி இப் படத்தை இயக்கியிருந்தார். திருவிளையாடல் புராணத்தில் இருந்து சில சம்பவங்களை எடுத்து அவற்றை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் ஜனரஞ்சக ரீதியில் படத்தை படைத்திருந்தார் அவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும், அவரின் திறமையை நிரூபிப்பதை போல் இருந்தது.
 
சிவாஜியின் நூறாவது படமான , நூறு நாட்கள் ஓடிய நவராத்திரி படத்தை எடுத்த ஏ பி என் அதே சிவாஜி, சாவித்திரி ஜோடியை வைத்து இந்தப் படத்தையும் எடுத்தார். ஆனால் நவராத்திரி போல அன்றி மிகுந்த பொருட் செலவில் , பிரம்மாண்டமான அரங்க அமைப்பில், கண்ணுக்கு இனிமையான வண்ணத்தில் படத்தை உருவாக்கி அசத்தி இருந்தார் ஏ பி என்.  மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் முருகன் மலை ஏறுவது, தன் கட்டளையை மீறி பார்வதி தட்சனின் யாகத்துக்கு சென்றதால் சிவன் அவளை எரித்து பின் உயிர்ப்பிப்பது, ஏழை புலவன் தருமிக்கு ஆயிரம் பொற் காசுகள் கிடைக்க கவிதை எழுதி கொடுத்து அது நக்கீரனால் சவாலுக்கு உட்படுத்தப் பட்டதும் அவரை மூர்ச்சையாகி பின்னர் தெளியவைப்பது , மீனவனாக வந்து பயங்கர சுறாவிடம் இருந்து மீனவர்களை காப்பாற்றி மீனவப் பெண்ணை மணப்பது, கர்வம் மிக்க ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க விறகு வெட்டியாக வந்து ஆடிப் பாடி அவரின் கர்வத்தை அடக்குவது என்று சில கதைகளை தெரிவு செய்து படமாக்கி இருந்தார் ஏ பி என்.

படத்தின் கதா பாத்திரங்களுக்கு ஏ பி என் தேர்ந்தெடுத்த நடிகர்கள் அனைவரும் அப் பாத்திரங்களுக்கு கண கச்சிதமாக பொருந்தினார்கள். இதனால் அப் பாத்திரங்கள் மிக இயல்பாக ரசிகர்களை கவர்ந்தன. இதற்கு முன்னரும் பலர் சிவனின் பாத்திரத்தில் தோன்றிய போதிலும் சிவாஜியை போல் எவரும் அதற்கு அச்சொட்டாகப் பொருந்தவில்லை. சிவா என்றால் சிவாஜி என்பது போல் வேடப் பொருத்தம் பொருந்தியது. சக்தியாக வரும் சாவித்திரியும் அதற்கு ஈடு கொடுத்து குறை வைக்காது நிறைவாக நடித்திருந்தார்.


ஹேமநாத பாகவதர் வேடத்துக்கு டி எஸ் பாலையா, தருமி வேடத்துக்கு நாகேஷ் இவர்களை தவிர்த்து வேறு எவரையும் எண்ண முடியாத வண்ணம் பாத்திரமாகவே மாறி இருந்தார்கள் அவர்கள். இவர்களோடு கே பி சுந்தராம்பாள், டி ஆர் மகாலிங்கம், முத்துராமன், தேவிகா, ஓ.ஏ .கே . தேவர், கே சாரங்கபாணி, மனோரமா, இ ஆர் சகாதேவன் , ஆகியோரும் நிறைவான நடிப்பை வழங்கியிருந்தார்கள். ஓரிரு காட்சிகளில் வரும் ஏ பி நாகராஜனும் தன் நடிப்புக்கு நியாயம் செய்தார்.

இந்தப் படத்தில் கங்கா அமைத்த அரங்க அமைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல் கே எஸ் பிரசாத்தின் ஒளிப்பதிவு அப்படியே கண்களை கவருகிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த தொழில் நுட்ப வசதிக்கு இவர்களின் உழைப்பு அதிசயமானது.
 
கண்ணதாசன் இப் படத்துக்கு எழுதிய பாடல்கள் சாகா வரம்

பெற்றவை. திரை இசைத்த திலகம் கே வி மகாதேவன் இசை படத்துக்கு ஒரு வரப்பிரசாதம். சில காலம் பட வாய்ப்பின்றி இருந்த டி ஆர் மகாலிங்கத்தை இந்தப் படத்தில் நல்ல விதமாக பயன்படுத்தியிருந்தார்கள். சில காட்சிகளில் வந்தாலும் அவர் பாடிய இல்லாததொன்றில்லை, இசைத் தமிழ் நீ செய்த பெரும் சாதனை பாடல்கள் கணீரென்று ஒலித்தன. அதே போல் பலமுரளிகிருஷ்ணாவின் ஒரு நாள் போதுமா பாடலை நாள் முழுதும் கேட்கலாம். பாட்டும் நானே, பார்த்தல் பசுமரம், பொதிகை மலை உச்சியிலே, நீல சேலை கட்டி கொண்ட பழம் நீ அப்பா, பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறன. சபாஷ் கே வி மகாதேவன்!


படத்தின் கதையை கோர்வையாக்கிய ஏ .பி .என் . தீன் தமிழில் வசனங்களையும் எழுதியிருந்தார். இது படத்துக்கு மேலும் வலு சேர்த்தது. தருமியை சந்திக்கும் போது சிவன் கோயிலுக்குள் பாதணிகள் அணிந்து காட்சியளிக்கிறார், தேவலோகத்தில் திடீரென முருகன் முன் அவ்வையார் காட்சியளிக்கிறார், அதே போல் பாலமுருகன் கையில் வேல் இருக்கின்றது , இது போல் சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை எல்லாம் டைரக்டரின் திறமை சமாளித்து விடுகிறது.

திருவிளையாடல் படத்தை உருவாக்கியதன் மூலம் பக்திப்

படங்களுக்கு தான் ஒரு அத்தாரிட்டி என்று நிரூபித்தார் ஏ பி நாகராஜன். படமும் இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

1 comment:

chola.nagarajan said...

மிக நேர்த்தியான, காத்திரமான முன்வைப்பு. திருவிளையாடலை இத்துணை நுட்பமாகக் கண்டுசொன்னமை அருமை! மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் ஐயா!