24 Jan, 2025 | 01:31 PM
டி.பி.எஸ்.ஜெயராஜ்
இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாகவும் இலங்கை தமிழர்களின் கலாசாரத் தலைநகராகவும் நீண்டகாலமாக கருதப்படுகிறது. அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் தான் மிகவும் உயரமான கட்டடம். அது தற்போது சிறிய அரசியல் புயல் ஒன்றின் மையமாக மாறியிருக்கிறது. அது தமிழர்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
யாழ்ப்பாண கலாசார மையம் இந்தியாவினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும். அந்த மையம் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுக்கும் பொதுவில் இலங்கை மக்களுக்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மையத்தை நிருவகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை இல்லை என்பதால் அதை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு ஐந்து வருடங்களுக்கு இந்தியாவே நிதியையும் வழங்குகிறது. அதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகமே தற்போது யாழ்ப்பாண கலாசார மையத்தின் நிருவாகத்துக்கு பொறுப்பாக இருக்கிறது.
ஆனால், எதிர்பாராத முறையில் சடுதியாக மையத்தின் பெயரில் செய்யப்பட்ட மாற்றமே தற்போதைய சர்ச்சையை மூளவைத்திருக்கிறது. யாழ்ப்பாண கலாசார யையத்தின் பெயர் 2025 ஜனவரி 18ஆம் திகதி திருவள்ளுவர் கலாசார யையம் என்று மாற்றப்பட்டது. தெய்வப்புலவர் என்று தமிழர்களினால் போற்றப்படுகின்ற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகளாவிய புகழ்பெற்றது.
இரு வரிகளைக் கொண்ட 1330 குறள்கள் அடங்கிய திருக்குறள் நெறிமுறை, வாழ்க்கைப் பண்புகள், தார்மீகம், பொருளாதாரம், ஆட்சிமுறை, மகிழ்ச்சி மற்றும் காதல் என்று வாழ்வியலின் பரந்தளவிலான விடயங்களை பற்றிய போதனை விளக்கங்களை தருகிறது. திருக்குறளில் ஒவ்வொன்றும் பத்து குறள்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் இருக்கின்றன. திருக்குறளையும் அதை படைத்த திருவள்ளுவரையும் பெரும்பாலான தமிழர்கள் தங்களது கலாசாரப் பொக்கிசமாக போற்றுகிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் ஜனவரி 15ஆம் திகதியை திருவள்ளுவர் தினமாகப் பிரகடனம் செய்திருக்கிறது.
திருவள்ளுவர் கலாசார மையம்
இவ்வருடத்தைய திருவள்ளுவர் தினத்துக்கு மூன்று நாட்களுக்கு பிறகு யாழ்ப்பாண கலாசார மையம் திருவள்ளுவர் கலாசார மையம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஜனவரி 18ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தொடக்கப் பந்தி வருமாறு :
"தமிழ்த் தெய்வப்புலவர் திருவள்ளுவரை கௌரவிக்குமுகமாக ஜனவரி 18, 2025 இடம்பெற்ற வைபவம் ஒன்றில் யாழ்ப்பாண கலாசார மையத்தை திருவள்ளுவர் கலாசார மையம் என்று பெயர்மாற்றம் செய்வதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வைபவத்தில் கடற்தொழில், நீர்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இலாமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் எஸ். கிருஷ்ணேந்திரன், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அத்தபத்து மற்றும யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேறு முக்கியஸ்தர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்."
யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயரை எதிர்பாராத வகையிலும் எந்தவித தேவையும் இல்லாமலும் திருவள்ளுவர் கலாசார மையம் என்று மாற்றியதனால் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எந்தவொரு தமிழ் அதிகாரியுடனோ அல்லது மக்களின் பிரதிநிதிகளுடனோ கலந்தாலோசிக்காமல் மிகவும் இரகசியமான முறையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அதிகாரிகளுடனும் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க அரசாங்கத்தின் சில பிரிவினருடனும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையாக இது தோன்றுகிறது.
இராமலிங்கம் சந்திரசேகர்
இந்த பெயர் மாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது அமைச்சர் சந்திரசேகர் கூறியிருப்பது வேடிக்கையானதாகவும் பரிதாபகரமானதாகவும் இருக்கிறது." பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே நான் பெயர் மாற்றத்தை அவதானித்தேன்" என்று தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றை திறந்துவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார். திருவள்ளுவரின் பெயர் ஒன்றும் ஆட்சேபத்துக்குரியது அல்ல, ஆனால், யாழ்ப்பாண கலாசார மையம் என்ற பெயர் தொடர்ந்து இருப்பதே சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இலத்திரனியல் திரையில் கலாசார மையத்தின் புதிய பெயர் காண்பிக்கப்பட்டபோது தமிழ்மொழி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்ததையும் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். ஆங்கிலததுக்கும் சிங்களத்துக்கும் முதலாவது, இரண்டாவது இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகின்ற மொழிக்கு பெருமைக்குரிய இடத்தைக் கொடுப்பதே வழமையான நடடைமுறையாக இருந்துவந்தது. அதனால் பெயரில் தமிழுக்கே முதலிடத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று சந்திரசேகர் கவலைப்பட்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதானி கடற்தொழல் அமைச்சரே, ஆனால், அவரது அமைச்சரவைச் சகா ஹினிதும சுனில் செனவி கூட யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவருக்கு கூறவில்லை என்று தோன்றுகிறது.
உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது அமைச்சர் சந்திரசேகர் தனது அப்பாவித்தனத்தை (அறியாமையை) வெளிப்படுத்திய போதிலும் கூட , முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலாசார மையத்தின் பெயர் மாற்றம் தனக்கு அதிர்ச்சியை தந்ததாக அறிக்கை வெளியிட்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தான் அமைச்சராக இருந்த வேளையிலேயே யாழ்ப்பாண கலாசார மையத்தின் நிர்மாணம் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று தேவானந்தா கூறினார். அந்த நேரத்தில் தனது தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) நிருவாகத்தின் கீழேயே யாழ்ப்பாண மாநகரசபை இருந்தது என்றும் யாழ்ப்பாண கலாசார மையத்துக்கான நிலம் ஒதுக்கப்பட்டது என்றும் கூறிய அவர் கலாசார மையம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு வரம். யாழ்ப்பாணம் என்ற பெயர் மாற்றம் பொறுப்பானவர்கள் அதற்கான விளக்கத்தை தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவான தேசிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பெயர் மாற்றம் குறித்து வாய் திறக்கவில்லை. மாவட்டத்தின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறே மௌனமாக இருந்தார்கள். ஆனால், யாழ்ப்பாண மக்கள் கடுமையாக எதிர்பபைக் காட்டத் தொடங்கினார்கள். யாழ்ப்பாண மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். இந்த விவகாரம் குறித்து சுயாதீனமான யூரியூபர்கள் பெருவாரியான செய்திகளை வெளியிட்டார்கள். இந்த பெயர் மாற்றம் தமிழ் சமூக ஊடகங்களில் ஆராயப்படும் சர்ச்சைக்குரிய விவகாரம்க மாறியிருக்கிறது.
தமிழரசு கட்சியின் எதிர்ப்பு
மக்கள் மத்தியில் எதிர்ப்பு தீவிரமடையவே இலங்கை தமிழரசு கட்சி பதில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் அரசியல் குழு இணைய வழியாக அவசரமாகக் கூடியது. பெயர் மாற்றத்துக்கு எதிராக கட்சியினால் அறிக்கை ஒன்றை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே. சிவஞானம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை சந்தித்து கடிதம் ஒன்றைக் கையளித்தார்.
அதிர்ச்சி தரும் வகையில் கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தமிழரசு கட்சி கவலையை வெளிப்படுத்தியதாக தமிழ்ப் பத்திரிகைகளின் செய்திகள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. பெயர் மாற்றம் குறித்து தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி "யாழ்ப்பாணம்" என்பது தமிழர்களின் பெருமைக்குரியது. யாழ்ப்பாணம் என்ற பெயரை கலாசார மையத்தில் இருந்து நீக்கியது தமிழ் மக்களை நிந்தனை செய்யும் ஒரு செயலாகும் என்று அழுத்திக் கூறியிருக்கிறது. இந்த விவகாரம் அவசரமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பெயர் மாற்றம் தொடர்பான சர்ச்சை இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவுமுறையை பாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தமிழரசு கட்சியின் கடிதம் கூறியது.
திருவள்ளுவருக்கு எதிரானது அல்ல
பெயர் மாற்றத்துக்கு தமிழர்களின் எதிர்ப்பு திருவள்ளுவருக்கு எதிரானது அல்ல என்பதை கவனிக்கவேண்டியது முக்கியமானதாகும். "தெய்வப்புலவர்" என்று போற்றப்படும் திருவள்ளுவர் மீது இலங்கையில் தமிழர்கள் பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள். இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் திருவள்ளுவரின் பெருவாரியான சிலைகளும் திருவுருவப்படங்களும் இருக்கின்றன.
இலங்கை தமிழர்களினால் எழுதப்படும் கட்டுரைகளும் நிகழ்த்தப்படும் உரைகளும் திருக்குறளில் இருந்து மேற்கோள்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பாடசாலைகளில் தமிழ் கற்கின்ற ஒவ்வொரு தமிழரும் திருவள்ளுவருடனும் அவரது திருக்குறளுடனும் பரிச்சயமானவராகவே இருப்பார். கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரியில் எமது தமிழாசிரியர் வினாசித்தம்பியிடமிருந்து நான் கற்ற சில குறள்களை இன்னமும் என்னால் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க முடியும். அதனால், எதிர்ப்பு திருவள்ளுவருக்கு எதிரானது அல்ல. கலாசார மையத்தின் பெயரில் இருந்து யாழ்ப்பாணம் என்ற சொல் நீக்கப்பட்டதற்கானதே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கலாசார நிலையம் இந்தியாவிடம் இருந்து கிடைத்த பரிசு என்பதும் அதன் பராமரிப்புக்காக ஐந்து வருட செலவை இந்தியா செய்கிறது என்பதும் உண்மையே. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு இந்தியா வழங்கிய பரிசே இந்த மையம். அதன் காரணத்தினால்தான் யாழ்ப்பாண கலாசார மையம் என்று அதற்கு பெயரிடப்பட்டது.
தங்களது யாழ்ப்பாண கலாசார மையம் குறித்து யாழ்ப்பாண மக்கள் பெருமையடைந்தார்கள். அதனுடன் நெருக்கமான தொடர்புகளையும் அவர்கள் வைத்திருந்தார்கள். வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம் வருகின்ற சந்தர்ப்பங்களில் கலாசார மையத்துக்கு விஜயம் செய்யத் தவறுவதில்லை. அது ஒரு சுற்றுலா மையாமாகவும் மாறிவிட்டது. ஆனால் இப்போது யாழ்ப்பாணம் என்ற பெயர் தன்னிச்சையான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது.
தங்களுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழர்களுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது என்றும் அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் எடுக்கின்ற தீர்மானங்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்றும் மறைமுகமாக மீண்டும் ஒரு தடவை கூறப்படுகின்றது.
பெயர் மாற்றம் பரவலாக கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்ற அதேவேளை, அதற்கான காரணம் குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. அது எந்த விதமான கெடுதியான நோக்கமும் இல்லாத ஒரு பெயர் மாற்றம் என்று சிலர் நினைக்கிறார்கள். யாழ்ப்பாண கலாசார மையம் ஏன் திருவள்ளுவர் கலாசார மையம் என்று பெயர் மாற்றப்பட்டது? கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. தொலைபேசி மூலமாக தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.
புதுடில்லியின் தீர்மானம்
ஆனால், நடந்தது எனபதைப் பற்றிய உள்நோக்கு ஒன்றை இந்தியாவில் உள்ள தகவலறிந்த வட்டாரங்கள் தந்தன. யாழ்ப்பாண கலாசார நிலையத்தை திருவள்ளுவர் கலாசார நிலையம் என்று பெயர் மாற்றுவதற்கான சடுதியான தீர்மானம் புதுடில்லியிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது ஒரு உயர்மட்ட முடிவு. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துகின்றன அவ்வளவுதான்.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட முறை வல்லாதிக்க கர்வத்தையும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத அதிகார மிடுக்கையும் கொண்டதாக தோன்றுகிறது. இத்தகைய மனோபாவம் தான் அயலகத்தில் உள்ள பல நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்தியா தனிமைப்படுவதற்கு வழிவகுத்தது. எவ்வாறெனினும், உத்தேச பெயர் மாற்றத்தை இறுதிநாள் வரை இந்திய அதிகாரிகள் மிகவும் இரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள். பெயர் மாற்றம் தொடர்பான செய்தி முன்கூட்டியே பொதுவெளிக்கு வந்தால் யாழ்ப்பாணத்தில் பெரிய ஆர்ப்பாட்டங்கள நடக்கக்கூடும் என்று அவர்கள் பயந்ததே அதற்கு காரணமாகும்.
திருவள்ளுவர் கலாசார மைய யோசனை பொதுவில் இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினதும் குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியானதுமாகும்.
மோடியின் பாரதிய ஜனதா விஞ்ஞாபனம்
"பாரதத்தின் செழுமையான கலாசாரத்தை வெளிக்காட்ட உலகம் பூராவும் திருவள்ளுவர் கலாச்ர மையங்களை அமைப்போம். யோகா, ஆயுர்வேதம், பாரதிய மொழிகள் மற்றும் சாஸ்திரிய சங்கீதம் ஆகியவற்றில் பயிற்சி வழங்குவோம். ஜனநாயகத்தின் தாய் என்ற வகையில் பல்லாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த பாரதத்தின் வளமான ஜனநாயக பாரம்பரியங்களை நாம் மேம்படுத்துவோம்" என்று கடந்த வருடத்தைய லோக்சபா (பாராளுமன்ற) தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு
பாரதிய ஜனதாவின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதைப் போன்று திருவள்ளுவர் மையங்களை நிறுவும் பிரதமர் மோடியின் குறிக்கோள் வெறுமனே ஒரு சமூக கலாசார செயற்திட்டம் அல்ல. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அவரது கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை மேய்படுத்துவதற்கான ஒரு அரசியல் தந்திரோபாயமும் கூட. மோடியின் தேர்தல் அலை தமிழ்நாட்டைச் சூழவில்லை. சமூக நீதியையும் மதச்சார்பின்மையையும் அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கோட்பாட்டுடன் தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் இந்துத்வா கோட்பாட்டை உறுதியாக எதிர்த்து நிற்கிறது. தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும் கூட பாரதிய ஜனதாவினால் தமிழ்நாட்டுக்குள் உருப்படியான ஊடுருவல்களைச் செய்யக்கூடியதாக இருக்கவில்லை.
2024ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டது. தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் திருவள்ளூவர் மைய யோசனையும் ஒன்று. திருவள்ளுவரை மதித்துப் போற்றுகின்ற தமிழர்கள் தங்களின் தந்திரத்துக்கு ஏமாறுவார்கள் என்று பாரதிய ஜனதா நம்பியது மாநிலத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் குறைந்தது ஒன்பது தொகுதிகளிலாவது வெற்றிபெற முடியும் என்று பாரதிய ஜனதா நம்பிக்கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏமாற்மாகவே போனது.தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆக 18 சதவீதமான வாக்குகளே கிடைத்தன.
அவ்வாறிருந்தாலும், பாரதிய ஜனதா திருவள்ளுவரை கைவிடவில்லை. மோடி தொடர்ந்தும் திருவள்ளுவர் புகழ்பாடி தனது பல உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டிக் கொண்டேயிருக்கிறார். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் ஒரு பேரபிமானி என்று தன்னைக் காட்டிக்கொள்வதன்
மூலமாக தமிழர்களின் இதயங்களை வென்றெடுப்பதே மோடியின் நோக்கமாக இருக்கிறது போலும்.
மோடி 2024 செப்டெம்பரில் சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் உணர்ச்சிவசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். " இந்தியாவின் முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் விரைவில் திறக்கப்படும் என்பதை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மகத்தான ஞானி திருவள்ளுவர் உலகிற்கு வழிகாட்டும் சிந்தனையை மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் தந்திருக்கிறார். அவரது படைப்பான திருக்குறள் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஆனால், அதில் கூறப்பட்டிருக்கும் சிந்தனைகள் இன்றைக்கும் கூட பொருத்தமானவையாக விளங்குகின்றன" என்று அவர் சொன்னார்.
"உடனடி" திருவள்ளுவர் மையம்
சிங்கப்பூர் திருவள்ளுவர் மையம் இன்னமும் திறககப்படவில்லை. ஆனால், இப்போது யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயரை மாற்றி இலங்கையில் இரவோடிரவாக ஒரு திருவள்ளுவர் கலாசார மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இது உடனடி நூடில்ஸ் அல்லது சாம்பார் போனறு ஒரு உடனடி திருவள்ளுவர் நிலையம். வலது கையால் கொடுத்ததை இடது கையால் திருப்பி எடுத்ததன் மூலம் யாழ்ப்பாண மக்களை இந்திய அரசாங்கம் நிந்தனை செய்திருக்கிறது. பெயர் மாத்திரம் தானே மாற்றப்பட்டிருக்கிறது, கலாசார மையம் தொடர்ந்து இருக்கப்போகிறது என்று எவராவது வாதிடக்கூடும். ஆனால், ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.
யாழ்ப்பாண கலாசார நிலையம் வேறுபட்ட ஒரு நோக்கத்துக்காக நிர்மாணிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக வடுப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த சிந்தனைமிக்க ஒரு கொடையே பிரமாண்டமான சின்னமான கலாசார மையம். அதற்கேற்ற முறையிலேயே அது வடிவமைக்கப்பட்டது. திருவள்ளுவர் மையம் வேறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது. அது அரசியல் குறிக்கோளுடனான ஒரு கலாசார செயற் திட்டமாகும். யாழ்ப்பாண மையத்தின் மீது திருவள்ளுவர் மையத்தை திணித்தமை ஏற்கெனவே யாழ்ப்பாண மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு துரோகம் செய்வதை ஒத்ததாகும்.
யாழ்ப்பாண கலாசார மையம் எனது இதயத்துக்கு நெருக்கமானது. நவீன கட்டமைப்பையும் வசதிகளையும் கொண்ட மையம் என்னைப் பொறுத்தவரை ஒரு கனவு நனவானதைப் போன்றது. அதன் முன்னேற்றத்தை தொலைதூரத்தில் இருந்து பல வருடங்களாக நான் உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன். அந்த மையத்தின் வடிவமைப்புக்கு பொறுப்பாக இருந்த கடடிடக் கலைஞர் மதுரா பிரேமதிலக பல தசாப்பதங்களாக எனது தனிப்பட்ட நண்பர். யாழ்ப்பாண கலாசார மையத்தைப் பற்றி கடந்த காலத்தில் நேர்மறையாக, புகழ்ச்சியாக எழுதியிருக்கிறேன். இந்த பின்புலத்தில், எனது முன்னைய எழுத்துக்களின் துணையோடு யாழ்ப்பாண கலாசார மையத்தின் படிமுறை வளர்ச்சி மீது சற்று கவனத்தை குவிக்கிறேன்.
மன்மோகன் சிங்
யாழ்ப்பாண கலாசார மையத்தின் தொடக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. "அற்புதமான கொடைக்காக" முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தாராளமாக நன்றி கூறியபோதிலும், யாழ்ப்பாண கலாசார மையம் எந்த விதத்திலும் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்தது அல்ல. கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராக அசோக் காந்தா இருந்தபோது யாழ்ப்பாண கலாசார மையம் கருத்தாக்கம் செய்யப்பட்டது. அன்று பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தது. அதனால் ஒரு கருத்தாக்க அடிப்படையில் யாழ்ப்பாண கலாசார மையம் மன்மோகன் சிங்கின் கொடையேயாகும்.
யாழ்ப்பாண மக்களுக்காக...
கலாசார மற்றும் கற்றல் செயற்பாடுகளே கலாசார நிலையத்தின் பிரதான நடவடிக்கைகள் என்று உத்தேச செயற்றிட்டம் வரையறுத்தது. 2011 ஜூனில் இந்திய உயர்ஸ்தானிகரகம் ஆரம்ப செயற்றிட்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டது. யாழ்ப்பாண மக்களுக்கு பெரிதும் தேவைப்பட்ட ஒரு சமூக மற்றும் கலாசார அரங்காக யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை நிர்மாணிப்பதே நோக்கம் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. போரின் முடிவுக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கு சமூகத்தின் கலாசார புனர்வாழ்வு மற்றும் உளவியல் ஒருங்கிணைப்புக்கு உதவுவதும் நோக்கம் அதில் கூறப்பட்டது.
அந்த ஆவணத்தின் பொருத்தமான சில பகுதிகள் வருமாறு ;
"யாழ்ப்பாண மக்களுக்கு பெரிதும் தேவைப்பட்ட ஒரு சமூக மற்றும் கலாசார அரங்காக யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தேசித்திருக்கிறது. கலாசார சமூக உட்கட்டமைப்பின் ஒரு அங்கமாக அமைவதுடன் போரின் முடிவுக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கு சமூகத்தின் கலாசாரப் புனர்வாழ்வுக்கும் உளவியல் ஒருங்கிணைப்புக்கும் உதவுவதாகவும் கலாசார மையத்தை அமைக்க உத்தேசிக்கப்படுகிறது.
"கலாசாரக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆராய்ச்சி மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக நாட்டின் ஏனைய பாகங்களுடன் வடக்கு மக்களை இணைக்கக்கூடிய கலாசார நடவடிக்கைகளின் ஒரு குவிமையமாக கலாசார மையத்தின் கட்டடம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மக்களுக்கான இந்த சமூக கலாசார அரங்கு பிராந்தியத்தின் இழந்துபோன கலாசார நிலக்காட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் கலாசார மரபு நாட்டில் உள்ள ஏனைய சமூகங்களினால் மதிக்கப்படுவதை ஊக்குவிப்பதன் மூலமாக இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவவேண்டும்.
"யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கலாசாரத்தையும் கலாசார மரபையும் சாதனைகளையும் பேணிக் காத்து வளர்க்குமுகமாக வட இலங்கையில் மாத்திரமல்ல முழு நாட்டினதும் கலாசார நடவடிக்கைகளின் ஒரு குவிமையமாக செயற்படக்கூடிய அடையாளச் சின்னமாக யாழ்ப்பாண கலாசார மையத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் உத்தேசித்திருக்கிறோம்.
"இலங்கையின் சகல சமூகங்களினதும் ஒத்துழைப்பையும் ஐக்கியத்தையும் உருவகப்படுத்தும் ஒரு கலாசார நிறுவனமாக மையம் மாறவேண்டும். இதன் மூலமாக இந்த செயற்திட்டம் வடமாகாணத்துக்கு பெரிதும் தேவைப்படுகின்ற சமூக உட்கட்டமைப்பின் அங்கமாக அமைவதையும் நாட்டின் ஏனைய பாகங்களுடன் வடக்கு மக்கள் தங்களை மீள இணைத்துக்கொள்வதையும் உறுதிப்படுத்துவதற்கு உதவவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."
கட்டடக்கலை வடிவமைப்பு
கட்டடக்கலை வடிவமைப்புப் போட்டி 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. "ரீம் ஆர்க்கைட்ரேவ்" (Team Architrave) என்ற அமைப்பு அந்த போட்டியில் வெற்றி பெற்றது. கட்டடக்கலையின் விசேட வடிவமைப்பு அம்சங்கள் மீது கவனம் செலுத்தும் அந்த அமைப்பு கொழும்பில் இயங்குகிறது.
போட்டியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண கலாசார மையத்துக்கான வடிவமைப்பு இலங்கை பொறியியலாளர்கள் குழு ஒன்றுடன் சேர்ந்து ரீம் ஆர்க்கைட்ரேவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த "பி அன்ட் சி. புறொஜெக்ட்ஸ்" (P & C Projects) என்ற பிரதான ஒப்பந்தக்காரர். அது போட்டி கேள்விப்பத்திரம் மூலமே தெரிவுசெய்யப்பட்டது. கட்டட நிர்மாணத்தில் இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த விசேட உப ஒப்பந்தக்காரர்களும் பங்கேற்றனர். நிர்மாணப்பணிகள் 2016 செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டு 2020 மார்ச்சில் நிறைவு செய்யப்பட்டன.
மதுரா சிறிமேவன் பிரேமதிலகவே ரீம் ஆர்க்கைட்ரேவ் அமைப்பின் தலைவர் மதுரா என்று சகலராலும் அறியப்பட்ட அவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் படித்தவர். அவர் கட்டடக்கலையை இலங்கையின் மொறட்டுவை பல்கலைக்கழகத்திலும் பின்லாந்தின் ஹெல்சிங்கியிலும் கற்றுக்கொணாடார். யாழ்ப்பாண கலாசார மைய செயற்றிட்டத்தின் பின்னணியில் இருந்த ஒரு முக்கியமான படைப்பாக்க சக்தியாக அவர் விளங்கினார்.
வனப்புமிகு யாழ்ப்பாணம்
யாழ் நகரில் வனப்புமிக்கது என்று கடந்த காலத்தில் வர்ணிக்கப்பட்ட ஒரு பகுதியில் யாழ்ப்பாண கலாசார மையம் அமைந்திருக்கிறது. அந்த பகுதி வேறு பல முக்கியமான இடங்களையும் நிறுவனங்களையும் கட்டங்களையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி, நீதிமன்றங்கள், சென். பீற்றர்ஸ் தேவாலயம், ட்ரிம்மர் மண்டபம், றெஸற் ஹவுஸ், பீச் றோட்டின் பகுதிகள், முற்றவெளி, சுப்பிரமணியம் பூங்கா, அசோக் ஹோட்டல், திறந்தவெளி திரையரங்கு, நகர மண்டபம், கம்பீரமான தோற்றம் கொண்ட பொதுநூலகம், டச்சுக் கோட்டை, முனியப்பர் கோயில், புல்லுக்குளம்,றீகல் தியேட்டர், வீரசிங்கம் மண்டபம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவை அவற்றில் சிலவாகும்.
இனமோதல் தீவிரமடைந்ததை அடுத்து இந்த வனப்புமிகு பகுதி பாதிக்கப்பட்டது.. முதலில் பாதிக்கப்பட்டது 97 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிதான பனை ஓலைக் கையேடுகளைக் கொண்டிருந்த யாழ்ப்பாண பொது நூலகமேயாகும். அது 1981 ஜூன் முதலாம் திகதி பொலிஸாரினால் தீவைத்து எரிக்கப்பட்டது. ஆயுதப்படைகள் கோட்டைக்குள் இருந்த நடத்திய ஷெல் வீச்சுத் தாக்குதல்களினாலும் அந்த பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டது. பெருவாரியான கட்டிடங்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகம் நல்லூருக்கு மாற்றப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் வனப்புமிகுந்த இந்த முக்கியமான பாகம் போரின்போது அதன் பளபளப்பை இழந்தது. இப்போது அது படிப்படியாக முன்னைய புகழ்நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. நிர்மூலம் செய்யப்பட்ட பொதுநூலகத்தின் மீள்நிர்மாணம் சாம்பலில் இருந்து எழுந்ததை ஒத்ததாகும். அது மீள்எழுச்சி பெறுவதில் யாழ்ப்பாண மக்களுக்கு இருக்கும் ஆற்றலை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
பின்னர் அந்த வனப்பு மிகுந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 55 மீற்றர் உயரமான யாழ்ப்பாண கலாசார மையம் இலங்கை சூரியனின் கீழ் தனக்கு உரித்தான அந்தஸ்தை மீளப்பெறுவதற்கான "புதிய யாழ்ப்பாணத்தின்" துடிப்பான முயற்சியின் சின்னமாக விளங்குகிறது. யாழ்ப்பாண கலாசார மையமே யாழ். நகரில் மிகவும் உயர்ந்த கட்டடமாகும். முன்னர் திறந்தவெளியரங்கு இருந்த இடத்தில் அது நிர்மாணிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் பெருமை
ஒரு குறுகிய காலத்துக்கு இருந்த யாழ்ப்பாணத்தின் பெருமை "திராவிட" தமிழ்நாட்டை வென்றெடுப்பதற்கான நரேந்திர மோடியின் குறும்புகளுக்கு இப்போது பலியாகியிருக்கிறது. அதன் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது? இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதைப் பார்ப்போம்.
(திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்பதற்கு முன்னால் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் சேர்க்கப்பட்டு "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என்று பொறிக்கப்படுவதற்கு முன்னதாக இக்கட்டுரை எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment