ஊரோடு ஒன்றி வாழ்வாய்! --- அன்பு ஜெயா, சிட்னி பா வகை: சந்தக் கலி மண்டிலம் (விருத்தம்)

 

 

அடுத்திங்குமே வாழ்வோரையே அடியோடுநீ அறியாய்

கெடுதல்வரும் காலத்திலே கேட்டற்குமே யாரோ?

விடுப்பாயினி தனித்திங்குமே வீணாக்கிடும் வாழ்வை

அடுத்தோரிடம் இணைந்தேவாழ் அதிலேபயன் உண்டே! (1)

 

என்றென்றுமே நல்லோருடன் இணைந்திங்குமே வாழ்வாய்!

நன்றென்றுமே ஆன்றோருமே நயமாகவே உரைத்தார்!

பொன்றும்துணை என்றேயவர் புரிவார்களே உதவி!

அன்றேஉணர் வாய்நீயுமே ஆன்றோருரை உயர்வாய்!  (2)

 

பறக்கின்றதோர் பறவைக்குழு படையாகவே திரியும்,

உறவுக்கென ஓர்நாளிலே உன்னுள்ளமும் விரியும்;

உறவென்பதன் உயரின்பமே உன்வாழ்வினில் பெருக்கு!

உறவாகவே மற்றோரையும் உணர்ந்தால்பல மிருக்கு!  (3)

 

வேர்விட்டவோர் ஆல்போலநீ விழுதோடுமே வாழ்வாய்!

ஊர்போற்றநீ எப்போதுமே ஒன்றாகவே வாழ்வாய்!

நீர்போலவே தெளிவானதோர் நெஞ்சத்துடன் வாழ்வாய்!

பார்போற்றுமே, பகைநீக்கியே பார்தன்னிலே வாழ்வாய்! (4)

-------------------------------

 

 

 

No comments: