பிரிட்டன் தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி
ட்ரம்புக்கு குற்றவியல் வழக்குகளில் விலக்கு
காசாவில் புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸின் பதிலை ஆராய்கிறது இஸ்ரேல்
வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: பதிலுக்கு ஹமாஸ் ரொக்கெட் மழை
நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தம்: ரஷ்யாவிற்கு உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
பிரிட்டன் தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும்” எனத் தெரிவித்தார். அவர் வடக்கு இங்கிலாந்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லேபர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுக்குப் பிறகு அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 61 வயதான கீர் ஸ்டார்மர், பிரிட்டன் பிரதமராக பதவியேற்கிறார். நன்றி தினகரன்
ட்ரம்புக்கு குற்றவியல் வழக்குகளில் விலக்கு
அமெரிக்காவில் டொனல்ட் ட்ரம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் குற்றவியல் வழக்குகளிலிருந்து ஓரளவே விலக்குப் பெற்றிருப்பதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனையும் ட்ரம்புக்கு அது சட்டபூர்வமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
2020ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவை மாற்றியமைக்க ட்ரம் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பு முழுமையாக நிராகரிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு எதிரான வழக்கின் முக்கியக் கூறுகளை அது நீக்கியுள்ளது.
அதிகாரபூர்வச் செயல்பாடுகளில் ஜனாதிபதி விலக்குப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகாரபூர்வமற்ற செயல்பாடுகளில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மாபெரும் வெற்றி என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ட்ரம் தம்முடைய ட்ருத் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
காசாவில் புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸின் பதிலை ஆராய்கிறது இஸ்ரேல்
- தொடர்ந்தும் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்
காசாவில் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான புதிய போர் நிறுத்த முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தப் பேச்சுகள் ஸ்தம்பித்திருந்த நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் போர் நிறுத்தத்தை எட்டுவது உட்பட முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவு ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பிடம் இருந்து எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.
இந்த ஆவணத்தை இஸ்ரேல் ஆய்வு செய்து வருவதாக மொசாட் உளவு அமைப்பு சார்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் காசாவில் எஞ்சியுள்ள 120 பணயக்கைதிகளையும் விடுவிக்கும் முயற்சியில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றபோதும் அவர்களின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.
எந்த ஒரு உடன்படிக்கையும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. மறுபுறம் தற்காலிக போர் நிறுத்தத்தை மாத்திரமே ஏற்பதாகக் கூறும் இஸ்ரேல், ஹமாஸை ஒழிக்கும் வரை போரிடுவதாக கூறுகிறது.
இந்நிலையில் ‘அளிக்கப்பட்டிருக்கும் பதிலை இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாகவும் மத்தியஸ்தர்களுக்கு பதில் அளிப்பதாகவும்’ மொசாட் குறிப்பிட்டதோடு இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
எனினும் ஹமாஸின் புதிய நிலைப்பாடு குறித்து பேசுவதற்கு இஸ்ரேலிய பாதூப்பு அமைச்சரவை நேற்றுக் கூடியதோடு அதற்கு முன்னர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காசாவில் ஆட்சி புரியும் இஸ்லாமிய போராட்டக் குழுவான ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அதன் தலைவர் இஸ்மைல் ஹனியே, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களுடன் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான யோசனை பற்றி பேசியதாகவும் துருக்கி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் பதில் அளித்திருக்கும் புதிய போர் நிறுத்த முன்மொழிவில் அந்த அமைப்பின் முக்கிய கேரிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக லெபனானின் அல் அக்பர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்மொழிவு கட்டார், எகிப்து மற்றும் துருக்கியுடன் ஒருங்கிணைந்து அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் இரு கட்டங்களில் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவது, இஸ்ரேலியப் படைகள் (காசாவில் இருந்து) பின்வாங்குவது மற்றும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது உள்ளடக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில் போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கும் காசாவின் மீள் கட்டுமானம் மற்றும் கொல்லப்பட்ட பணயக்கைதிகளை திருப்பி அளித்தல் ஆகிய விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காசாவில் ஹமாஸ் ஆட்சியில் இருக்கின்ற போதும்கூட போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேலிய முன்னணி ஜெனரல்கள் விரும்புவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இராணுவத்திற்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலையை காட்டுவதாக உள்ளது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம் ஒன்றே இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு சிறந்த வழியாக இருப்பதாக இஸ்ரேலிய தளபதிகள் நம்புவதோடு இஸ்ரேலிய படையினர் மிதமிஞ்சிய சுமையை எதிர்கொள்வதோடு, வெடிபொருட்கள் தீர்ந்து வரும் நிலையில் லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் பரந்த அளவில் போர் ஒன்று வெடித்தால் படையினரை ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும் என்றும் அவர்கள் நம்புவதாக தற்போதை மற்றும் முன்னாள் ஆறு பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியாகியுள்ளது.
தெற்கு லெபனானில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னணி தளபதி ஒருவரான முஹமது நாசர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது அந்த அமைப்பு சரமாரி ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் புதிய போர் நிறுத்த முயற்சி குறித்து தற்போது இடம்பெயர்ந்து தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் தங்கி இருக்கும் இரு குழந்தைகளின் தந்தையான யூசப், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘இது போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நாம் நம்புகிறோம். நாம் களைப்படைந்திருக்கிறோம் தொடர்ந்தும் பின்னடைவுகள் மற்றும் ஏமாற்றங்களை எம்மால் தாங்க முடியாது’ என்றார்.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் கிழக்கு பகுதியில் இருந்த மக்களை வெளியேற இஸ்ரேல் கடந்த திங்களன்று உத்தரவிட்ட நிலையில் நேற்று (4) அங்கு செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்தப் பகுதிகளுக்கு டாங்கிகள் முன்னேறி வரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நகர் மற்றும் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இருந்து நேற்றும் பல பலஸ்தீனர்கள் அடைக்கலம் தேடி வருகின்றனர். கடந்த ஒக்டோபரில் வடக்கு காசாவில் இருந்து 1.1 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் இது மிகப்பெரிய வெளியேற்றமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கூடாரங்களை பெற முடியாத நிலையில் பல குடும்பங்களும் வீதிகளில் உறங்கி வருவதாக கான் யூனிஸ் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் பல பகுதிகளிலும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருவதோடு சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய காசா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் பனாத் குடும்பத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சியில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று காசா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள அல் கபி குடும்பத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து இடிபாடுகளில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நன்றி தினகரன்
வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: பதிலுக்கு ஹமாஸ் ரொக்கெட் மழை
காசாவில் உயிரிழப்பு 37,900 ஆக அதிகரிப்பு
இஸ்ரேலியப் படை வடக்கு காசாவின் ஷெஜையா பகுதியில் மேலும் முன்னேறியதோடு தெற்கில் ரபா நகரின் மத்திய மற்றும் மேற்கு பக்கமாக ஆழ ஊடுருவி வரும் நிலையில் காசாவில் இடம்பெறும் கடும் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் ஷெஜையாவை நோக்கி நகர்ந்த இஸ்ரேலிய டாங்கிகள், பல வீடுகளையும் இலக்கு வைத்து செல் குண்டுகளை வீசிய நிலையில் அங்குள்ள குடும்பகள் பலதும் நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதைத் தவிர மாற்று வழியில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
‘அனைத்து பணயக்கைதிகளையும் மீட்பது, காசா தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகாது என்பதை உறுதி செய்வது மற்றும் தெற்கு மற்றும் வடக்கில் உள்ள எமது குடிமக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்வது ஆகிய எமது நோக்கங்கள் அனைத்தையும் அடையும் வரை போராடுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களில் அவதானம் செலுத்தி வரும் அதேநேரம், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் துல்கர்ம் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் தமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காசா தொடர்பில் நெதன்யாகு கருத்து வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே ஹமாஸ் ஆயுதப் பிரிவு வெளியிட்ட வீடியோ ஒன்றில், போராட்டத்திற்காக ஆயுதங்கள் தயாரிக்கும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
இதில் போராளிகள் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட் குண்டுகளை தயாரிப்பதும் பின்னணியில் பெரிய தொலைக்காட்சி திரை ஒன்றில் அண்மைய செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருவதும் தெரிகிறது. இது இந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டது என்பதை காண்பிக்கிறது.
‘எமது தயார் நிலை தொடரும்’ என்று அந்த குறுகிய வீடியோ முடிவில் எழுதப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
ஷெஜையாவில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கையில் பல பலஸ்தீன ஆயுததாரிகளும் கடந்த சில நாட்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
எனினும் வடக்கு காசாவில் மேலும் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்படதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை (29) குறிப்பிட்டது.
ஷெஜையா மற்றும் ரபாவில் இஸ்ரேலிய படைக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் பிரிவு மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வருவதோடு அந்தப் போராளிகள் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் காசா போரில் இஸ்ரேலியப் படை அங்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருவதோடு முன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் கூறிய பகுதிகளிலும் மீண்டும் போர் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் இருந்து நேற்று தெற்கு இஸ்ரேலை நோக்கி குறைந்தது 20 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் சில ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாகவும் சிலது தாக்கியதாகவும் எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் இராணும் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களில் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 23 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,900 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 87,060 பேர் காயமடைந்துள்ளனர். அழிக்கப்பட்டிருக்கும் கட்டடங்களின் இடிபாடுகளில் கணிசமானவர்கள் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் கூறப்படும் எண்ணிக்கையை விடவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று நம்பப்படுகிறது.
55 பேர் விடுதலை
இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் தலைவர் முஹமது அபூ சல்மியா மற்றும் 55 பலஸ்தீனர்களை இஸ்ரேல் நேற்று விடுவித்தது. இஸ்ரேலிய சிறைகள் நிரம்பி இருக்கும் நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வானொலிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலியப் படை காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை கைது செய்ததோடு அதன் சரியான எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.
இதில் மருத்துவர் முஹமது அபூ சல்மியா கடந்த நவம்பர் மாதமே இஸ்ரேலியப் படையால் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் அடுத்தடுத்து நடத்திய சுற்றிவளைப்புகள் காரணமாக அல் ஷிபா மருத்துவமனை தற்போது சின்னபின்னமாகியுள்ளது.
தாம் மற்றும் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் கடுமையான சித்திரவதைக்கு முகம்கொடுத்ததாகவும் மோசமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சல்மியா தெரிவித்தார்.
‘எங்கள் கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் சகலவிதமான சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளனர். கிட்டத்தட்ட நாளாந்தம் சித்திரவதைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருந்தது. சிறைக் கூடுகள் உடைக்கப்பட்டு கைதிகள் தாக்கப்படுகிறார்கள்’ என்று விடுதலை பெற்று வந்த சல்மியா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சிறைக் காவலர்கள் தமது விரலை உடைத்ததாகவும் தடிகள் மற்றும் நாய்களை பயன்படுத்தி செய்த தாக்குதல்களால் தமது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
சல்மியாவும் விடுவிக்கப்பட்ட மற்ற கைதிகளும் கான் யூனிஸுக்கு கிழக்கே இஸ்ரேலில் இருந்து மீண்டும் காசாவிற்குள் நுழைந்ததாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் ஐவர் அக்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மற்றவர்கள் கான்யூனிஸில் உள்ள மருத்தவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக அது கூறியது.
சுகாதார அச்சுறுத்தல்
கடந்த பல மாதங்களாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் விட்டு விட்டு இடம்பெற்றபோதும் எந்த முன்னேற்றத்தையும் காண தவறியுள்ளன. அமெரிக்காவின் ஆதரவுடன் அரபு மத்தியஸ்தர்கள் உடன்பாடு ஒன்றை எட்ட முயற்சித்து வருகின்றபோதும் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியப் படை காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என ஹமாஸ் உறுதியாக உள்ளது. மறுபுறம் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை மாத்திரமே ஏற்பதாக கூறிவரும் இஸ்ரேல், 2007 தொடக்கம் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸை முழுமையாக ஒழிக்கப்போவதாக சூளுரைத்து வருகிறது.
2.4 மில்லியன் மக்கள் வசிக்கும் முற்றுகையில் உள்ள காசாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி மற்றும் பட்டினி அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிவாரண அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
கடந்த மே ஆரம்பத்தில் காசாவின் தென் முனை நகரான ரபாவில் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து காசாவுக்கான உதவிகள் வரும் எகிப்துடனான ரபா எல்லைக்கடவை மூடப்பட்டுள்ளது. தவிர காசாவுக்கு உதவி விநியோகத்திற்காக காசா துறைமுகத்தில் அமெரிக்கா அமைத்த தற்காலிக துறைமுகமும் கடல் கொந்தளிப்புக் காரணமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் போர் இஸ்ரேலிய வடக்கு எல்லையில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் இடையே நாளாந்தம் பரஸ்பரம் சண்டை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்கியுள்ள சமி ஹமித், ‘கடுமையான வெப்பம் மற்றும் போதிய சுத்தமான நீர் இல்லாத நிலையில் குறிப்பாக சிறுவர்களிடையே தோல் தொற்றுகள் அதிகரித்திருப்பதாக’ தெரிவித்துள்ளார்.
‘தோல் தொற்று சம்பவங்கள் குறிப்பாக சிரங்கு மற்றும் சின்னம்மை பாதிப்புகள் அதிகரித்திருப்பதோடு, கூடாரங்களுக்கு அருகில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஓடுவது ஈரல் அழற்சி பாதிப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும்’ என்று ஹமீத் கூறினார்.
கூடாரத்தில் சுத்தமான நீர் அல்லது அடிப்படை துப்புரவு பொருட்கள் இல்லை என்று காசா நகரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வபா எல்வான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தம்: ரஷ்யாவிற்கு உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ரஷ்யாவுடன் நடந்துவரும் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போரில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே, போர் நிறுத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது. ராஜதந்திர ரீதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. விரைவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உக்ரைனின் போர் நிறுத்த ஒப்பந்த திட்டம் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
நேட்டோஅமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆண்டு படையெடுத்தது. தற்போது உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும், ரஷ்யாவால் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பிராந்தியங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினர் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் கடந்த மாதம் முன்வைத்தார். அதில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களிலிருந்து அந்த நாட்டுப் படையினர் வெளியேறுவது, நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடுவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment