தேனான திருவாசகத்தை செப்பி நின்றார் வாதவூரர் !

 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .....அவுஸ்திரேலியா


   பக்தி இலக்கியம் என்னும் பொழுது அது எங்கள் தமிழ் மொழிக்கே


வாய்த்திருக்கிறது. ஏனைய மொழி களில் பக்திக்கு என்று தனியான இடம் கொடுத்து - அதனை இலக்கியமாய் ஆக்கவே இல்லை. அதற்கான முக்கியத்துவத்தையும் வழங்க வில்லை என்பதை மனமிருத்துவது அவசியமாகும். பக்தி இலக்கியத்தின் முன்னோடிகளாய் விளங்கும் - காரைக்கால் அம்மையார் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் , பின்னேதான் வாத வூரார் வருகின்றார். ஏனையவர்கள் பக்தி என்னும் வழியில் பயணப்பட்டவர்களே.அவர்கள் காலம் , அவர் கள் சூழல் , அவர்களின் வழியினை வகுத்துக் கொடுத்தது எனலாம். அவர்கள் அனைவருமே பக்தியின் உச் சத்தைத் தொட்டவர்களே ஆவர். இதில் எந்தவித கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அவர்களின் பின்னே வந்த வாதவூர் வண்டின் இறை அனுபவமும் , பக்தியின் நிலையும் , அதனால் வெளிவந்த பக்திப் புதைய ல்களும் சற்று வித்தியாசமானதாக அமைந்தது எனபதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

     தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற் றைய வண்டுகள் போன்ற தன்று.இவ் வண்டு திரு வாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடி நிற்க - வாதவூர் வண்டுவேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உய ரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல்லச் சொல்ல இனிக்கும் சொற் களால்  ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ".  இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவா சகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது. அது மட்டும் அல்ல - திரு வாசகத்தைத் தமிழ் வேதமாகவும் கொள்ளலாம். வடமொழியில்தான் வேதங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் வேதம் திருவாசகந்தான் என்பதை யாவரும் மனமிருத்து வது அவசியமாகும்.

   திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர்


என்றும் , மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும் அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும் தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டார்.அது மாத்தி ரம் அல்ல - சைவத்துக்கும் , பக்திக்கும் , தமிழுக்கும், என்றுமே ஒளிவிடும் மாணிக்கமாய் அவர் திகழ் கின் றமையாலும் மாணிக்க வாசகர் ஆகியே நிற்கிறார்.  

  அந்தணகுலத்தில் பிறந்து பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவ ரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமை யினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் - அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி " தென்னவன் பிரம்மரா யன் " என்னும் பட்டத்தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான்.

தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்

மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன் 
                                                                                 ( திருவாதவூரடிகள் புராணம் ) 

  வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் - மற்ற மன்னவர்களும் மதிக்கும் வண்ணம் ,அவருக்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபரணங்கள்பட்டுப் பீதாபரங்கள் சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடைமுத்திலான சிவிகைபொன்னாலான காப்பு சாமரையானை என்று அளித்து ஆனந்தம் அடைந்தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

   அதிகாரம் மிக்க பதவி ! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை!

எதையும் செய்யும் இருப்பிடம் ! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. புகழும் 
ஆடம்பரங் களும் நிலையாய் இருக்க மாட்டா என்னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் எனலாம். 
" ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் " எண்ணமே அவருள்ளத்தில் ஆழமாய் ஆணிவேராய் இருந்தது எனலாம். பற்றுகளைப் பற்றாதிருந்தார். பற்றுகளைப் பார்க்காதிருந்தார். தாமரை இலைத் தண்ணீராய் இருந்தார்.பதவியும் அந்தஸ்த்தும் , பட்டமும் , தன்னை நெருங்க விடாதவராய் இருந்தார் என்பதை விட வாழ் ந்தார் என்பதே மிக மிக பொருத்தமானதாகும்.

  அமைச்சராய் அமர்ந்த படியால் அரசன் கட்டளையினை ஏற்று நடக்கும் நிலையும் உருவாகியது. திரும் பெருந்துறையில் நல்ல அரோபியக் குதிரைகள் வந்திருப்பதாயும் அதனைப் பார்த்து வாங்கி வரும்படியும் திரவியங்களை அரசன் அமைச்சரான வாதவூரரிடம் கொடுக்கிறான். அமைச்சரான வாதவூரரும் குதிரை களை வாங்குவதற்கு செல்கிறார். அங்கு அவர் குருந்தமர நிழலில் ஒரு ஆனந்தப் பேரொளியினைக் காணு கிறார்.தன்னை மறக்கிறார். தான் வந்த பணியை மறக்கிறார். அந்த ஞான ஒளியுடை மகானின் திருவடி யில் சங்கமம் ஆகிறார்.இதைத்தான் பிறவிப் பயன் என்பதோ என்று எண்ணிட வைக்கி றதல்லவா ! நல்வினை தொடர்ந்தால் நல்லதே நடக்கும்.வல்வினை அறுந்து வாழ்வது சிறக்கும் ! 

  குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் நீண்டநாள் வராதபடியால் அரசன் தூதுவர்களை அனுப்பி நிலைமை யினப் பார்த்துவருமாறு பணிக்கிறான் சென்ற தூதுவர்கள் வாதவூரரின் நிலையினை மன்னனிடம் தெரிவி க்கவே மன்னவன் அடங்காச் சினங் கொள்ளுகிறான்.சினத்தால் வாதவூரருக்குத் தண்டனை கொடுக்கி றான். 
     அமைச்சராய் இருப்பவர் பொறுப்பின்றி நடப்பது முறையா ? அரசன் குதிரைகள் வாங்கக் கொடுத்த பொருளை எல்லாம் அறப்பணிகள் ஆற்றிட செலவழித்தமை ஏற்கத் தகுந்ததா ? கடமையை , பொறுப்பை தட்டிக் கழிக்கலாமா ? என்றெல்லாம் கேழ்விகள் எழுகின்றன அல்லவா ! அரசன் என்பவன் - இன்னார் , இனி யார் என்று பாராமல் நீதி வழங்குதல் முறைதானே. தனது கட் டளையினை உதாசீனம் செய்த வாதவூரருக் குத் தண்டனை வழங்கியதை எப்படிக் குற்றம் என்று எடுத்துக் கொள்ளுவது. இது ஒரு சிக்கலான கட்டம். அர சன் மனநிலை அமைச்சரான வாதவூரரிடம் இருக்கவே இல்லை. அரசன் இவ்வுலகில் இருந்தான். ஆனால் அமைச்சரான வாதவூரர் இவ்வுலகை மறந்தார். அவருக்கு முன்னே ஆண்டவன் பேருவே தென்பட்டது. ஆண் டவன் அருட் கடலினுள் அமிழ்ந்தே விட்டார். அதனால் குதிரை வாங்க வந்ததோ , தான் பான்டிய மன்னனின் அமைச்சரோ என்பதை யெல்லாம் அவர் மறந்தே விட்டார். கூட வந்தவர்கள் திகைத்தனர். மீண்டும் மீண்டும் வந்த பணியை இடுத்துரைத்தனர். அப்பொழுதான் தன்னிலைக்கு வந்த வாதவூரர் வந்த வேலையினை மன ங்கொண்டார். உலகினை மறந்திருந்த வாதவூரர் அந்தப் பரம்பொருளிடம் அடைக்கலமாகிறார். அடியவனு க்கு ஆண்டவன் அருளினான்.
 ஆண்டவனின் ஆணைப்படி - " ஆவணி மூலத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்த குதிரைகள் வரும் என்று " அர சனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாதவூரர் மொழிகின்றார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வரு கின்றன. அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஆனால் வந்த குதிரைகள் அனைத்துமே அன்றி ரவு நரிகளாய் மாறிவிட்டன. அரசன் ஆத்திரம் மேலோங்குகிறது. வாதவூரரை சிறையில் அடைக்கின்றான் . உயரிய பதவியைக் கொடுத்த அரசனே அவரை திரவியங்களை அபகரித்த குற்றவாளியாக்குகிறான். வாத வூரர் துன்பம் படைத்தவனுக்குப் பொறுக்கவில்லை . வைகை ஆறு பெருக்கெடுக்கிறது. அரசன் திகைக்கி றான். பெருகிவரும் நீரைத்தடுக்க நாட்டுமக்களுக்கு அரசன் ஆணையிடுகிறான். 
     பலரும் தமக்கான பங்கினை செய்கிறார்கள் . ஆனால் பிட்டவித்து பிழைப்பு நடத்தும் செம்மனச் செல்வி என்னும் மூதாட்டிக்கு உதவிட யாருமே இல்லாதிருந்தது. அவ்வேளை எம்பெருமானே வேலையாளாய் வரு கிறார். ஒழுங்காய் வேலை பார்க்காத காரணத்தால் அரசனின் காவலர்கள் பிரம்படிக்கு ஆளாகிறார் ஆதி அந்தமில்லா அந்த அரும்பொரும் ஜோதி.

    பரம்பொருளின் முதுகில் விழுந்த அடி அரசனின் முதுகில் விழுந்தது. அனைவருக்கும் விழுந்தது. அரசன்  தனை மறந்து தவறை உணர்ந்து தண்டனிட்டு வணங்கினான். என்ன நல்ல கதையாக இருக்கிறதா ! இது கதை அல்ல வாதவூரர் வரலாற்றில் இவற்றைக் காணுகிறோம்.

 
 முதலில் அரசன் வாதவூரருக்குத் தண்டனை வழங்கிச் சிறைப்படுத்தி துன்பத்துக்கு ஆழாக்கிய வேளை ஆண்டவன் ஏன் தடுக்கவில்லை ? இரண்டாந்தரம் தண்டனை கொடுத்த பொழுது - வைகை ஆற்றினைப் பெருக் கெடுக்கெடுக்கச் செய்து , பாண்டிய நாட்டினையே கதிகலங்கச் செய்து , தானே கூலியாளாய் வந்து , பிட்டுக்காய் மண் சுமந்து பிரம்படி வாங்கியதும் ஆச்சரியமாய் தோன்றுகிறதல்லவா ? பொறுப்பின்றி நட ந்ததால் வாதவூரருக்கு கிடைத்த முதல் தண்டனையை ஆண்டவன் பொருத்தமானது எனக் கருதியதால் எது வுமே செய்யாதிருந்திட்டான். இரண்டாந்தரம் தனது அன்பனுக்கு வழங்கிய தண்டனை ஏற்றதல்ல என இறை வன் கருதியதால் இப்படியாய் ஆகியதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா! அடியவன் வருந்தி னால் ஆண்ட வன் அணைத்திட வந்திடுவான் என்பதே இதன் தத்துவம் எனக் கொள்ளலாம் அல்லவா !  

  கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க

  காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
  வில்லால் ஒருவன் அடிக்க
  வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க 
  தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
  தாழ்வெல்லாம் வருமோ ஐயா 

என்று ஒரு பக்தர் பாடுவதாய் அமைந்த பாடலை இவ்வேளை நினைவில் வைப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா ?

முதுகில் அடிவிழுந்ததும் அரசனுக்கு ஆணவம் அகன்று தெளிவு பிறந்தது. வாதவூரருக்கு பலவகையில் உதவிட அரசன் முன்வந்தான். ஆனால் வாதவூரரோ தாம் துறவறத்தையே நாடுவதாகக் கூறினார். அரசனும் வாதவூரர் வழியினைப் பெருவழியென ஏற்றுக் கொண்டான்.

  மனிதன் என்பவன் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பொழுது அத்துறைக்கு ராஜன் ஆகிறான். பாண்டிய மன்னன் அவையில் அமைச்சர் ஆனதால் வாதவூரர் புவிராஜனாகிறார். தித்திக்கும் திருவாச கத்தை அளித்ததமையால் கவிஜாரன் ஆகிறார். அவரின் பக்தியுடை வாழ்வால் அவர் தவராஜனாகிறார். பல சிறப்புக்களைப் பெற்ற வாதவூரர் நிறைவில் நடராஜனுக்கே உரியவராய் திகழ்கிறார் எனலாம்.

  வாதவூரர் வண்டாய் பறந்தார். அந்த வண்டு " திருவாசகம் " என்னும் தேன் கூட்டையும் " திருக்கோவையார் " என்னும் தேன் கூட்டையும் கட்டி நாமனைவரும் நாளும் பொழுதும் வேண்டிய தேனைப்பெற்று சுவைத்திட வழி சமைத்திருக்கிறது எனலாம்.

உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து

முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

என்னும் வேண்டுகளை வாதவூர் வண்டு இறைவனிடம் சொல்லுகிறது.இது தெவிட்டாத் தேனாகி இனிக்கிற தல்லவா !

   திருவாசகமென்னும் தேன் பருகினார் ஒரு அடியவர். அவரால் தனது உணர்வினை வெளிப்படுத்த சொற்க ளைத் தேடுகிறார்.அவர் தேடியதை அளிக்கிறார் பருகுவோம் வாருங்கள்..

வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே -   இப்படிச் சுவைத்தவர்தான் வள்ளல் பெருமான்.

  வாதவூர் வண்டு மலர்கள்தோறும் எடுத்தவந்த தேனால் ஆக்கப்பட்ட திரு வாசகத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் சுவைத்து மகிழ்வது பெருமைதான். ஆனால் தமிழ் அறியா ஒருவர் எங்கள் சைவம் சாரா ஒருவர்,   அதுவும் ஆசிய நாட்டைச் சேராத ஒருவர் ,ஆங்கில நாட்டை சேர்ந்த ஒருவர் கிறீத்தவ பாதிரியாரானவர் திருவாசகமென்னும் தேனைத் தொட்டதும் தன்னை மறந்தார். அந்தத் தேன்கூட்டுக்குள்ளேயே புகுந்து தேனை மாந்திக் கொண்டே இருந்தார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா !

  சிவனை முழுமுதற் கடவுளாகப் பாடி உருகிடும் திருவாசகம் என்னும் தேன் - ஒரு கிறீத்தவ  அருட் தந்தை யை எப்படிக் கவரமுடியும் இது ஒரு முரண்பட்ட நிலையாகத் தெரிகிறது அல்லவா ! இறைவன் என்பவன் ஒருவனே. திருவாசகத்தில் " சிவனாக " காட்சியளிக்கும் ஆண்டவன்தான் - பரமண்டலத்தில் வீற்றிருக்கும் பிதாவாக கிறீத்தவ அருட்தந்தை ஜி.யூ போப் அவர்களின் உள் ளத்தில் பதிந்திருக்கலாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தேனை மொழிபெயர்த்து அனைவருமே பயனுறச் செய்தார் எனலாம்.இலண்டன் மாந கரில் கிறீத்தவ தேவாலயத்தில் முழந்தாளிட்டு செபம் செய்யும் வேளை தன்னருகில் மாணிக்கவாச கரும் செபம் செய்வதாக தான் உணர்ந்ததை  - திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் பதிவிட்டு ள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதுவே சமயங்கடந்த பக்தி நிலை எனலாம்.இதனை வாதவூர் வண்டின் திருவாசகம் என்னும் தேன் செய்திருக்கிறது. மணிவாசகரின் இரக்கமும் , உருக்கமும் , தன்னை மிகவும் கீழாயும் , இறையே எல்லாவற்றுக் கும் மேலாகவும் , எண்ணி நின்று திருவாசகம் என்னும் தெவிட் டாத் தேனைத் தந்த பாங்கே மாற்று மதத்தவரான கிறீத்தவ பாதிரியாரையும் உருக வைத்ததது , திருவாச கத்தைப் பருக வைத்தது எனலாம். இஸ்லாமிய அன்பர்கள் கூட திருவாசகத்தை நேசிக்கிறார்கள். அதன் உருக்கப் பார்வையினை உள் வாங்குகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. திருவாசகம் என்னும் அரிய பொக்கிஷம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்திருதுவது அவசிய மானதாகும். 

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
கோகழியாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க 

என்று இறைவனுக்கே  வாழ்த்துக் கூறுகிறார் வாதவூர் வள்ளல் அவர்கள். வாழ்த்துக் கூறியவர் யாவருக்கும் நல் வழியாய் , நல் அறிவுரையாய் எம்மையும் நாளுமே இறைவனை வாழ்த்திப் பாடுங்கள் என்று முன்மா திரியாய் விளங்கு கின்றார் அல்லவா !


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீங்கும் !                                           
அல்லல் அறுபடும் ! ஆனந்தம் பெருகும் !                                                 
அத்துடன் மருவா நெறியும் அளிக்கும் ! 
எது தெரியுமா " திருவாசகம் என்னும் தேன் " . இது வெறும் கூற்று அன்று , ஆன்மீகத்தின் உச்சம் ! ஆன்மீக வழி நடப்பார்க்கு அருங்கலம் ! தத்துவத்தின் உயர் தத்துவம் ஆகும் என்பதே மிக மிகப் பொருத்தமாகும்.                 
  திருவாசகம் என்னும் பொக்கிஷம் தமிழில் அமைந்ததால் தமிழுக்கே மிகப் பெருமை எனலாம். தத்துவத்து க்குத் தத்துவமாய் அமைகிறது. இலக்கிய இன்பங்களை அளிக்கும் இன்னமுதாயும் அமைகிறது. சொற் சுவை மிக்கது. பொருட்சுவை மிக்கது.கற்றவர்க் கெல்லாம் கருத்துக் கருவூலமாகவும் திகழ்கிறது. பாடுவார் க்குப் பரவசத்தை அளிக்கிறது. படிக்கப் படிக்க சுவையாய் தேனாய் தித்திக்கிறது. மூவரின் திரு முறைகள் , ஆழ்வார்கள் அருள்மொழிப் பாடல்கள், பொருள் பொதிந்தவைதான். சொற்சுவை , பொருட் சுவை, பக்தி , தத்துவம் , இரக்கம் , கருணை , அத்தனையும் நிறைந்தவைதான். ஆனால் வாதவூர் வள்ளல் மணிவாசகப் பெருமான் அளித்த " திருவாசகம் " என்னும் தேன்தான், உயர்ந்தோங்கி நிற்கிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. ஆளுமைகள் அனைவருமே மேற்கோள் காட்ட தேடும் இடமும் , நாடும் இட மும் வாதவூர் வள்ளலின் " திருவாசகத்தேனையே ஆகும் " . திருவாசகம் என்பது எமக்கெல்லாம் ஏன் இந்த மாநிலத்துக்கே வாய்த்திட்ட பெரு வரமே ஆகும். அந்த வரத்தை எமக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வழங்கிய வாதவூர் வள்ளல் மணிவாசகப் பெருமானை ஏற்றுவோம் போற்றுவோம் இதயத்தில் இருத்துவோம். நாளும் பொழுது ம் திருவாசகத்தை ஓதுவோம். உள்ளொளி பெருக்குவோம். உயர் நிலை எய்துவோம்.

                         வாதவூர் அடிகளார் வளங்கிய வாசகத்தை
                         ஆழமாய் அகமிருத்தி அனைவரும் ஓதுவோம்
                         காதலாய் அணுகுவோம் கனிவுடன் பாடுவோம்
                         கண்ணுங் கருத்துமாய் எண்ணியே போற்றுவோம் 

                         செந்தமிழ்த் தேனாக வந்த திருவாசகத்தை
                         சந்தததும் ஓதுவோம் சந்ததி தளைத்தோங்கும்
                         அந்தமில் ஆனந்தம் அகமெலாம் ஊற்றெடுக்கும்
                         அரனாரே விரும்பிய ஆனந்தத்தேன் திருவாசகம்

 
                        கற்கண்டாய் தேனாய் கரும்பின் சாறாய்
                        தித்திக்க தித்திக்க திருவாசக மீந்த
                        பக்தி வழிசென்ற பரமனின் அடியார்
                        வாதவூர் பிறந்தாரை மனமாரப் போற்றுவோம்




No comments: