“ ஏய் மனுஷன் “ ( அபுனைவு சித்திரம் ) முருகபூபதி


முப்பத்தியைந்து வருடங்களாக நானும்  நீரிழிவு உபாதையில் சிக்கியிருக்கின்றேன்.  காலங்கள்  மாறிக்கொண்டிருப்பதுபோன்றும், மனிதர்களின் குணங்கள் மாறுவது போன்றும்,  எனக்கு மருத்துவர்களினால் தரப்பட்ட மருந்து – மாத்திரைகளின் பெயர்களும் மாறிக்கொண்டிருக்கின்றன.

மருத்துவர்களும் மாறிவிட்டார்கள். ஆனால், நீரிழிவு உபாதை மாத்திரம் என்னை விட்டுச்செல்லாமல்,  என்னுடனேயே நிரந்தரமாகிவிட்டது.

கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக இன்சுலின் ஊசியும் காலையும்,


இரவும் ஏற்றிக்கொண்டிருக்கின்றேன்.  குறிப்பிட்ட இன்சுலின் ஊசி மருந்தின் பெயர்களும் காலத்திற்குக் காலம் மாறிவிட்டது.

தினமும்  ஒரு மணிநேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வருவதும், போவதுமாக என்னுடனேயே தங்கியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக  நடு இரவில், எனது உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்துவிடுகிறது. அவ்வாறு குறைவதை உறக்கத்திலிருக்கும்போதே உணர முடிகிறது.   இதுபற்றி எனது மருத்துவரிடமும்   Diabetic Educator , Dieticians ஆகியோரிடமும் சொன்னபோது,  படுக்கையருகில் ஜெலிபீன்ஸ்  இனிப்பு வைத்துக்கொள்ளுமாறு பணித்தார்கள்.  பயணங்களின்போதும் கைவசம் கொண்டு செல்லவேண்டும் என்றார்கள்.

இன்சுலின் ஊசியையும் அதற்கான மருந்தையும் எப்போதும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கவும் வேண்டும்.  வெளியூர், வெளிநாட்டு பயணங்களின்போதும், அதற்கென வாங்கியிருக்கும் பிரத்தியேக  பையில், ஐஸ்பேக்குடன் , ஊசியையும் மருந்தையும் வைத்து எடுத்துச்செல்லவேண்டும்.

விமானத்தில் ஏறியதும்,  பணிப்பெண்களிடம் எனது நிலைமையைச் சொல்லி, குறிப்பிட்ட இன்சுலின் பேக்கை விமானத்திலிருக்கும் குளிர்சாதனைப் பெட்டியில் வைக்குமாறு கொடுக்கவேண்டும்.

அவ்வாறு கொடுப்பதுகூட சிக்கல் இல்லை. இறங்கவேண்டிய நாட்டில்  விமானத்தைவிட்டு வெளியே வருமுன்னர்,  ஞாபகம் வைத்து குறிப்பிட்ட இன்சுலின் பேக்கையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

எல்லாம் எதற்காக..? உயிர் வாழ்வதற்குத்தான்.

எனது நீண்ட கால நண்பர் ஒருவர் பிரபல எழுத்தாளர். இலக்கிய  மொழிபெயர்ப்பாளர்.  கொழும்பில் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவிலும், பின்னர் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும்  இருந்தார்.

அவரது பெயர் ராஜஶ்ரீகாந்தன்.  2004 ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கும் நீரிழிவு உபாதை இருந்தது.  எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினகரன் வெளிவந்த ஏரிக்கரை இல்லத்தில் ( Lake house ) மற்றும் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஊடகவியலாளர்,  ராஜஶ்ரீகாந்தனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச்சென்றார்.

சென்றவர்,    அடே மச்சான், நீ… குடிக்கமாட்டாய்,  சிகரட் புகைக்கமாட்டாய், வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.  நீ.. உனது வாழ்க்கையை என்னைப்போன்று அனுபவிக்கவுமில்லை.  வாழ்ந்து என்னத்தை கண்டாய்.. செத்துப்போ..?  “ என்று வேடிக்கையாகச்சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.

இந்தத் தகவலை, வீடு திரும்பியபின்னர் ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த பத்திரிகை உலக நண்பர் சொன்னவாறே ராஜஶ்ரீகாந்தனும் அந்த ஆண்டு திடீரென மறைந்துவிட்டார்.

ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற புத்தகத்தையும் நான் எழுதி வெளியிட்டேன்.

எனது தாத்தா – பாட்டி காலத்தில் பேசுபொருளாக இல்லாத நோய்நொடிகள் யாவும் தற்போது புழக்கத்தில் வந்துவிட்டன.

1988 ஆம் ஆண்டு எனக்கு சிறிய மாரடைப்பு வந்தது.  மெல்பன் றோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் தேறிவந்தேன். அந்த அனுபவத்தைப்பற்றி முதல் சோதனை என்ற சிறுகதையும் எழுதினன். அப்போது பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு வார இதழில் அச்சிறுகதை வெளியானது.

பின்னர் 2003 ஆம் ஆண்டு ஒரு நாள் நடு இரவு மாரடைப்பு வந்தது.  மெல்பனில் எப்பிங் என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் Northern Hospital  இல் அனுமதிக்கப்பட்டேன்.   தீவிர கண்காணிப்பிலிருந்தேன். மறுநாள் நடு இரவு மீண்டும் மாரடைப்பு வந்து என்னை துயில் எழுப்பியது.

அந்த மருத்துவமனையில் Angiogram செய்யும் வசதிகள் அப்போது இருக்கவில்லை. என்னை மறுநாள் அம்பூலன்ஸில் மற்றும் ஒரு பிரபல மருத்துமனையான Austin Hospital இற்கு அனுப்பினார்கள்.

குறிப்பிட்ட Angiogram பரிசோதனையில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  என்னிடம் மருத்துவ காப்புறுதி இல்லாதமையால்,  உடனடியாக பைபாஸ் சத்திர சிகிச்சை நடக்கவில்லை.

ஆனால், அந்த சிகிச்சை எத்தகையது ..? என்று மருத்துவர்களும் தாதியரும் எனக்கு பாடம் நடத்தினார்கள்.  சில சமயங்களில் Angiogram பரிசோதனையின்போது நோயாளி இறந்துவிடவும் கூடும் என்றும்  எச்சரித்தார்கள்.

இதுபற்றி நான் மனைவியிடம் சொன்னபோது, அவர் அழத் தொடங்கிவிட்டார்.

அந்தச்  சூழ்நிலையிலும் எனக்கு நகைச்சுவை உணர்வுதான் மேலோங்கியது.

 “ பைபாஸ் சத்திர சிகிச்சை சற்று தாமதிப்பது எனக்கு ஆறுதல் தருகிறது  “ என்றேன்.

 “ ஏன்..?    என்று மனைவி கேட்டார்.

 “ மார்பை வெட்டிப்பிளந்து இருதயத்தில் சிகிச்சை செய்வார்கள். அப்போது இருதயத்தில் குடியிருக்கும் எனது முன்னாள் காதலிகளின் உருவம் அவர்களுத் தெரிந்து,  உமக்கு சொல்லிவிடுவார்களோ…!?  “ என்ற கவலைதான் வருகிறது. சத்திர சிகிச்சை தாமதிக்கும் காலப்பகுதியில், அவர்களை இதயத்திலிருந்து முற்றாக விரட்டிவிடலாம் அல்லவா..?   “ என்றேன்.

அழுகையை அடக்கிக்கொண்ட மனைவி,  “ உங்களுக்கு என்ன விசரா..? அப்படியும் உருவங்கள் தெரியுமா..?  “ என்றார்.

 “ இந்தக்கவிஞர்கள் காதலிகளை வர்ணிக்கும்போது, Sweet Heart என்பதை இதயக்கனி, உள்ளக்கமலம், இதயக்கோயில் என்றெல்லாம்  பொதுவாக அழைக்கிறார்களே. நானும் அவ்வாறு பலருக்கு சொல்லியிருக்கலாம் அல்லவா..?   என்றேன்.

 “ உந்த மனுஷனுக்கு பேசுவதற்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை  “ என்று அப்போது சொன்ன மனைவி, அதன்பின்னர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக என்னை மனுஷன் என்றுதான் அழைத்து வருகிறார்.

அந்த 2003 ஆம் ஆண்டு நடந்த பைபாஸ் சத்திரசிகிச்சையின்போது நடந்த அமர்க்களங்கள் பற்றியும் ஒரு சுவாரசியமான சிறுகதை எழுதினேன். நம்பிக்கை என்ற தலைப்பில் அந்தக்கதை மல்லிகை இதழில் வெளிவந்தது.

மனுஷன் என்ற சொற்பதம் பற்றியும் ஒரு புனைவுசாராத ஆக்கம் எழுதியிருக்கின்றேன். யாதும் ஊரே   என்ற அந்த ஆக்கம் எனது சொல்லவேண்டிய கதை தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த நூல் இலங்கையில் எங்கள் நீர்கொழும்பூரில் வெளியிடப்பட்டபோது, உரையாற்றிய எனது மனைவி மாலதியின் ஒரு மாணவி  செல்வி பாமினி செல்லத்துரை இவ்வாறு கூறினார்:.

‘யாதும் ஊரே’ கதையில் ஓரிடத்தில் மனைவி பற்றி குறிப்பிடும் போது ‘முதலில் அத்தான் என்றாள். சிறிது காலத்தில் அப்பா என்றாள். இப்போது மனுஷன் என்கிறாள்’ எனக்கவலைப்படுகிறார். ஆனால்,  எனக்கு தோன்றுவது என்னவென்றால்,  மணம் முடித்ததும் முருகபூபதி ஐயா அவர்களின் அன்பை மட்டும் மனைவி அறிந்திருப்பார் அதனால் அத்தான் என்றார். பின்பு இவருள் நிறைந்துள்ள தாய்மை உணர்வை அறிந்திருப்பார்.  அதனால் அம்மாவின் ஆண்பால் எனும் அர்த்தத்தில் அப்பா என்றார். அதன்பின்பு முருகபூபதி ஐயா அவர்களின் மனம் முழுதும் நிறைந்துள்ள மனிதத்தன்மையை அறிந்திருப்பார் அதனால் மனுஷன் என விளிக்கிறார். ஐயாவின்  மனைவி எனது ஆசிரியர். அதுவும் பட்டதாரி தமிழாசிரியர். ஒரு தமிழாசிரியர் காரண காரியம் அறியாமலா பெயர் வைத்திருப்பார்? 

குறிப்பிட்ட மாணவி தற்போது கொழும்பில் பரீட்சைத்திணைக்களத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றுகிறார்.

எனக்கு மீண்டும் 2020 ஆம் ஆண்டு  ஒருநாள் நடு இரவில் மற்றும் ஒரு மாரடைப்பு வந்தது.  அப்போது கோவிட் பெருந்தொற்றுக்காலம்.  அழைத்தவுடன் அம்புலன்ஸ் வந்தது.  

நாம் தற்போது வதியும் மோர்வல் என்ற புறநகரத்திற்கு அருகாமையிலிருக்கும் Latrobe Regional Hospital  இற்கு அழைத்துச்சென்றார்கள். மனைவி உடன் வரவில்லை .

இந்த மருத்துவமனையிலும் அப்போது  Angiogram செய்யும் வசதிகள் இருக்கவில்லை. ஒரு நாள் முழுவதும் கண்காணிப்பில் வைத்திருந்துவிட்டு, மீண்டும் மற்றும் ஒரு அம்பூலன்ஸில் மெல்பன் மாநகரத்திலிருக்கும் பிரபல  Alfred Hospital இற்கு அழைத்துச்சென்றார்கள்.

இவ்வாறு  வீடும் மருத்துவமனைகளுமாக அலைந்துகொண்டுதான், எனது பொது வேலைகளையும், எழுத்துப்பணிகளையும் உற்சாகமுடன் மேற்கொள்கின்றேன்.

Alfred Hospital  இல் மீண்டும் ஒரு Angiogram.  இதயத்திற்குச்செல்லும் நாடிகளில் சிறிய அடைப்புகள் இருக்கின்றன  எனச் சொல்லி, இரத்தத்தின் செறிவை குறைக்கும்  ( Blood thinner ) மருந்துகளைத்தந்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதன்பின்னரும் இந்த வண்டி,  சிக்கல் ஏதும் இன்றி ஓடிக்கொண்டுதானிருந்தது. 

எனினும்,  பழைய வண்டிகள் அடிக்கடி கராஜ் பக்கம் திருத்தவேலைகளுக்கு செல்வதும் வழக்கம்தானே..?!

கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மூன்று மாத காலம் எனது தாயகம் உட்பட  ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன்.  மெல்பன் திரும்பியதும் தாமதியாமல்,  சிட்னியில் நடந்த எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 23 ஆவது தமிழ்  எழுத்தாளர் விழாவுக்கும் சென்று திரும்பினேன்.

மீண்டும் அவ்வப்போது,  மார்பில் அடைப்பு இருப்பதுபோன்ற உணர்வு வந்துகொண்டே இருந்தது. மருத்துவரிடம் சென்றேன். அவர் தாமதிக்காமல் Latrobe Regional Hospital  இற்கு அனுப்பினார்.

ஒருநாள் முழுவதும் வைத்திருந்துவிட்டு,  இருதய சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார்கள். அவர் தெரிவுசெய்த திகதியில் மீண்டும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

மீண்டும் மற்றும் ஒரு Angiogram பரிசோதனை. இம்முறை நான்கு அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் இரண்டு,  95 வீதம்  அடைத்திருந்ததாம். உடனடியாக நான்கு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.

இவ்வாறு  எமது தாயகத்திலிருந்து மெல்பனுக்கு வந்த காலம் முதல் ஒவ்வொரு மருத்துவமனைகளையும் பார்த்து,  அழையா விருந்தாளியாக இருந்துவிட்டு வருகின்றேன்.

 என்னை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், தாதியருக்கும் வாழ்நாள் பூராவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அவர்களின் சேவை பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டியது.  ஆனால், அவர்கள் பொன்னாடைகளோ , புகழாரங்களோ , பட்டங்களோ , அங்கீகாரங்களோ எதிர்பார்க்காமல் தங்கள் பணிகளை தொடருகின்றார்கள்.

ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நான் மறுத்துவமனையில்  அனுமதிக்கப்படும்போதும் ஒரு சிக்கலையும் நான் சந்தித்து வருகின்றேன். அது எனது முழுப்பெயர் சம்பந்தப்பட்ட விவகாரம்.

Letchumanan Murugapoopathy இதனை உச்சரிப்பதற்கு தாதிமார் சிரமப்படுகின்றனர்.  அதனால், சுருக்கி,  Pathy என்று என்னை அழைக்கச்சொல்வதும் வழக்கமாகிவிட்டது.

எனது பிள்ளைகளும் மருமக்களும் கூட சில சமயங்களில் என்னை அவ்வாறுதான் செல்லமாக அழைப்பார்கள்.

ஆனால், மனைவி மாத்திரம் இப்பொழுதும் என்னை  “ ஏய் மனுஷன் “ என்றுதான் அழைக்கிறார். 

இம்முறை Latrobe Regional Hospital   இல் சிகிச்சை நடந்தபோது,  பகல் முழுவதும் என்னை கண்காணித்துக்கொண்டிருந்த  மருத்துவ தாதி, என்னை அடிக்கடி Gentle Man என்றே அழைத்தார்.

இரவானதும் பணியிலிருந்து வீடு திரும்பு முன்னர், இரவுக்கடமைக்கு வந்த மற்றும் ஒரு தாதியிடம் எனக்கு நடந்த சிகிச்சைகள் பற்றிச்சொல்லி,  இரவில் எத்தகைய கண்காணிப்புகள் அவசியம் என்பதையும் சொன்னார்.

இரவுக்கடமைக்கு வந்த அந்தத் தாதி, எனது சிகிச்சைகள் மற்றும் மருத்துவ அட்டவணைகள் அடங்கிய பெரிய கோவையை கையில் எடுத்து, எனது பெயரை உச்சரிக்க சிரமப்பட்டார்.

 “ மிகவும் நீளமான பெயர்.      என்றார்.

நான் சிரித்துக்கொண்டே,  “ சிட்னி ரோட்டை விட நீளம் குறைவுதான் . “ என்றேன்.

இரண்டு தாதியரும் சிரித்தனர்.

இரவுக்கடமைக்கு வந்த அந்தத் தாதி,   “ இவ்வளவு நீளமான பெயராக இருக்கிறதே… உமது மனைவி உம்மை எவ்வாறு அழைக்கிறார்..?  “ எனக்கேட்டார்.

 “ ஏய் மனுஷன்  “ என்றுதான் அழைக்கிறார் என்றேன்.

 “ அதன் அர்த்தம் என்ன..?  “ எனக்கேட்டார்.

 “ ஏய் என்றால் Gentle.  மனுஷன் என்றால்  Man.  என்றேன்.

இரண்டு தாதியரும் , “ Tamil and English Similar. என்றனர்.

வாழ்க தமிழ். வாழ்க ஆங்கிலம்.

---0---

( நன்றி: பூமராங் கலாண்டு மின்னிதழ் )

 

 

 

 

 

 

No comments: