கடந்த
ஜூன் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில்
அமைந்துள்ள கொலிற்றன் பள்ளி மண்டபத்தில் மாலை 3 மணிக்குக் குறித்த நேரத்தில்
ஆரம்பமாகிக் கச்சிதமாக நடைபெற்ற நிகழ்வாக அமைந்தது.
இந்த
நூல் வெளியீட்டு விழாவில் மங்கல விளக்கேற்றலை திரு.திருமதி முரளீதரன் தயாளினி
தம்பதியினர் மற்றும் காந்தரூபன் ஜென்சி தம்பதியினர் தொடக்கி வைக்க,
எம் உறவுகளின் ஈகையை நினைத்து அக
வணக்கத்தோடு தொடர்ந்தது.
இந்த விழா நிகழ்வு மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி
நிலையத்தின் அநுசரணையில் நடைபெற்றது முன்னுதாரணமான செயற்பாடாக அமைந்தது. வெறுமனே
தமிழ் கற்பிக்கும் கல்விச்சாலையாக அன்றி, எதிர்காலத்தில்
எழுத்துச் சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடமாகவும் திகழ வேண்டும் என்ற கருத்தையும்
நூலாசிரியர் இந்தக் கூட்டத்தில் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மவுண்ட்
றூயிட் கல்வி நிலையத்தின் தலைவர் திரு.தேவராஜா
சதீஸ்கரனின் தலைமையில் நிகழ்ந்த இந்த விழாவில் உப தலைவர் திரு.கந்தசாமி கெளரீஸ்வரன்
வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைவர் ஆறுமுகசாமி
பேரின்பமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. நிருபா ஜனார்த்தனன் வாழ்த்துரை
வழங்கவும், தொடர்ந்து வெளியீட்டு உரையை இந்தப்
புத்தகங்களை அழகுற வடிவமைத்த நிசா ஆட்ஸ் உரிமையாளர் திரு.நிசாகுலன் செல்வராசா வழங்கும்
போது,
தாயகத்தில் இருந்த காலத்திலேயே “அறிவியல்
துளிகள்” இறுவட்டு வழியாகவும் இரங்கநாதன் அவர்களது தமிழியல் செயற்பாடுகள்
நிகழ்ந்ததை அனுபவரீதியாகப் பகிர்ந்து கொண்டார்.
மவுண்ட்
றூயிட் கல்வி நிலையத்தின் உப அதிபர் திருமதி. அனிதா
சிவசங்கர் வழியாக முதற்பிரதிகளைப் பெற்ற சிவப்பிரகாசம் விஜய நேசன் தம்பதியினர் (Sri Ganesh
Selections), மற்றும்
திரு.திருமதி கனகரட்ணம் சுதர்மன் தம்பதியினரைத் (KST Spice Corner) தொடர்ந்து, சிறப்புப் பிரதிகளை அவையில் வந்திருந்தோர் வாங்கிச்
சிறப்பித்தனர்.
சிற்றுண்டிப்
பரிமாறலோடு குறுகிய இடைவேளையைத் தொடர்ந்து நிகழ்வின் அடுத்த பாகம் அரங்கேறியது.
இந்த விழாவில்
குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், திரு. பரமேசுவரன் இரங்கநாதன் ஆக்கியளித்த கவிதைகளை முத்தாய்ப்பாக தமிழ்க்
கல்வி நிலைய மாணவியர் பகிர்ந்து சிறப்பித்தார்கள்.
“இலக்கணச் சாரல்”
நூல் மதிப்பீட்டுரையை திரு. சரவணமுத்து தேவராசா (ஆசிரியர், முன்னாள் அதிபர் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையம்)
வழங்குகையில்,
“இலக்கணச் சாரல்”
என்ற தலைப்பில் இருக்கும் நுட்பம் தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். ஏனெனில்
தமிழ் இலக்கணத்தை மிகவும் கடினமான நோக்கில் நம்மவர்கள் பயிற்றுவிக்கும்
செயற்பாட்டால் மாணவர் உலகம் சந்திக்கும் சவால் உள்ள சூழலில் இம்மாதிரியான எளிய கை
நூல் மாணவருக்குப் பெரும் வரப்பிரசாதமாகும் என்று குறிப்பிட்டார்.
“அகர முதல
எழுத்தெல்லாம்” என்பது போல, முத்தாய்ப்பாய்
“அகரன்” என்ற
பெயர்ச்சொல்லோடு இந்த நூல் தொடங்கும் சிறப்பை
மகிழ்வோடு பகிர்ந்தவர்,
மேலும் தமிழ்
இலக்கணப் பிழைகளோடு உலாவும் சமூகச் செயற்பாடுகள் குறித்த தன் ஆதங்கத்தையும்
பதிந்து வைத்தார்.
வரலாற்று நோக்கில்
தமிழ் இலக்கணம் குறித்த ஆவணப்படுத்தலையும் தன் உரையில் வழங்கிச் சிறப்பித்தார்.
“எங்கள் பொங்கல்” நூல் குறித்த மதிப்பீட்டுரையை வழங்கிய கானா பிரபா,
“தாய் மொழிக்
கல்வியின் தொடக்கமாக அமைவது எளிமையான குழந்தைப் பாடல்கள். அதனால் தான் மகாகவி
சுப்ரமணியபாரதியாரில் இருந்து தொடங்கி, குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா போன்ற தமிழகத்துப் படைப்பாளிகளோடு, ஈழத்தில் கவிஞர் அம்பி, கவிஞர் சத்தியசீலன், கவிஞர் த.துரைசிங்கம் உள்ளிட்ட பல ஈழத்துப்
படைப்பாளிகளது கவிதைகளைப் பாடல் நூல் ஈறாக
உள்வாங்கிக் கற்பிக்கும் நடைமுறை இருந்து வருகின்றது.
திரு. பரமேசுவரன் இரங்கநாதன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத்
தொகுப்பைப்
படிக்க ஆரம்பித்ததுமே அந்தப் பழைய சிறுவர் உலகத்தில் மூழ்கிவிட்டு வந்தேன்.
தாய் தான் சமைத்த
உணவை மொன்று பார்த்துத் தன் குழந்தைக்கு ஊட்டுமாற் போல, இவரின் கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும்
வார்த்தைகளின் எளிமையும், சந்தமும்
சிறுவர்களுக்கு மிக அணுக்கமாகச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளன.
அதே நேரம் எடுத்துக்
கொண்ட கருப்பொருளின் ஆழம்
சிதையாமலும் பார்த்துக் கொள்கிறார்.
தமிழரின் தொன்மையைப்
பக்தியோடு சேர்த்துக் கவிதைகளாகக் கொடுத்தது மட்டுமன்றி, தற்காலத்தில் அலைக்கழித்த கொரோனாவைக் கூட விட்டு
வைக்காமல் அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள்
மேற்பார்த்து அவசிய மடலொன்று அனுப்பி வைக்கிறார் பாருங்கள்.
கவிஞர் பரமேசுவரன்
இரங்கநாதனது இத்தகு படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும். அவை புலம்பெயர் தமிழர்கள்
மட்டுமன்றி தாய் நிலத்தவருக்கும் சென்று சேரவேண்டிய இலக்கியச் செழுமை கொண்டவை” என்று
குறிப்பிட்டார்.
நிகழ்வில் தொடர்ந்து
ஏற்புரையை நூலாசிரியர் திரு. பரமேசுவரன் இரங்கநாதன் வழங்கிய போது,
இந்த நூல்களை வெளியிட்டதன்
தேவையையும், பின்னணியில்
இருந்த உழைப்பையும் கோடிட்டுக்
காட்டினார்.
தமிழின் சிறப்பையும், அதன் விஞ்ஞானத் தத்துவத்தையும் “திருப்புகழ்”
தொட்டு உதாரணம் பகிர்ந்தார். சம்பிரதாயபூர்வமான ஏற்புரையாக அன்றித் தன் பேச்சில்
காத்திரமான பல விடயங்களைத் தொட்டுச் சென்றார்.
இவற்றைக் கொண்டு
வருவதில் அவரின் மனைவியும், தமிழாசிரியருமான
திருமதி. செல்வராஜி இரங்கநாதனின் உழைப்போடு, நூல்களை வடிவமைத்த
திரு. நிசாகுலன், மற்றும் அச்சுப்பதிவை அளித்த திரு.
சதீஸ்கரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
மவுண்ட்
றூயிட் கல்வி நிலையத்தின் செயலாளர் திரு. சிவா
சிவசங்கரின் நன்றியுரையைத் தொடர்ந்து இந்நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைந்தது.
திரு.பரமேசுவரன்
இரங்கநாதன் ஈழத்தில் இருந்த காலத்திலேயே நாடகங்கள் எழுதியும், இலக்கிய நிகழ்வுகளில்
பங்கேற்றும் தமிழுக்கான தன் செழுமையான பங்களிப்பை வழங்கியவர்.
இன்று சிட்னியில்
நம்மிடையே வாழ்ந்து வரும் இவரின் தமிழ்க் கல்வி கற்பித்தல் செயற்பாடுகளோடு இத்தகு
இலக்கியப் பரிமாறல்கள் அழகுற வடிவமைக்கப்பட்டு அச்சேறி வெளிவருவது நம்
தமிழருக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
நூலாசிரியருக்கும், கச்சிதமான விழாவை நிகழ்த்திய மவுண்ட்
றூயிட் கல்வி நிலையத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு இந்த வேளை நன்றிகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம்.
கானா பிரபா
No comments:
Post a Comment