இந்தியா என்ன நினைக்கிறது…?

 July 3, 2024


இலங்கையின் அரசியல் தீர்மானங்கள் எதுவானாலும் அதில் வெளித்தலையீடுகள் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக, இந்தியாவின் கரிசனைகள் பிரதானமானவை. இலங்கை, இந்தியாவின் உடனடி அயல்நாடு என்னும் வகையிலும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதாலும் இந்தியாவின் தலையீடுகள் தவிர்க்க முடியாதவை.

இந்த யதார்த்தத்தைப் புறந்தள்ள வேண்டுமென்று எவர் வேண்டுமானாலும் விரும்பலாம். ஆனால், இந்த யதார்த்தத்தை எவராலும் புறந்தள்ளவே முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பில் இந்தியாவின் அவதானம் என்ன – ஆர்வம் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை அறிவதில் நிச்சயம் அனைவருமே ஆர்வத்துடன் இருப்பர்.

ஏற்கனவே, ஜே. வி. பியின் வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந் தார் – இவ்வாறானதொரு பின்புலத்தில், சஜித் பிரேமதாஸவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறான அழைப்புகள் ஒரு செய்தியைத் தெளிவாக முன்வைக்கின்றன. அதாவது, ஜனாதிபதித் தேர்தல் எதிர்பார்த்தவாறு சாதாரண மானதொரு தேர்தலாக இருக்கப்போவதில்லை. மாறாக, நெருக்கடிகள்மிக்க தேர்தலாகவே இருக்கப் போகின்றது.

இந்தியாவின் நலன்களுக்கு உகந்த வேட்பாளர் யார் என்றால் – பதில் நிச்சயமான ஒன்றல்ல. ஆனால், ஒப்பீட்டடிப்படையில் ரணில் மிகவும் பொருத்தமானவராக நோக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதற்கு என்ன காரணம்? நிச்சயமாக இதற்கு ரணில் காரணமல்லர்.

மாறாக, ரணிலுடன் விடயங்கள் தொடர்பில் புதிதாக எதனையும் கூறவேண்டியதில்லை. ஏற்கனவே, திட்டமிட்டவாறு வடக்கு – கிழக்கில் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் இருக்கப்போவதில்லை. ஆனால், புதிய ஒருவரென்றால் – அவருக்கும் அவரின் குழுவினருக்கும் விடயங்கள் அனைத்தையும் புதிதாக விளங்கப்படுத்த வேண்டியிருக்கும் – இதனால் காலவிரயம் ஏற்படும்.

ஒருவேளை சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றாலும் இந்திய நலன்களுக்கு பெரியளவில் சிக்கல்கள் ஏற்படப்போவதில்லை. ஆனால், இங்கு இந்தியாவின் நலன்கள் மட்டும் விடயமல்ல. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்க நகர்வுகளை எதிர்கொள்ளும் அமெரிக்க நகர்வுகளுக்கும் சிக்கல்கள் ஏற்படாதவாறான அரசியல் சூழலொன்றை ஏற்படுத்தக்கூடியவர் யார் என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். ஏனெனில், இலங்கைக்குள் ஏற்படும் அனைத்து அரசியல் நகர்வுகளினதும் பாதகமான விளைவுகளை முதலில் எதிர் கொள்ளும் நாடு இந்தியா மட்டும்தான் – அதன் பின்னர்தான் அமெரிக்கா இந்த விடயத்துக்குள் வரும்.

மகிந்த ராஜபக்ஷவின் சீனப் பயணமும் உற்றுநோக்கப்பட வேண்டியது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் கரிசனைகள் தவிர்க்கவே முடியாதவை. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இந்திய அவதானம் துலக்கமான ஒன்றாக இல்லை.

ஒன்றில் அவ சரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாதென்னும் கணிப்பு இருக்கலாம் அல்லது சூழல் இன்னும் நன்றாகக் கனியும் வரையில் இந்தியா அமைதியாக இருக்கலாம். ஆனால், அநுரகுமாரவின் புதுடில்லி பயணமும் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கான அழைப்பும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சிக்கலான நிலைமையை தெளிவாகவே படம்பிடித்துக் காட்டுகின்றது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் எதிர்வரும் மாதங்களில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறைகள் கூர்ந்து உற்று நோக்கப்படலாம். தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் உற்று நோக்கப்படலாம். ஆனால், தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்தித்தால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு சமரசத்துக்கு அப்பால்பட்ட ஒன்றாகவே இருக்க முடியும்.

நன்றி ஈழநாடு 


No comments: