உறவு என்பது உறுதுணை ஆகும் !


 














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


அம்மா என்போம் அப்பா என்போம்

அண்ணா அக்கா தம்பி என்போம்
மாமா மாமி மச்சான் மச்சாளென்போம்
அப்பா தங்கையை அத்தை என்போம் 

பாட்டி தாத்தா மூத்தோர் ஆவர்
பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி 
உரிமையாய் உறவாய் உதவியே நிற்பார்
அருகினில் இருப்பார் அணைத்துமே நிற்பார்

சகோதரர் என்பார் சந்தோஷம் தருவார்
சங்கடம் வந்தால் அங்கெலாம் நிற்பார்
இங்கிதம் அறிவார் இரக்கமாய் இருப்பார்
என்றுமே உரமாய் எப்போது மிருப்பார்

பேரன் பேத்தி வாரிசாய் வருவார்
அவரின் பிள்ளைகள் உறவாய் இணைவார்
பரம்பரை என்பது வளர்ந்தே போகும்
நிலந்தனில் உறவுகள் நெடுந் தொடராகும் 

நல்லது என்றால் யாவரும் மகிழ்வார்
அல்லன நடந்தால் அபயம் அளிப்பார்
இருளினைப் போக்கும் ஒளியாய் அமைவார்
இருக்கிறார் என்பதே பெரு வரமாகும்

இருக்கும் இடத்தினைச் சொர்க்கம் ஆக்கிட

எங்கோ விருந்து உறவுகள் வருவார்
சங்கமம் ஆகியே சந்தோஷம் நிறைப்பார்
உறவுகள் சங்கமம் உற்சாக மளிக்கும் 

பண்டிகை என்றதும் பற்பல உறவுகள்
பட்சணம் பரிசுகள் கொண்டுமே வருவார்
வீடெலாம் வெளிச்சம் விரிந்திடும் மகிழ்ச்சி
உறவுகள் இணைவோம் உவப்புமே விரியும் 

திருமணம் என்றால் திரளுவார் உறவுகள்
மணமகன் பக்கம் மணமகள் பக்கம் 
திரும்பிய இடமெலாம் தென்றலாய் இருக்கும்
கரும்பின் சுவையாய் களிப்பே பொங்கும்

வாழை கட்டுவார் தோரணம் அமைப்பார்
மங்கல இசையோ வானைத் தொட்டிடும்
குழந்தைகள் குதூகலம் கோலம் போடும்
பாட்டியைத் தாத்தாவை பரவசம் பற்றிடும் 

மூத்தோர் ஆசியைப் பெறுவது முக்கியம்
மூத்தோர் வாழ்த்தினால் முழுமையே ஆகும்
என்று எண்ணியே இருந்தனர் உறவுகள்
ஆதாலால் மூத்தோரை முன்னிலை ஆக்கினர் 

செல்லும் வேளை சொல்வார் அறிவுரை
நல்லதை எண்ணியே நாளும் உரைப்பார்
அல்லதைத் தவிர்க்க ஆனதைச் சொல்வார்
அவனியில் மூத்தோர் வரமாய் இருப்பார் 

அன்னையும் பிதாவும் அனைவர்க்கும் தெய்வம்

அவரைப் பெற்றவர் தாத்தாவும் பாட்டியும் 
அவரின் வாரிசாய் வந்தவர் நாங்களே
எங்களின் வரவால் வந்தவர் பிள்ளைகள்

உறவுகள் என்பது உன்னத அமைப்பு
உளமதில் உண்மை கொள்வதே உறவு
உயிர்ப்புடன் இருப்பதே உறவது உயர்வு
உலகினில் உறவுகள் உயிர்ப்புடன் இல்லை

பாசம் நேசம் பரிவு கருணை
ஈவு இரக்கம் இணக்கும் இறுக்கம் 
யாவும் இப்போ காசின் வழியே
போகும் நிலையில் உறவு தவிக்குது

ஆடம் பரங்கள் அன்பைக் குலைக்குது
அன்னை தந்தையர் அலமந்து நிற்கிறார்
பெற்ற பிள்ளைகள் செல்வத்தை பெருக்கவே
கண்ணுங் கருத்துமாய் காலத்தைக் கருதிறார் 

உறவுகள் என்பதை உரத்துமே  உரைத்திட
உறவுகள் அமைப்பே உருவாக வேண்டும்
சேர்ந்திட மகிழ்ந்திட அமைந்த நல்லுறவுகள்
சேதாரம் ஆகியே இருக்குது இப்போ 

கூடப் பிறந்தவர் கூடவே மறுக்கிறார்
கூடினால் குழப்பம் ஆக்கிட முனைகிறார்
பெற்றவர் உற்றவர் முற்றத்தில் நிற்கிறார்
உறவுப் பாலம் உடைந்தே போகுது 

கூடாச் சேர்க்கையே குணத்தை குலைக்குது

குடும்ப உறவினைக் கூறாய் ஆக்குது
சுற்றம் எல்லாம் குற்றமாய் காட்டுது
சுந்தர உறவுகள் நொந்துமே போகுது

கூடும் கூட்டம் கூடவே வருமா
கொண்ட உறவுகள் கூடவே வருமா
உறவு என்பது உறுதுணை ஆகும்
அறியா யாவரும் அனைத்தையும் இழக்கிறார்  !





No comments: