இலங்கைச் செய்திகள்

 ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம்

படைப்பாளர், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் காலமானார்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங்கை வம்சாவளி பெண்


ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்

- இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார்

July 2, 2024 7:38 pm 
  • இரா. சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு இன்று (02) பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ். ராசமாணிக்கம் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.


இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார்

  • இரா. சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

நான் இந்த உரையாற்றும் போது, ​​அன்று என்னுடன் பாராளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார். அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்.   நன்றி தினகரன் 

 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

July 6, 2024 8:52 am 

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்றுமுன்தினம் 04/07/2024 யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் காலை 09 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம்பெற்ற ம.பிரதீபனை, பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்றதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி ஏஸ்.ஸ்ரீமோகன், மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் 03.07.2024 அன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கான நியமனம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கரவெட்டி தினகரன் நிருபர் - நன்றி தினகரன் 
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம்

July 6, 2024 9:28 am 

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்றுமுன்தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (04) பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான எஸ்.ரட்ணவேல், ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற அகழ்வு பணிகளுக்கு முன்னாயத்தமான நடவடிக்கைகளே நேற்றுமுன்தினம்மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, நிதி ஒதுக்கீடு காலம் தாழ்த்தப்பட்டதன் காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய மனித எலும்புக்கூடு இருக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்ட இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

————————————–இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

———————————–இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்டத்திற்கான நிதி கிடைக்கபெற்றுள்ள நிலையில் இன்றையதினம் ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது.

ஓமந்தை விஷேட நிருபர் - நன்றி தினகரன் 


படைப்பாளர், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் காலமானார்

July 6, 2024 6:16 am 

இலங்கையின் சிரேஷ்ட படைப்பாளரும், உருவகக்கதை எழுத்தாளரும் கிழக்கு மாகாணத்தின் பிரபல கிரிமினல் வழக்கறிஞருமான சின்னத்தம்பி முத்துமீரான் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இயற்கை எய்தினார். திடீரென நோய்வாய்ப்பட்டு தனது 84 ஆவது வயதில் நிந்தவூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிக்கந்தல் லெப்பை சின்னதம்பி, மீரா உம்மா ஆகியோரின் மகனாக அவர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியானார். இயல்பிலேயே சிறுகதை மற்றும் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்த அவர், தன் ஓய்வு நேரத்தில் கிழக்கிலங்கை நாட்டாரியலை ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொண்டிருந்தார்.

இலங்கையின் சிறந்த உருவகக்கதை படைப்பாளரான அவர், நூற்றுக்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளார். அவரது முதல் உருவகக் கதைத் தொகுதி 1982ஆம் ஆண்டு வெளியானது.   நன்றி தினகரன் 


பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங்கை வம்சாவளி பெண்

-உமா குமரன் MPயாக தெரிவு

July 6, 2024 8:30 am 

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ பாராளுமன்ற தொகுதியில் இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தொழில் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொழில் கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைக்கிறது. அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர் உமா குமரன். இவரது பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டனில் அவர்கள் குடியேறி உள்ளனர்.

அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.   நன்றி தினகரன் 

No comments: