வெள்ளிக்கிழமை விரதம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடிப்பில் 16 படங்களைத் தயாரித்த சாண்டோ எம் எம் ஏ


சின்னப்பா தேவர் , எம் ஜி ஆர் அரசியலில் தீவிரமாக இயங்க ஆரம்பித்த பிறகு இளம் நடிகர்களை போட்டு பக்திப் படங்களையும், மிருகங்களை வைத்து சாகஸப் படங்களையும் எடுக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் படம் எடுக்கும் நாகப் பாம்பை வைத்து தேவர் எடுத்த படம்தான் வெள்ளிக்கிழமை விரதம்.

50 ஆண்டுகளுக்கு முன் 1974ம் வருடம் இந்தப் படம் தயாரானது. அதுவரை காலமும் இரண்டாம் கதாநாயகனாகவும், கருப்பு

வெள்ளைப் படங்களில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஒரு திருப்பு முனையாக இப் படம் அமைந்தது. இப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. அது மட்டுமன்றி இந்தப் படம் வெளிவந்து இரண்டு மாதங்களில் சிவகுமாருக்கு கல்யாணமும் நடந்தது. ஆக படத்துக்கு மட்டுமன்றி , அவரின் கல்யாணத்துக்கும் இது பொன் விழா.

தேவரின் படங்கள் எல்லாவற்றையும் அவரின் தம்பி எம் ஏ திருமுகம் தான் டைரக்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தின் மூலம் தன் மகளை மணந்து மருமகனாகி விட்ட ஆர் தியாகராஜனை டைரக்டராக்க விரும்பிய தேவர் படத்தை கலரில் உருவாக்க முன் வந்தார். படத்தை டைரக்ட் செய்ய முன் வந்த மருமகன் , மாமனாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் நீங்கள் அங்கே இருந்தால் என்னால் இயல்பாக இயங்க இயக்க முடியாது . அதனால் நீங்கள் அங்கு வரக் கூடாது. இதற்கு உடன்பட்ட தேவர் மருமகனை அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்.

பார்வதி நாகப் பாம்பை தன் குலதெய்வமாக வணங்குபவள். வெள்ளிக் கிழமை தோறும் விரதம் இருந்து நாகத்துக்கு பால் வார்ப்பவள். நாக தேவதையின் ஆசியினால் தனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்று நம்புகிறாள். அதற்கமைய ராஜா என்ற செல்வந்தன் அவளை மணக்கிறான். எதிர்பாராமல் நடந்த இந்த திருமணத்தால் பார்வதி மகிழ்கிறாள். ஆனால் தன் கணவன் பாம்பை வெறுப்பவன் என்று அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இதனால் தன் தாம்பத்தியம் சிறக்க நாகதேவதையை வேண்டுகிறாள். அதே சமயம் ராஜாவிடம் பணிபுரியும் அசோக்கும், ஜெயாவும் சதி செய்து சதி பதிகளை பிரித்து சொத்துகளை அடைய முயற்சி செய்கிறார்கள். இவர்களிடம் இருந்து நாகம் எவ்வாறு அவர்களை காக்கிறது என்பதே படத்தின் கதை.


ஏற்கனவே யானை, மாடு இவற்றை நடிக்க வைத்து வெற்றி கண்ட தேவர் இதில் பாம்பை நடிக்க வைத்து வெற்றி கண்டார். படத்தின் கதாபாத்திரம் ஒரு பாம்பென்றால் , படத்தில் நடிக்க பதின்னான்கு பாம்புகள் பயன்படுத்தப் பட்டன. சும்மா சொல்லக் கூடாது பாம்புகள் டைரக்டரின் இஷ்டப்படி நடித்துக் கொடுத்து சாதனை புரிந்தது. இதனால் பாம்பு வரும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக அமைந்தன.

பார்வதியாக நடிக்கும் ஜெயசித்ரா நாகத்தின் பிரெண்டாகவே மாறிவிட்டார் எனலாம். இல்லாவிட்டால் பாம்பு அவரின் மார்பின் மீது ஏறி , உதட்டில் முத்தம் கொடுப்பது நடக்கக் கூடிய காரியமா! துடிப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் நடித்து கவர்ந்தார் அவர். சிவகுமாருக்கு இப் படம் நல்ல சான்ஸ். அதனை அவர் தவற விடவில்லை. விதவிதமாக உடுத்தி டூயட் பாடல் காட்சிகளிலும் நடித்து அசத்தினார் அவர். இவர்களோடு சுந்தரராஜன், நாகேஷ், , தேவர் ஆகியோரும் நடித்தனர்.

1974 ஸ்ரீகாந்துக்கு கெட்ட ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில்

இருந்து அநேகமாக அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அவர் கெட்டவனாகவே நடித்திருந்தார். அவருக்கு இணையாக வரும் ஜெயசுதா இளமையுடன் , கவர்ச்சியாகவும் காட்சியளித்தார். இந்தப் படத்ட்ஜ்ஜில் மற்றொரு வில்லனாக வருபவர் சசிகுமார். நல்ல வில்லனாக வர வேண்டியவர் திடீர் என காலமானது துரதிர்ஷ்டம். நாகேஷ் காமெடியுடன் சில காட்சிகளில் உணர்ச்சிகரமாகவும் நடித்தார்.

படத்துக்கான பாடல்களை ஏ மருதகாசி எழுத , சங்கர் கணேஷ் இருவரும் இசையமைத்தனர். தேவியின் திருமுகம், ஜிலு ஜிலு குழு குழு, ஆசை அன்பு இலைகளினாலே மூன்று டூயட்டுகளும் ஹிட்டடித்தன. அனுபவஸ்தரான வி . ராமமூர்த்தி படத்தை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்தார். வெளிப்புற காட்சிகள் கண்ணுக்கு இதமாக இருந்தது . படத்துக்கு வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். காட்சிக்கு காட்சி அவரின் வசனங்கள் பொருளுடன் ஒலித்தன. ஆனாலும் தேவரின் ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்துக்கு பிறகு தேவரின் படங்களுக்கு வசனம் எழுதவில்லை.


மருமகன் இயக்கும் முதல் படம் என்பதால் தேவர் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, வண்ணத்தில் வெளிப்புற படப்பிடிப்பு என்று படத்துக்கு செலவு செய்திருந்தார். அவரின் செலவு வீண் போகவில்லை. தியாகராஜன் முதன் முதலாக இயக்கிய வெள்ளிக்கிழமை விரதம் இருபது வாரங்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றியை கண்டது. பின்னர் தெலுங்கிலும், ஹிந்தியிலும் கூட படமாக்கப்பட்டது. இப்படத்தின் மூலம் தியாகராஜன் வெற்றி இயக்குனராக திரையுலகில் கால் பதித்தார்.

No comments: