( இலங்கையிலிருந்து
வெளியாகும் ஞானம் மாத இதழ் ( 290 ஆவது இதழ் ) இம்மாதம் ( ஜூலை ) அவுஸ்திரேலியாவில்
வதியும் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை அட்டைப்பட அதிதியாக
கௌரவித்துள்ளது. இவ்விதழில் இவரைப்பற்றி எழுத்தாளர்
முருகபூபதி எழுதிய பதிவு இங்கே தரப்படுகிறது
)
உள்ளார்ந்த கலை,
இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம் விட்டு உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்று வாழ
நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக
எனது அவதானத்தில் மற்றும் ஒருவரை ஞானம் இதழில்
அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
எனினும், இவருக்கு அறிமுகம் அவசியமில்லைத்தான். கருத்தாழமும்
உயிர்ப்பும் இணைந்த தனது வண்ண ஓவியங்கள் மற்றும் ஆக்க இலக்கியப்படைப்புகளின் மூலமாக
எமது வாசகர்களுக்கு, குறிப்பாக ஞானம் மாத இதழின் அபிமான வாசகர்களுக்கு நன்கு
அறிமுகமானவர்தான் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் வதியும் ஓவியர் – படைப்பிலக்கியவாதி
கிறிஸ்டி நல்லரெத்தினம்.
இலங்கையில் கிழக்கு
மாகாணத்தில் மட்டக்களப்பு இவரது பூர்வீகம்.
தனது
கல்வியை மட்டுநகர் புனித. மிக்கேல் கல்லூரியில் நிறைவு செய்துவிட்டு, கணக்கியலில் தேர்ச்சி பெற்று இலங்கையில் முன்னணியில் திகழ்ந்த தனியார் வர்த்தக வங்கியில்
கடமையேற்றார்.
1970 களில் இலங்கையில்
நன்கு அறியப்பட்ட ஓவியர் செள அவர்களின் மருமகன்தான் கிறிஸ்டி. ஓவியர் செள அவர்களின்
கருத்துப்படங்களையும் ஓவியங்களையும் கொழும்பில் இளம்பிறை ரகுமான் நடத்திய அரசு வெளியீடு
நூல்களில் குறிப்பாக, ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பா தொகுப்பில் வாசகர்கள்
பார்த்திருக்கலாம்.
கிறிஸ்டி
நல்லரெத்தினம், தனது இளமைப் பருவத்திலிருந்தே ஓவியக்கலையில் நாட்டம் மிக்கவராகவிருந்தார்.
தமது
உறவினரான மூத்த ஓவியக்கலைஞர் "சௌ' எனும் கருணாகரன் சௌந்தரராஜாவிடமிருந்து
ஓவியம் வரையும் நுணுக்கங்களை தனது பள்ளி நாட்களிலேயே
கற்றுத்தேர்ந்தார். இதுவே இவரை இலக்கியத்துறையுடன் இணைத்த ஆரம்பப் புள்ளி!
1992 இல் மெல்பனுக்கு
புலம்பெயர்ந்து, இங்குள்ள அவுஸ்திரேலிய முன்னணி வங்கியில் சர்வதேச வர்த்தகப்
பிரிவில் இணைந்து, தனது முதுநிலை வணிக
நிர்வாக கற்கை நெறியைப் பூர்த்தி செய்து முகாமையாளராக கடமையாற்றினார்.
தனது
26 வருட கால சேவையின் பின்னர் சில வருடங்களுக்கு முன்பு
அவ்வங்கி உயர் முகாமையாளராகி , விருப்ப ஓய்வு பெற்றார்.
எழுத்துலகிற்கு பிந்தியே வந்தாலும், தனது இலக்கிய
இடைவெளியை நிரப்பிக்கொள்ள முயன்றவர்தான் கிறிஸ்டி நல்லரெத்தினம். குறுகிய காலத்தில் எழுதத் தொடங்கி , தமிழ்நாடு கல்கி
இதழில் அனேக கட்டுரைகளையும் சிறுகதைகளையும் வரவாக்கினார்.
இரண்டு ஆண்டுகளில் இவருடைய 30 ஆக்கங்கள் கல்கியில் வெளிவந்தது இதற்குச்
சான்று!
சமகாலத்தில் இவரின் ஓவியங்களும், கட்டுரைகளும் சிறுகதைகளும் ஞானம், சிறுகதை
மஞ்சரி, வீரகேசரி, ஜீவநதி காலைக்கதிர் முதலான அச்சு ஊடகங்களிலும் சொல்வனம், குவிகம்,
பதிவுகள், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, திண்ணை, பூமராங், யாழ். ஆகிய இணையத் தளங்களிலும் வெளிவந்துள்ளன.
கிறிஸ்டியின் அனாதை மரங்கள் என்ற சிறுகதை 2022 இல் வெளிவந்த ஆக்கங்களில் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக
குவிகம் குழுமத்தினால் தேர்வு செய்யப்பட்டு, மூத்த எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி அவர்களால்
பாராட்டப்பட்டு கௌரவம் பெற்றார்.
இக்கதைகள்
நூலுருப்பெற்றன. இவரின் அனேக சிறுகதைகள் காணொளி வடிவிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.
இவரின் சிறுகதைகளில்
பொதிந்துள்ள வலுவான பாத்திரப்படைப்பும் படைப்பு மொழியும் பலரின் கவனத்தை
ஈர்த்துள்ளன.
ஞானம் மற்றும் குவிகம் குறும் புதினம் ஆகிய மாதாந்த இதழ்களின் ஆஸ்தான ஓவியர் இவர்தான்
என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்!
கல்கி, ஆனந்விகடன் இதழ்களிலும் இவரின் ஓவியங்கள் வெளிவந்துள்ளன.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் வெளிவந்த பல நூல்களுக்கு அட்டைப்படங்களை
வடிவமைத்துள்ளார்.
அவற்றில் சில
தற்போது அமேசன் கிண்டிலிலும் இடம்பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவரான கிறிஸ்டி நல்லரெத்தினம், சங்கத்தின் பணிகளிலும்
அர்ப்பணிப்புடன் உழைப்பதுடன், சங்கத்தின் காலாண்டு இணைய இலக்கிய இதழான பூமராங்கினை வடிவமைத்து வெளியிடுவதில் முன்னின்று உழைத்து
வருகிறார்.
புனித வின்சென்ட் டி போல்
சங்கத்தின் உறுப்பினரான கிறிஸ்டி
நல்லரெத்தினம், அச்சங்கத்தினுடாக தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
University of Third
Age எனும் சமூக அமைப்பின் செயற்குழு
உறுப்பினரான கிறிஸ்டி, அங்கு நடத்தப்படும்
டிஜிடல் ஓவிய வகுப்புகளில் கற்பிக்கின்றார்.
இவர் கோட்டோவியங்கள் மட்டுமல்லாது
டிஜிட்டல் கலையில் வரையப்படும் ஓவியங்களையும் படைக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு பங்களிக்கும் நவீன தொழில் நுட்பத்தையும் தன் ஓவியங்களில்
கலந்து ஓவியம் படைக்கிறார்.
எந்த வகையில் ஓவியம் படைத்தாலும் அவை உயிரோட்டமுள்ள
படைப்புகளாகவும் மனித நேயத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்தாழத்துடனும் அமைய வேண்டும்
என்பதிலும் இவர் கண்ணாயிருக்கிறார்.
இதுவே இவரின் படைப்புகள்
பலரை ஈர்ப்பதற்கான முக்கிய காரணியாகும் எனக்கருதுகின்றோம்.
ஓவியர் – படைப்பிலக்கியவாதி
கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை ஞானம் அபிமான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
---0---
( நன்றி: ஞானம்
290 ஆவது இதழ் )
No comments:
Post a Comment