இலங்கைச் செய்திகள்

 கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்

எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி கையளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை குறித்து பொறுப்புணர்வோடு நடப்பது அவசியம்

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் 02 வது முனையத்தை விரிவாக்க திட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்

July 12, 2024 11:38 am 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று (11) 3 மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து 3 உடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஏழாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் நேற்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

மூன்றாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

குறித்த அகழ்வு பணியின் போது ஏழு மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ ஏழாம் நாள் அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இன்று மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து பற்கள் பிரித்து எடுக்கப்பட்டு DNA பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து த.வி.பு ஒ-3035 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஓமந்தை விஷேட நிருபர் - நன்றி தினகரன் 




எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

- குடியுரிமை இன்றி கடவுச்சீட்டு பெற்றமை குற்றம்

July 11, 2024 5:41 pm 

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கை குடியுரிமையின்றி போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டயனா கமகேவிற்கு எதிராக இன்றையதினம் (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கின் குற்றப்பத்திரிகையை வாசிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் வாசிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல உத்தரவிட்டார்.   நன்றி தினகரன் 





சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி கையளிப்பு

-அங்கஜன் எம்.பியின் முயற்சி வெற்றி

July 11, 2024 9:30 am 

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.

அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது, நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

(யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன் 






யாழ்.போதனா வைத்தியசாலை குறித்து பொறுப்புணர்வோடு நடப்பது அவசியம்

July 12, 2024 1:04 am 

யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் ஊடகங்கள் மற்றும் எல்லோரும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டுமென, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையையில் தினமும் விடுதிகளிலும், வெளி நோயாளர் பிரிவுகளிலும், மற்றும் பல்வேறு கிளினிக் பகுதிகளிலும் 5,000 பேர் சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலை இயக்குவது மிகவும் சிரமமான விடயம். இவ்வைத்தியசாலை பொதுமக்களின் நம்பிக்கைக்கும் அவர்களுடைய சுகாதாரம் சம்பந்தமான சிக்கலான விடயங்களுக்கும் பதிலளிக்கின்ற  ஒரு நிறுவனம்.

இங்கே 2,500க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையிலே  உள்ளனர். இவ்வாறு சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்போடும் கடமையாற்றும்  இந்நிறுவனம் பற்றிய உங்கள் கருத்துக்களை பொறுப்போடு எடுத்துரைப்பது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட நபர்களின் கருத்தை இந்நிறுவனத்தின் மீது பாரிய குற்றச்சாட்டாக முன்வைத்து இதன் சேவையை மழுங்கடித்தால்,  சேவையை சிறப்பாக பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வார்கள். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சோர்வடைந்தால் அவர்களால் சிறப்பாக கடமையாற்ற முடியாத நிலை ஏற்படும்.

வேலைப்பளு காரணமாக சமூக ஊடகங்களில் வருகின்ற எல்லா விடயங்களையும் பார்வையிட்டு இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.   நன்றி தினகரன் 






கட்டுநாயக்கா விமான நிலையத்தின் 02 வது முனையத்தை விரிவாக்க திட்டம்

-ஜப்பானின் JICA இணக்கம்

July 11, 2024 9:15 am 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் 02ஆவது முனையத்தை மீண்டும் ஆரம்பிக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இணங்கியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சலுகைக் கடன் திட்டத்தின் கீழ், இத்திட்டம் எளிதாக்கப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

முன்னதாக JICA வின் அறிக்கையின்படி, விமானப் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானம் மற்றும் தேவையான பயன்பாடு ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. ஜப்பானிய மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றல் கொண்ட சுற்றுச்சூழல் விமான நிலையத்தின் கருத்தின் அடிப்படையில் முனையக் கட்டடம் உருவாக்கப்பட இருந்தது. இயற்கையை இரசித்தல் பயணிகளுக்காக மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி, சூரிய ஒளிச் சக்தி, எல்.இ.டி விளக்குகள், ஆற்றல்-திறனுள்ள மெருகூட்டல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது அமைக்கப்படவுள்ளது.   நன்றி தினகரன் 





சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்

July 14, 2024 7:57 pm 

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பிலான நிலைமைகளை நேற்று (13) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற அனைத்து தரப்பினரினதும் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

அதன் ஓர் அங்கமாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சமூக ஆர்வலர்களை தனது யாழ்ப்பாண அலுவலகத்திற்கு அழைத்து எடுக்க வேண்டுய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

நன்றி தினகரன் 



No comments: