கல்யாணமாம் கல்யாணம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பாதிப் படம் பஞ்சு என்ற அடை மொழியோடு தமிழ் திரையுலகில்


வலம் வந்தவர் பஞ்சு அருணாசலம். காரணம் அவர் கதை வசனம் எழுதி ஆரம்பிக்கப் பட்ட படங்கள் அனைத்தும் பாதியிலேயே நின்று விட்ட காரணத்தால் அவருக்கு இப்படியொரு ஏளனப் பெயர் கிடைக்கப் பெற்றது. 70ம் ஆண்டின் ஆரம்பத்தில் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ஹலோ பார்ட்னர் படம் மூலம் கதாசிரியராக பஞ்சுவால் திரையுலகில் கால் வைக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை சொல்ல நாகேஷிடம் பஞ்சு சென்ற போது நாகேஷ் கதையை மட்டும் நிராகரிக்கவில்லை , பஞ்சுவையும் நிராகரித்து விட்டார்.


அதன் பின் கிருஷ்ணமூர்த்தி தயவில் அவர் இயக்கிய படத்துக்கு

மீண்டும் கதை வசனம் எழுதும் வாய்ப்பு பஞ்சுவுக்கு கிடைத்தது. அந்தப் படம் தான் கல்யாணமாம் கல்யாணம். ஜெய்சங்கரின் ஆதரவுடன் தயாரிப்பாளரான அவருடைய மேக்கப் மேன் மாணிக்கம், மானேஜர் பாலகிருஷ்ணன், அக்கவுண்டன்ட் காமாட்சி இவர்கள் மூவரும் தயாரித்த இதில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார். அது வரை காலமும் அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்து வேறுபட்டு அப்பாவியாக , வெகுளியாக நடித்து தன் நடிப்புத் திறனை காட்டியிருந்தார் அவர். படம் முழுதும் அவரின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.

ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் லதா, ஜெயசித்திரா இருவரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் லதா படத்தில் இருந்து விலக , ஜெயசித்ரா இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருந்தார். இரண்டுமே துடிப்பான அலட்சியமான பாத்திரம் . அதனை அனாயசியமாக செய்திருந்தார் அவர். நகைச்சுவை படம் என்பதால் பல காமெடி நடிகர்கள் படத்தில் இடம் பெற்றார்கள். சோ, கே ஏ தங்கவேலு,தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ராமராவ், பகோடா காதர், என்று கூட்டு அவியல் மாதிரி படத்தில் இடம் பெற்றார்கள். இதனால் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் போயிற்று. இவர்களுடன் வ எஸ் ராகவன், சுகுமாரி, ஜெயக்குமாரி, ஆகியோரும் நடித்தனர். வில்லன் வேடத்தை ஸ்ரீகாந்த், சசிகுமார் இருவரும் ஏற்றிருந்தார்.


சுதந்திரமாக வாழ ஆசைப்படும் கீதா தனக்கு அடங்கி நடக்கக் கூடிய ஒருவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறாள்.தன்னை மணக்க முன் வந்த நாகரீக இளைஞன் சங்கரை அலட்சியமாக நிராகரித்து விட்டு தன் விருப்பத்துக்கமைய கிராமத்து இளைஞனான முத்துவை மணந்து கொள்கிறாள். அவள் விருப்பப் படியே அடங்கி நடக்கிறான் முத்து. ஆனால் தாம்பத்திய உறவிலும் அவன் ஆர்வம் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்கிறாள் கீதா. அதே சமயம் அவளின் நிலை அறிந்து சிலர் அவளை தங்களின் தேவைக்கு பயன் படுத்த முய ற்சிக்கிறார்கள். செய்வதறியாமல் தவிக்கிறாள் அவள். அப்போதுதான் அவளுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது.

இப்படி அமைந்த கதையில் ஜெய்யின் நடிப்பு எடுபட்டது. முதலிரவின்

போது அவரின் அப்பாவி தோற்றமும் , பேச்சும் அசத்தல். சோ, தேங்காய் மூவரும் காமெடியில் குறை வைக்கவில்லை. படத்தின் கதை வசனத்தை எழுதிய பஞ்சு பாடல்களை தன் குரு கண்ணதாசன் எழுதும்படி பார்த்துக்கொண்டார். விஜயபாஸ்கர் இசையில் அவர் எழுதிய காலம் பொன்னானது , இளமை நாட்டிய சாலை, அத்தை மகள் காத்திருந்தாள் மெத்தை விரிக்க பாடல்கள் கேட்கும் படி இருந்தன.


சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் துரித கதியில் தயாரான கல்யாணமாம் கல்யாணம் வெற்றி பட வரிசையில் சேர்ந்து திரையுலகில் பஞ்சு அருணாசலத்துக்கு ஒரு நிலையான இடத்தை பெற்று தந்தது. அது மட்டுமன்றி நகைச்சுவைப் படங்களை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் கல்யாணமாம் கல்யாணம் படத்தின் வெற்றி அமைந்தது. ஜெயசங்கர் நடித்த்து 74ம் ஆண்டு வெளிவந்த படங்களுள் அவருக்கு வெற்றிப் படமாகவும் இது அமைந்தது.

No comments: