சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சிக்கிக் கொண்ட இருவரின் கதி என்ன?

 July 12, 2024 6:04 am 

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் சிக்கியிருக்கும் நிலையில், தாங்கள் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவரும் பணியை ஏற்றுக் கொண்டது.

இதற்காக ‘ஸ்டார் லைனர்’ எனும் விண்வெளி ஓடத்தையும் தயாரித்தது. இந்த விண்கலம் மூலம் கடந்த ஜூன் 5 ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7 ஆம் திகதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அது அடைந்தது. ஆனால் இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ‘ஸ்டார் லைனரின்’ பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

7 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது.

இதன்படி ஜூன் 26 ஆம் திகதி இருவரும் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்றுவரை இருவரும் பூமிக்குத் திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்குத் திரும்ப 6 மணி நேரம் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் கோளாறுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

இந்நிலையில் விண்வெளியில் தாங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என்று சுனிதாவும், வில்மோரும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் ஸ்டார் லைனரில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சரி செய்யப்படும் என்றும், அப்போது இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் போயிங் தெரிவித்திருக்கிறது. அதேபோல ஓகஸ்ட் மாதத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்பேஸ் ஷிப் வேறு சில விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்ல இருக்கிறது. அதற்குள் சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

No comments: