July 14, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அந்தப் பொறுப்பு சுகாதார அமைச்சுக்குரியது.
தவறுகள் இருப்பின் அதனை திருத்திக் கொள்ள வேண்டியதும் – அதேவேளை, பொய்கள் கலக்கப்பட்டிருப்பின் அதனை பொது வெளிக்கு கொண்டுவருவதும்
சம்பந்தப்பட்ட அனைவரதும் பொறுப்புமாகும் – ஆனால், இந்த விடயத்தில் வைத்தியசாலை விவகாரத்திற்கு அப்பால், சமூக பொறுப்புடன் கவனிக்க வேண்டிய பிறிதொரு முக்கியமான விடயமுண்டு.
இன்றைய காலத்தில் அது மிகவும் ஆபத்தானதொரு விடயமாக மாறிவருகின்றது.
சமூக ஊடகங்களில் ஒருவர் குறிப்பிடும் விடயங்களை அப்படியே, ஆராயாமல் நம்பிவிடும் தலைமுறையொன்று உருவாகிவருவது மிகவும் ஆபத்தானது.
சமூக ஊடங்களை இன்று பலரும் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
உலகின் மிகவும் ஆபத்தான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ். போன்ற அமைப்புக்கள் முகநூலை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றன.
முகநூல்கள் வழியாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை உண்மை யென்று நம்பி, பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அந்த அமைப்பில் இணைந்திருப்பதாக தீவிரவாத எதி;ர்ப்பு ஆய்வுகள் கூறுகின்றன.
அதே வேளை, நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் முகநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அரபு வசந்தத்தில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டியதில் சமூக ஊடங்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழ் சூழலிலும் பலரும் முகநூல்களின் வழியாக தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றனர் ஆனால், தமிழ்ச் சூழலில் முகநூல்கள் அதிகம் எதிர்மறையாக பயன்படுத்தப்படுவதாகவே தெரிகின்றது.
முகநூல்கள் மற்றவர்களை தாக்குவதற்கும் பொய்களை பரப்புவதற்குமே அதிகம் பயன்படுவதாக தெரிகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயத்தை தொடர்ந்து வைத்தியர்கள் என்றாலே மோசமானவர்கள் என்பது போன்ற கருத்துக்கள் முகநூல்களின்
வழியாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை முன்வைத்து வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள், தற்போது ஒட்டுமொத்த வடக்கு மாகாண வைத்தியர்கள் மீதே சந்தேகப்படுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.
வைத்தியர்களில் சிலர் தவறுகளை செய்யலாம் – அதற்கு வாய்ப்புகள் உண்டு.
தவறுகள் செய்பவர்கள் வைத்திய துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இருக்கின்றனர்.
அதேபோன்று, வைத்தியத் துறையை பணம் சம்பாதிக்கும் துறையாக நோக்குபவர்களும் இருக்கின்றனர்.
இவைகள் உண்மையாக இருப்பினும் கூட, வைத்தியதுறையை ஒரு சேவையாக செய்யும் ஆயிரக்கணக்கான நல்ல வைத்தியர்களும் இருக்கின்றனர்.
பலர் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக வெளிநாடுகளை நோக்கிச் செல்லும்போது, இப்போதும் மண்ணிலிருந்து பணிபுரிபவர்களை மதிக்கவேண்டியது
சமூகத்தின் கடமை.
அரசியல் தொடர்பாக முகநூல்களில் பதிவிடப்படும் அனைத்தையும் நம்பும் தலைமுறையொன்று, இப்போது சமூக மட்டத்திலும் உருவாகி வருகின்றது.
இளைய தலைமுறையொன்று.
எவ்வித விசாரணையுமின்றி, அனைத்தையும் நம்பும் நிலைக்கு செல்கின்றது.
முகநூல்களில் பொய்களை பரப்பும் போக்கொன்று, முதலில் அரசியல் விடயங்களில்தான் ஆரம்பித்தது.
இது தற்போது, ஒரு சமூக நோயாக மாறிவருகின்றது.
இது மிகவும் ஆபத்தானது. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment