உலகச் செய்திகள்

டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

காசா நகர வீதிகளில் மீட்க முடியாது குவிந்துள்ள உடல்கள்: வெளியேறுவோர் மீது ‘ஸ்னைப்பர்’ சூடு

தேர்தலில் போட்டியிடுவதற்கு பைடனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

காசாவில் 4 நாட்களுக்குள் நான்காவது பாடசாலை மீது தாக்குதல்: 30 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலால் போர் நிறுத்தப் பேச்சு சீர்குலையும் நெருக்கடி

காசா நகரில் இஸ்ரேல் பாரிய தாக்குதல் பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம்

இஸ்ரேல் படை வாபஸ் பெற்ற காசாவின் ஷுஜையா தரைமட்டம்; 60 சடலங்கள் மீட்பு


டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

- காதோரமாக சென்ற ரவை; மயிரிழையில் உயிர் தப்பினார்

July 14, 2024 8:14 am 

– துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை; ஆதரவாளர் ஒருவரும் பலி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 150 யார் தூரத்தில் எதிர்முனையில் உள்ள கட்டடமொன்றின் கூரையிலிருந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரியை அமெரிக்க இரகசிய சேவை பாதுகாப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ட்ரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெறும் முன், இந்த மர்ம நபர் தொடர்பில் அங்கிருந்த சிலர் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியதாகவும், அதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் குறித்த மர்ம நபரை மற்றுமொரு கூரையிலிருந்த பாதுகாப்புப் பிரிவினர் இலக்கு வைத்த வண்ணம் இருப்பதை வீடியோ காட்சியொன்று காண்பிக்கின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை எனவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், ட்ரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி ஜனாதிபதி ஜோ பைடனின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்;தக்கது.    நன்றி தினகரன் 






காசா நகர வீதிகளில் மீட்க முடியாது குவிந்துள்ள உடல்கள்: வெளியேறுவோர் மீது ‘ஸ்னைப்பர்’ சூடு 

போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் தொடர்ந்து முயற்சி

July 12, 2024 10:00 am 

எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் காசா நகரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் புதிய தாக்குதல்களால் வீதிகளில் மீட்கப்படாது உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் குடியிருப்பாளர்கள் வீடுகளில் சிக்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் பாரிய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

போருக்கு முன்னர் காசா மக்கள் தொகையில் கால் பங்குக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்த காசா நகர், கடந்த ஆண்டு போர் வெடித்து சில வாரங்களிலேயே அழிக்கப்பட்டது. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இடிந்த வீடுகளுக்கு திரும்பினர். அவர்களை மீண்டும் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

காசா நகரின் அல் ஹவா மற்றும் சப்ரா பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்குள்ளேயே சிக்கியும் கொல்லப்பட்டும் இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அல் ஹவா மற்றும் ரிமால் பகுதிகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள வீதிகளில் இருந்து சடலங்களை மீட்க முடியாதுள்ளதாகவும் காசா சிவில் அவசர சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் பெரும் அழிவுகளை மேற்கொண்டு இரண்டு வழிகளைப் பயன்படுத்தி தெற்கை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தியபோதும் காசா நகரின் பல குடியிருப்பாளர்களும் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். ‘நாம் வெளியேறப் போவதில்லை’ என்று சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

‘நாம் மரணித்தாலும் தெற்கிற்கு செல்ல மாட்டோம். ஒன்பது மாதங்களாக பட்டினி மற்றும் குண்டுகளை நாம் சகித்து வருகிறோம். உயிர்த்தியாகியாக இங்கேயே மரணிக்க நாம் தயாராக இருக்கிறோம்’ என்று 30 வயதான முஹமது அலி, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அலியின் குடும்பம் நகருக்குள் பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் உணவு, நீர் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘போர் மீண்டும் ஆரம்பிப்பது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது குண்டுகளை வீசுகின்றனர். விரைவில் போர் நிறுத்தம் ஒன்று வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாவிட்டால் இறைவனின் நாட்டப்படி நடக்கும்’ என்றும் அவர் கூறினார்.

இதேவேளை காசா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் சூடு நடத்துவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் உள்ள யார்முக் அரங்கை கடந்து செல்ல திட்டமிட்டபோதும் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்கள் வீதிகளில் இருப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘வீதிகளில் இருக்கும் உடல்களை எடுத்துச் செல்லும்படி துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புப் படையினரை கேட்கிறோம். இல்லாவிட்டால், அந்த உடல்களை நாய்கள் தின்னும். அந்த உடல்கள் புதைக்கப்பட வேண்டும்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த உடல்களை மீட்க முடியாதிருப்பதாக துணை மருத்துவர்கள் குறிப்பிட்டதாக மற்றொருவர் தெரிவித்துள்ளார். ‘உடல்களை மீட்கும்படி தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என்றும் உடல்களை அணுகுபவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்’ என்றார்.

வீதியில் நடந்து செல்பவர்கள் தலையில் சுடப்பட்டதை கண்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டு வரும் மக்கள் பெரும் வேதனையை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். காசாவின் வடக்கில் சுமார் 300,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,345 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 88,295 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காசாவின் கிழக்கு புறநகர் பகுதியான ஷஜையாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை அங்கிருந்து வெளியேறி இருப்பதாக காசா அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்தப் படை நடவடிக்கையில் பலர் கொல்லப்பட்டு குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் தெற்கு முனையில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் கடந்த மே மாதம் தொடக்கம் செயற்பட்டு வரும் நிலையில் நகரின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீடுகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் சிறிய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்கு ரபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரபாவில் இருந்து வீசப்பட்ட ஐந்து ரொக்கெட் குண்டுகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் முக்கியமான விட்டுக்கொடுப்பு ஒன்றை செய்த நிலையில் கட்டார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முதலில் இணக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஆரம்பிப்பதற்கும் சில பணயக்கைதிகளை விடுவிப்பதற்குமே ஹமாஸ் தனது நிபந்தனையில் தளர்வை கொண்டுவந்தது.

எனினும் எந்த ஓர் உடன்படிக்கையும் போரின் தமது நோக்கங்களை நிறைவு செய்வதற்காக போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுத்தி வருகிறார். நெதன்யாகுவின் கூட்டணி அரசில் உள்ள தீவிர வலதுசாரிகள், ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை போரை நிறுத்துவதை எதிர்த்து வருகின்றனர்.   நன்றி தினகரன் 





தேர்தலில் போட்டியிடுவதற்கு பைடனுக்கு வலுக்கும் எதிர்ப்பு 

July 12, 2024 9:45 am 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் சிறந்த தேர்வாக இருக்க முடியுமா என்று ஜனநாயகக் கட்சியின் 2 முக்கிய ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, ஹொலிவுட் நடிகர் ஜோர்ஜ் குலூனி இருவரும் ஜனாதிபதி தேர்தலில் பைடன் களமிறங்குவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

பைடனின் நீண்டகால ஆதரவாளரான திருமதி பெலோசி, ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவது பற்றி பைடன் துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்றார். பைடனுடன் இணைந்து கடந்த மாதம் நிதி திரட்டிய ஹொலிவுட் நட்சத்திரம் குலூனி, தமது ஆதரவை மீட்டுக்கொள்வதாகக் கூறுகிறார்.

2020ஆம் ஆண்டு பார்த்த பைடன் வேறு இப்போது இருக்கும் பைடன் வேறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

81 வயது பைடன் ஜூன் 27ஆம் திகதி நடைபெற்ற சி.என்.என். தொலைக்காட்சி விவாதத்தில் சரிவரப் பேசாததால் ஜனநாயகக் கட்சியில் சிலர் அவர் தேர்தலில் இருந்து ஒதுங்குவதே நல்லது என்று கருதுகின்றனர்.   நன்றி தினகரன் 





காசாவில் 4 நாட்களுக்குள் நான்காவது பாடசாலை மீது தாக்குதல்: 30 பேர் பலி 

- புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

July 11, 2024 6:26 am 

தெற்கு காசாவில் 30 பேர் கொல்லப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றொரு பாடசாலை மற்றும் பல இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கட்டார் தலைநகர் டோஹாவில் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நேற்று (10) ஆரம்பமானது.

கான் யூனிஸ் நகரின் கிழக்கே உள்ள அப்பாசான் பகுதியில் அல் அவுதா பாடசாலை மீதே இஸ்ரேல் நேற்று முன்தினம் வான் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டதோடு மேலும் 53 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பாடசாலை முற்றவெளியில் இளைஞர்கள் கால்பந்து ஆடிக்கொண்டும் பலர் அதனை பார்த்துக் கொண்டிருந்த நேரமே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது அங்கு எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதலில் பல உறவினர்களையும் இழந்ததாக பலஸ்தீன சிறுவன் ஒருவன் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளான். ‘நாம் இருந்து கொண்டிருக்கும்போது ஏவுகணை விழுந்து அனைத்து அழிந்தன. எனது மாமா, ஒன்றுவிட்ட சகோதரர்கள் மற்றும் உறவினர்களை இழந்தேன்’ என்றான்.

கான் யூனிஸில் மக்களை வெளியேறும் இஸ்ரேலின் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பாடசாலையில் பெரும் எண்ணிக்கையானோர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

காசாவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நான்கு வெவ்வேறு பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் உள்ள காசா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருவதோடு தெற்கில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மத்திய காசாவின் சலாஹ் அல் தீன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அதேபோன்று கான் யூனிஸ் நகரின் பனீ அல் சுல்தான் பகுதியில் வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர்.

காசா நகரின் டெல் அல் ஹவா, ஷஜையா மற்றும் சப்ரா பகுதிகளில் முன்னேறி வரும் இஸ்ரேலிய டாங்கிகள் வீதிகள் மற்றும் கட்டடங்கள் மீது செல் குண்டுகளை வீசுவதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காசா நகரின் கிழக்கு மற்றும் மேற்கின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்ட நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

இந்நிலையில் காசா நகரில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான பாதையை காட்டும் வரைபடம் ஒன்றைக் கொண்ட துண்டுப் பிரசுரத்தை இஸ்ரேல் போட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதிகள் அன்றி ஒட்டுமொத்த நகரில் இருந்தும் மக்கள் வெளியேறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் இரு வழிகள் ஊடாக மத்திய காசாவை நோக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காசா நகரில் இருந்து பல டஜன் அவசர அழைப்புகள் கிடைத்தபோதும் அங்கும் கடுமையாக குண்டு வீசப்பட்டு வருவதால் அவர்களுக்கு உதவ முடியாதுள்ளது என்று பலஸ்தீன செம்பிறை சங்கம் நேற்று பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தது.

காசா நகர முன்னரங்குகளில் இருக்கும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள், இயந்திர துப்பாக்கிகள், மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்டு போராடி வருவதாகவும் இஸ்ரேலிய படையினர் பலரை கொன்று மற்றும் காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமது தரப்பு உயிரிழப்புகள் பற்றி விரிவாக குறிப்பிடாதபோதும் மத்திய காசாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் ஒன்றில் 21 வயதான படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அந்த இராணுவம் உறுதி செய்துள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் காசா மற்றும் எல்லைப் பகுதிகளில் 324 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசா போரில் மேலும் 2,097 இஸ்ரேலிய படையினர் காயமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,200 ஐ தாண்டியுள்ளதோடு 88,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காசா வட்டாரம் முழுவதுக்கும் பஞ்சம் பரவியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

வடக்குப் பகுதி மட்டுமல்லாமல் காசா வட்டாரத்தின் தென் பகுதியிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகள் இருப்பதாக நிறுவனத்தின் வல்லுநர்கள் கூறினர்.

காசாவின் வடக்குப் பகுதியில் குறைந்தது 33 பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர். அண்மைக்காலம் வரை அங்குதான் அதிகச் சண்டை ஏற்பட்டது. கடந்த மே மாதத்திலிருந்து காசாவின் தென் பகுதிக்கும் சண்டை பரவியுள்ளது.

அங்கு 3 பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

‘காசாவின் மத்திய பகுதியில் அவர்கள் மருத்துவ உதவி பெற்றிருந்தனர். சிகிச்சை பலன் இல்லாமல் பிள்ளைகள் பட்டினியால் உயிரிழந்தனர். பஞ்சம் பரவியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை’ என்று நிபுணர்கள் கூறினர்.

காசா மக்களைப் பட்டினியில் வைக்க இஸ்ரேல் திட்டமிடுகிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

டோஹாவில் பேச்சு

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் என்று ஹமாஸ் அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் டாஹாவில் நேற்று ஆரம்பமான புதிய சுற்று பேச்சுவார்த்தையில் எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுப் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கூடிய விரைவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கருத்தொருமையை பெறுவதற்கு உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான எகிப்து பாதுகாப்பு தூதுக்குழு டோஹா சென்றிருப்பதாக அல் கஹ்ரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும் பேச்சுவார்த்தைகள் இன்று கெய்ரோவுக்கு திரும்பவிருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர் டேவிட் பர்னீயும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். எனினும் இது தொடர்பில் பதில் அளிக்க இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க மத்திய உளவுப் பிரிவு தலைவர் வில்லியம் பர்ன்ஸ், டோஹா சென்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

ஒரு வருடத்தை நெருங்கும் காசா போரில் எகிப்து மற்றும் கட்டார் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. போர் நிறுத்த திட்டத்தில் ஹமாஸ் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டில் சில சமரசங்களைச் செய்துகொள்ள முன்வந்தது.

எனினும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டாலும் ஹமாஸை ஒழிக்கும் போரின் இலக்கு நிறைவேறும் வரை போரை தொடர்வதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு உறுதியாக உள்ளார்.

காசா நகரில் புதிய போர் நடவடிக்கையை மேற்கொண்டது உட்பட நெதன்யாகு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மேலும் இடையூறுகளைச் செய்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.   நன்றி தினகரன் 




காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலால் போர் நிறுத்தப் பேச்சு சீர்குலையும் நெருக்கடி 

காசா நகரில் இருந்து தொடர்ந்தும் மக்கள் வெளியேற்றம்

July 10, 2024 6:00 am 

காசா பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் இஸ்ரேல் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் மேலும் 18 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த முயற்சியை சீர்குலைக்கும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான முயற்சியை அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் வேகப்படுத்தியுள்ளனர்.

எனினும் போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகரின் ஷஜையா, சப்ரா மற்றும் டெல் அல் ஹவா போன்ற பகுதிகளில் ஆழ ஊடுருவி வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு கடந்த திங்களன்று காசா போர் வெடித்தது தொடக்கம் ஊக்கிர தாக்குதல்கள் இடம்பெற்ற நாட்களில் ஒன்றாக இருந்தது.

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, வடக்கு காசாவின் காசா நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியதரைக்கடலை நோக்கி மேற்காகவும் தெற்காகவும் வெளியேறி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் ‘பேச்சுவார்த்தை செயற்பாடுகளை மீண்டும் ஆரம்ப நிலைக்கே தள்ளிவிடும்’ என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.

‘காசாவில் தற்போது நடைபெறுவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு பேச்சுவார்த்தை செயற்பாடுகளை மீண்டும் ஆரம்ப நிலைக்கே தள்ளிவிடும்’ என்று ஹனியே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாதையில் ஏற்படும் சரிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது இராணுவமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல் அல் ஹவா பகுதியில் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதப் பிரிவுகள் குறிப்பிட்டுள்ளன.

மறுபுறம் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் நிலைகொண்டிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்திருக்கும் நிலையில் காசா நகரில் தொடர்ந்து துருப்புகள் படை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மத்திய காசாவின் அல் நுஸைரத் மற்றும் டெயிர் அல் பலாவில் உள்ள இரு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் ஒன்பது போர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் தெற்கு முனையில் உள்ள ரபா நகரின் டெல் அல் சுல்தான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலியானதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பான்மையானோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலரும் சனநெரிசல் மிக்க கூடாரங்களில் தங்கி வருகின்றனர்.

இதில் காசாவில் போர் வெடித்த ஆரம்பத்திலேயே வடக்கு காசாவில் இருந்து மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல் அவர்கள் மீண்டும் வீடு திரும்புவதையும் மறுத்து வருகிறது. இந்நிலையிலேயே இஸ்ரேல் அங்கு மீண்டும் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

‘கடுமையான தாக்குதலுக்கு மத்தியில் இருளில் வெளியேறினோம்’ என்று மூன்று குழந்தைளின் தாயான செயிதா அப்தல் பக்கி தெரிவித்தார். ‘இது நான் வெளியேறும் ஐந்தாவது முறையாகும்’ என்றார். அவர் தற்போது டராஜ் பகுதியில் உறவினர்களுடன் அடைக்கலம் பெற்றுள்ளார். இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவுக்கு ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘பொதுமக்கள் மீதான புதிய உத்தரவு அதிர்ச்சி தருவதாக உள்ளது. அவர்ளின் பலர் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை இடம்பெற்று வரும் மற்றும் பொதுமக்கள தொடர்ந்து கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்து வரும் பகுதிகளுக்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியில் நுஸைரத், கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளிலும் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக ரபாவில் கடந்த மே ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலியப் படை முன்னேறி வருவதோடு வான், தரை மற்றும் கடல் வழியாக உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காசா போர் தற்போது ஒன்பது மாதங்களைத் தாண்டி இருக்கும் நிலையில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,000ஐ தாண்டியுள்ளது.

நன்றி தினகரன் 






காசா நகரில் இஸ்ரேல் பாரிய தாக்குதல் பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம்

பலரும் பலி: பெரும் எண்ணிக்கையானோர் வெளியேற்றம்

July 9, 2024 8:02 am 0 comment

காசா நகர் மீது இஸ்ரேலிய படை நேற்று (08) சரமாரித் தாக்குதல்களை நடத்தியதோடு நகரின் மையப்பகுதியை நோக்கி பல முனைகளில் இருந்து டாங்கிகள் முன்னேறி வந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இங்கு நடத்தப்படும் கடுமையான தாக்குதலாக இது உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சத்தை வெளியிட்டிருக்கும் காசா சிவில் அவசர சேவை பிரிவு, நகரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுவதால் மீட்புக் குழுவினரால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் அமைந்திருக்கும் காசா நகரின் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் குண்டுகள் வீசப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல அடுக்குமாடிக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய டாங்கி ஒன்று மக்களை மத்தியதரைக் கடலுக்கு அருகில் மேற்கு வீதியை நோக்கி தள்ளியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘எதிரிகள் எமக்குப் பின்னால் இருப்பதோடு கடல் எமக்கு முன்னால் இருக்கும் நிலையில் நாம் எங்கே போவது?’ என்று காசா நகர குடியிருப்பாளர் ஒருவரான அப்தல் கனி என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.‘டாங்கிகளில் இருந்து செல் குண்டுகளும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளும் எரிமலை ஒன்று போல வீதிகள் மற்றும் வீடுகளில் விழுந்து வருகின்றன. மக்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடுகிறார்கள். எங்கே செல்வது என்று யாருக்கும் தெரியவில்லை’ என்று சாட் செயலி வழியாக அப்தல் கனி குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போராளிகளின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

காசா போர் பத்தாவது மாதத்தை எட்டி இருக்கும் நிலையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒன்றை மத்தியஸ்தர்களான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்களில் 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதை அடுத்து வெடித்த போரில் இஸ்ரேலின் தாக்குதல்களில் தினசரி கணிசமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,193 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் குறைந்தது மூன்று திசைகளால் முன்னேறி வருவதாக காசா நகர குடியிருப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். இஸ்ரேலிய படை வான் மற்றும் தரை வழியாக கடுமையாக தாக்குதல் நடத்தும் நிலையில் டாங்கிகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்திருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பன இடங்களை நோக்கி சென்றபோதும் அவ்வாறான பாதுகாப்பான இடத்தை கண்டறிய முடியாத நிலையில் பலரும் வீதி ஓரங்களில் உறங்குவதாக கூறப்படுகிறது.

காசா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு பப்டிஸ்ட் மருத்துவமனையில் ஏற்கனவே மக்கள் நிரம்பி இருக்கும் நிலையில் அவர்கள் அங்கிருந்து இந்தோனேசிய மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு புறநகர் பகுதியான சுஜையாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படை நடவடிக்கை குறித்து முன்கூட்டியே பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு வீதிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இங்கு ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலிய படையுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு காசா நகரில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீனிய பத்தா அல் அக்ஸா தியாகப் படை தெரிவித்துள்ளது.

 

போர் நிறுத்த எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவின் முக்கிய அம்சம் ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு இணங்கிய நிலையில் போர் நிறுத்தம் ஒன்று பற்றி காசா குடியிருப்பாளர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது இஸ்ரேல் தனது தூதுக் குழுவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்புவதற்கு வழிவகுத்துள்ளது.

இதில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையே ஹமாஸ் கைவிட்டுள்ளது. இதற்கு பதில் ஆறு வார முதல் கட்ட பேச்சுவார்த்தை ஊடாக அதனை அடைய ஹமாஸ் இணங்கி இருப்பதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கை போரின் இலக்குகள் நிறைவேறும் வரை இஸ்ரேல் போர் இடுவதை தடுக்கக் கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்தப் போருக்கான இலக்குகளாக ஹமாஸ் அமைப்பின் படைப்பலம் மற்றும் அரச திறனை ஒழிப்பது மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பது ஆகிய விடயங்களை இஸ்ரேல் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

இஸ்ரேலிய தாக்குதல்களை இப்போது நிறுத்துவது பாரிய தவறு ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிச் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்மொட்ரிச் யூதக் குடியேற்ற ஆதரவு கட்சியின் தலைவர் என்பதோடு அந்தக் கட்சி இஸ்ரேலிய கூட்டணி அரசின் அங்கமாக உள்ளது.

எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ‘ஹமாஸ் வீழ்ச்சி கண்டு போர் நிறுத்தத்திற்கு மன்றாடி வருகிறது. எதிரியை நசுக்கி தகர்க்கும் வரை கழுத்தை நெறிக்கும் நேரம் இது. அதனை முடிப்பதற்கு முன்னர் இப்போது நிறுத்தினால் அவர்கள் மீண்டு எமக்கு எதிராக மீண்டும் போராடுவார்கள். இது அர்த்தமற்ற முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் படை வாபஸ் பெற்ற காசாவின் ஷுஜையா தரைமட்டம்; 60 சடலங்கள் மீட்பு

July 13, 2024 11:36 am 

காசா நகரின் ஷுஜையா பகுதியில் இஸ்ரேலியப் படை இராணுவ நடவடிக்கையை நிறைவு செய்த நிலையில் அங்கு இடிபாடுகளில் இருந்து சுமார் 60 சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகள் காரணமாக ஷுஜையாவில் உள்ள 85 வீதத்துக்கும் அதிகமான குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு மனிதர் வாழ தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டிருப்பதாக உள்ளூர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இங்கு 60,000க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது.

இங்கு இஸ்ரேலிய படை வெளியேறும் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியது பற்றி பார்த்தவர்கள் விபரித்திருந்தனர். இந்நிலையில் அந்தப் படை வாபஸ் பெற்ற பின்னர் பேரழிவுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டு வார படை நடவடிக்கைக்குப் பின்னரே இஸ்ரேலியப் படை ஷுஜையாவில் இருந்து கடந்த புதன்கிழமை வாபஸ் பெற்றது. ‘இங்கு இடிபாடுகளின் கீழ் மேலும் பல டஜன் உடல்கள் சிக்கி உள்ளன’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசால் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

‘தெருக்களில் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன, துண்டாக்கப்பட்ட உடல்கள் உள்ளன. முழு குடும்பங்களின் உடல்கள் உள்ளன, ஒரு முழு குடும்பத்தின் உடல்கள் முழுவதுமாக எரிக்கப்பட்ட வீட்டுக்குள் உள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷுஜையா குடியிருப்பாளர் ஒருவரான முஹமது நயிரி, தாமும் ஏனையவர்களும் அங்கு திரும்பியபோது விபரிக்க முடியாத அழிவுகளை கண்டதாகவும் அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டிருப்பதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஷுஜையாவில் இருந்து இஸ்ரேலியப் படை வெளியேறியபோதும் காசா நகரில் இஸ்ரேலில் குண்டுவீச்சுகள் தொடர்வதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதலும் நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டாங்கிகள் மற்றும் துருப்புகள் நகரின் மற்ற பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 32 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் காசாவின் வடக்கு மற்றும் தெற்கில் மோதல்கள் உக்கிரம் அடைந்துள்ளன.

காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட சுருக்கமான அறிவிப்பில், ‘இஸ்ரேலிய படைகளினால் தொடர்ந்து படுகொலைகள் இடம்பெறுவதன் காரணமாக சிறுவர்கள் மற்றும் பெண்களை பெரும்பான்மையாகக் கொண்ட உயிர்த்தியாகம் செய்த 32 பேரின் உடல்களும் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவின் பல இடங்களிலும் 70 க்கும் அதிகமான வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஹமாஸ் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடக்கில் காசா நகர், மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாம் மற்றும் தெற்கில் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் 38,400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு 88,300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தவிர, கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் சுமார் 6,400 பலஸ்தீனர்கள் காணாமல்போயிருப்பதாக சர்வதேச செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த சங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பலரும் கட்டட இடிபாடுகளில் சிக்கி, அடையாளம் காணப்படாது அடக்கம் செய்யப்பட்டு அல்லது இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.

இதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டால் எகிப்து மற்றும் காசா எல்லையில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் வகையில் அங்கு மின்னணு கண்காணிப்பு முறை ஒன்றை நிறுவுவதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையாளர்கள் பேசி இருப்பதாக தெரியவருகிறது.

இந்த எல்லைப் பகுதியில் இஸ்ரேலியப் படை நிலைகொண்டிருப்பதை ஹமாஸ் மற்றும் எகிப்து எதிர்த்து வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் இந்த விவகாரமும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இங்கிருந்து துருப்புகள் வெளியேறினால் இந்த எல்லைப் பகுதியை எகிப்தில் இருந்து ஆயுதங்களை கடத்த ஹமாஸ் பயன்படுத்தக் கூடும் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில் கண்காணிப்பு முறை ஒன்றுக்கு இணக்கம் எட்டப்பட்டால் அது போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதை சுமூகமாக்கக்கூடும் என்றபோதும் இன்னும் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘காசா–எகிப்து எல்லையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை பாதுகாக்கும் ஒப்பந்தத்திற்கு மட்டுமே உடன்பட முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் மற்றும் எகிப்தில் இடம்பெற்று வருகின்றன.

இதில் 10 மாதங்களை எட்டியிருக்கும் காசா போரை நிறுத்துவது மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக பேச்சுகள் இடம்பெறுகின்றன.   நன்றி தினகரன் 







No comments: