அன்புச் சகோதரர்கள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 தமிழ் திரையுலகில் தனது உயரத்தைப் போலவே நடிப்பாலும் உயர்ந்து நிற்பவர் எஸ் வி ரங்காராவ். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் குணசித்திர நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர், காலமாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் ஒரு படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தார். இன்னும் சொல்லப் போனால் அவர் கடைசியாக தமிழில் நடித்த குறிப்பிட்டு சொல்ல கூடிய படம் இது என்று கூட சொல்லலாம் . அந்த படம்தான் 1973ல் வெளியான அன்புச் சகோதரர்கள்.


ஆரம்ப கால தமிழ் படங்களில் பிரபல பின்னணிப் பாடகராகத்

திகழ்ந்தவர் கண்டசாலா. இவருடைய தமிழ் உச்சரிப்பு சற்று அப்படி இப்படி என்று இருந்தாலும் பாடல்கள் சோடை போனதில்லை. இவர் காலமாவதற்கு முன்னர் தமிழில் ஓர் அருமையான பாடலை பாடினார். முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக என்ற பாடல் மிக பிரபலமாகி , சகோதர பாசத்தை எடுத்துக் காட்டியது. இந்த பாடல் இடம் பெற்றதும் இந்த அன்புச் சகோதரர்கள் படத்தில்தான். இப்படி தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர்கள் இருவரும் தங்கள் முத்திரையை இந்தப் படத்தில் பதித்து விட்டு போனார்கள்.

எம் ஜி ஆர் நடிப்பில் கலரில் மாட்டுக்கார வேலன் , ராமன் தேடிய சீதை என்ற இரண்டு வெற்றி படங்களை தயாரித்த ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை , அதன் பின் எம் ஜி ஆரை விட்டு நீங்கி சிவாஜியின் நடிப்பில் சிவகாமியின் செல்வன் படத்தை கலரில் ஆரம்பித்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சிறிய பஜெட்டில் இந்த படத்தை கறுப்பு வெள்ளையில் தயாரித்தார். ஆனாலும் நல்லதொரு கதையம்சத்துடன் கூடிய படத்தையே தயாரித்தார்.

கிராமத்தில் பாசமான நான்கு சகோதரர்கள். ஒற்றுமையான இவர்கள் நடுவே பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது. ஒரு சகோதரனின் பணக்கார மனைவி மூலமாகவும், ஊருக்கு வரும் கோடீஸ்வரி ஒருத்தி மூலமாகவும் குடும்பத்தில் பிரச்னைகள் தலை தூக்கி வறுமை நர்த்தனமாடுகிறது. காரண காரியம் தெரியாமல் தடுமாறும் குடும்பம் மீண்டும் ஒன்று பட்டதா , உருப்பட்டதா என்பதே படத்தின் கதை.


மூத்த சகோதரராக வரும் ரங்காராவ் மிக இயல்பாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார். அவர் தாறுமாறாக பேசும் இங்கிலீஷாகட்டும், உணர்ச்சிவசப்பட்டு சகோதரர்களிடம் பேசுவதாகட்டும் , குடும்பத்துக்காக வருந்துவதாகட்டும் , நடிப்பில் உயரம் தொடுகிறார். ஏவி எம் ராஜனுக்கு கலங்கும் பாத்திரம் . சுந்தரராஜன் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஜெய்சங்கருக்கு துடிப்பான வேடம். காதலி வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் கட்டிப் புரளுவதில் இருந்து , வில்லனுடன் கட்டிப் புரண்டு சண்டை போடுவது வரை எல்லாம் ஓகே . சோவின் காமெடி எடுபட்டது. வி கே ராமசாமி, மனோரமா காமெடி ஒரே இரைச்சல். இவர்களுடன் பிரமிளா, ஸ்ரீகாந்த், வெண்நிற ஆடை மூர்த்தி, வி எஸ் ராகவன், எஸ் என் லஷ்மி, ரோஜாரமணி ஆகியோரும் நடித்தார்கள்.

படத்தின் இரண்டு ஹய்லைட் பாத்திரங்கள் தேவிகா, ஜமுனா.

இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை நன்றாகவே வழங்கினார்கள். குறிப்பாக பழி வாங்கும் மாலினிதேவியாக நடிக்கும் போதும் காட்டும் அலட்சியம், அகங்காரம், பின்னர் மகள் மீதுள்ள பாசத்தால் துடிக்கும் போதும் ஜமுனாவின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இருவரும் சந்திக்கும் காட்சி பிரமாதம். நீண்ட காலத்துக்கு பிறகு ஜமுனா நடித்த தமிழ் படம் இது.

படத்துக்கு வசனம் ஏ எல் நாராயணன். பல இடங்களில் அவரின் வசனம் கவனத்தை கவரும் வண்ணம் கருத்தோடு அமைந்தது. தலைப் பாரத்தை இறக்கி வைத்து விடலாம் மனப் பாரத்தை எங்கே இறக்குவது, ஆண் புலியால் மட்டும் தான் சீறலாம்னு நெனெச்சேன்

ஆனால் பெண் புலியாலும் சீற முடியும்னு காட்டிட்டே, ஆரத்தி காட்டி வரவேற்கவில்லைனு கோபமா இல்லை பாதபூஜை செய்யவில்லைனு ஆத்திரமா , சமாளிக்கிறீங்களா இல்லை சமரசத்துக்கு ஆரம்ப வார்த்தையா போன்ற வசனங்கள் கூர்மையாக ஒலித்தன.

படத்தை வி ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய கண்ணதாசன், வாலி இயற்றிய பாடல்களுக்கு கே வி மகாதேவன் இசையமைத்தார். பிரபாகர் ரெட்டி எழுதிய கதைக்கு திரைக் கதை எழுதி நல்ல முறையில் இயக்கியவர் லஷ்மிதீபக். தெலுங்கு திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் இயக்கிய ஒரே படம் அன்புச் சகோதரர்கள் தான் !

No comments: