நவம்பர் 17 : சீர்மியத்தொண்டராகவும் இயங்கும் இலக்கியவாதி கோகிலா மகேந்திரன் முருகபூபதி

இம்மாதம் 17 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடும் எழுத்தாளர்,  சீர்மியத் தொண்டர், திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை நான் முதல் முதலில் சந்தித்த ஆண்டு 1984.

அவரது எழுத்துக்களை ஊடகங்களில் படித்திருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு முன்னர் கிட்டவில்லை.

கோகிலாவின் இரண்டாவது கதைத் தொகுதி முரண்பாடுகளின் அறுவடை நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவரான பொன்னரி ( இயற்பெயர் கனகசிங்கம் ) வீரகேசரியில் எனது சமகால ஊழியர்.

அந்த நூலுக்கு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் அதிபர் எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் ( தசம் ) அவர்களின் தலைமையில் வெளியீட்டு அரங்கினை  ஒழுங்குசெய்துவிட்டு, என்னை  உரையாற்ற வருமாறு கோகிலா கடிதம் எழுதி அழைத்திருந்தார்.

அக்காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி எனும்  பத்தி எழுத்தை எழுதிவந்தேன்.

அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் ஊடாக  நான்தான் அந்த ரஸஞானி என அறிந்துகொண்டு, என்னை  உரையாற்ற வருமாறு அழைத்ததுடன், எனது பொருளாதார நிலையறிந்தோ என்னவோ, எனது பயணப்போக்குவரத்துச்செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார்.

அத்தகைய விந்தையான ஆளுமை கோகிலா மகேந்திரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கூறியவறே இந்தப்பத்தியை எழுதுகின்றேன்.

குறிப்பிட்ட நூல் வெளியீட்டு விழாவுக்கு மல்லிகை ஜீவா, பேராசிரியர்கள் மெளனகுரு, சித்திரலேகா தம்பதியர் எழுத்தாளர்கள் புலோலியூர் இரத்தினவேலோன்,  வேல் அமுதன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர் மேத்தா தாசன் ஆகியோருட்பட பல கலை, இலக்கியவாதிகளும், ஆசிரியர்களும் மாணவர்களும் வருகை தந்திருந்தனர்.

மகாஜனா கல்லூரியின் துரையப்பாபிள்ளை அரங்கம் நிறைந்திருந்தது. அன்றுதான் அந்தக்கல்லூரியின் வாயிலில்  முதல் முதலாக நான் காலடி எடுத்து வைக்கின்றேன். அந்த வாயிலில் மலர்ந்த முகத்துடன் என்னை கைகூப்பி வணங்கி அழைத்துச்சென்றவர்தான் கடந்த அரைநூற்றாண்டு காலமாக சகோதர வாஞ்சையுடன் எமது இலக்கிய குடும்பத்தில்  உறவாடும் மனிதநேயப்பண்புகள் நிறைந்த கோகிலா மகேந்திரன்.

சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், விஞ்ஞானம், நாடகம், கலைஞர் வரலாறு, சீர்மிய பதிவுகள் முதலான துறைகளில் தொடர்ந்தும் எழுதிவரும் கோகிலா, சிறந்த பேச்சாளருமாவார்.

சீர்மியம்சார்ந்து இயங்கி, சமூகத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் பலரை, குறிப்பாக பெண்களை ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.

மருத்துவக்கல்லூரிக்கு  தெரிவானவர்.   அங்கு                                        உயிரினங்களை வெட்டிச்சோதித்து  படிக்கவேண்டியிருந்தமையால்,அந்தத்துறையிலிருந்து  நழுவிச்சென்று,  வேறு            துறைகளில்       பிரகாசித்தவர்களைப்பற்றி  அறிந்திருப்பீர்கள்.   

கோகிலாவும்  அவ்வாறே  மருத்துவக்கல்விக்கு  விடைகொடுத்தவர்தான். அதனால்  விஞ்ஞான  பாட நெறி  ஆசிரியரானார்.

உயிரினங்களை இறந்த கோலத்தில்  தரிசிக்க  மனவலிமையற்றிருந்த கோகிலா,           பின்னாளில்  மனோதத்துவ  நிபுணராகி,  உளவளச்சிகிச்சை   செய்யும்  சீரிமியத்தொண்டரானார்.

  பன்முக ஆளுமைமிக்கவர்.  வாழ்நாள்  முழுவதும்  தாவரபட்சணிதான்.

 கோகிலாவின்  தந்தை (அமரர்) செல்லையா  சிவசுப்பிரமணியம் சமய  இலக்கியங்கள்                          படைத்து,  தேசிய சாகித்திய  விருதும் பெற்றவர்.   கோகிலாவின்  கணவர்                மகேந்திரராஜா  கலை, இலக்கிய ஆர்வலர். அளவெட்டி  அருணோதயாக் கல்லுரியின் அதிபராக   பணியாற்றி  ஓய்வுபெற்றவர்.                        ஏக புதல்வன்   பிரவீணன்  2000  ஆம் ஆண்டில்   உயர்தரப் பரீட்சையில்  4 A  சித்தி  பெற்று அவுஸ்திரேலியாவுக்கு                             புலமைப்பரிசில்  பெற்றுவந்து,  பொறியியலாளரானவர்.               இலங்கையில்  கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்திலும்  சிறிதுகாலம்  விரிவுரையாளராக இருந்துவிட்டு,   தற்பொழுது                          சிட்னியில்  தமது  துறையில் பணியாற்றுகிறார்.  

 சில வருடங்களுக்கு முன்னர் கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணத்தில் நடந்த சீர்மீயம் தொடர்பான கருத்தரங்கொன்றில் நிகழ்த்திய உரையின் சில பகுதிகளை சமகாலத்தை கருத்தில்கொண்டு இங்கே தருகின்றேன்.

  அன்று கோகிலா  உளநல வேர்கள் எனும் தலைப்பில் உரையாற்றியிருந்தார்.

 கோகிலா என்ன சொல்லியிருக்கிறார்?  என்பதை பாருங்கள்.

  “ சர்வதேச நிறுவனமொன்றின் ஆய்வில் மனச் சோர்வு, பதகளிப்பு போன்ற உளப்பிரச்சினைகள் பரந்தளவில் காணப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதில் இலங்கை தொடர்பான தகவல்கள் இல்லை. சில வேளைகளில் இலங்கை தொடர்பில் சரியான தகவல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.  ஆனால், அதிகம் தற்கொலை செய்வோர் பட்டியலை வைத்து நோக்கினால், இந்த விடயத்திலும் இந்தியாவை விட நாங்கள் முன்னுக்கு இருக்கலாம் என்பதனை ஊகித்துக் கொள்ளலாம். போதைவஸ்து பாவனை, வீதி விபத்துக்கள், வாள்வெட்டுக்களால் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினைகளை நாங்கள் நித்தமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள வைத்திய நிபுணர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்துவிட முடியாது. போதியளவு உள வைத்திய நிபுணர்கள் எம்மத்தியில் இல்லை. இருக்கும் சில நிபுணர்களுக்கும் தீவிர உளப்பிரச்சினைகளுக்கு மட்டுமே சிகிச்சையளிபதற்கு நேரமுள்ளது. அதற்கு அடுத்த படிநிலையில் வேலை செய்யக்கூடிய உளவளப் பணியாளர்களும் போதிய அளவுக்கு இல்லை. இதனால், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
சமூக சேவை செய்வது என்பது ஒருவகையில் நியூட்டனின் மூன்றாவது விதி போன்றது. நாங்கள் என்ன செய்கிறோமோ அது எங்களுக்கு திரும்பி வரும். நியூட்டன் சடப் பொருள்களுக்கு கூறியிருந்தாலும், மனிதனுக்கும் மிகச் சரியாகவே அது பொருந்துகிறது.

 நாங்கள் என்ன செய்கிறோமோ அதுதான் எங்களுக்கு திரும்பி வரும். நான் இவ்வளவு பேருக்கு உதவி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றேன் என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய விடயம் இல்லை. இந்த சுய கணிப்பு உளவளத்திலே  மிகப்பெரியதொன்று. அதை பெற்றுக் கொள்கின்றவர்கள் மிக நீண்ட காலம் வாழ்கின்றார்கள். சமூக சேவைப் பணிகளிலே நீண்டகாலம் இருபவர்களது ஆயுள் நீண்டது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

 அதை நிறுவக்கூடியவர்கள் எங்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் வயது போனாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. மனம் இளமையாக இருக்கிறது. சமூக சேவை என்பது சமுதாயத்தின் நல்லெண்ணத்தை பெற்றுக் கொள்கின்ற விடயம். 

 மனச்சோர்வுடன் மன அழுத்தங்களுடன் வாழ்பவர்களுக்கு கோகிலா மகேந்திரனது சிந்தனைகளை சமர்ப்பிக்கின்றேன்.

No comments: