இலங்கைச் செய்திகள்

 நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு “அனைவருக்கும் ஆங்கிலம்” 2030க்குள் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும்

யாழ். நகரில் இளையோரை குறிவைத்து போதை விருந்து ஒருபோதும் ஏற்க முடியாது என்கிறார் சுகாஷ்

 விசாரணை அறிக்கை சிறப்புரிமை குழுவுக்கு        டயனா கமகே விவகாரம்

அமெரிக்க தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை



நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் 

புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு 

“அனைவருக்கும் ஆங்கிலம்” 2030க்குள் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும்

November 17, 2023 7:57 am 0 comment

 

சிங்கள, தமிழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை இருப்பின் உடனடியாக வந்து நாட்டின் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுமாறு தமிழ்,சிங்கள புலம்பெயர்ந்தோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழுக்கு அப்பால் மொழி அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற டி.எஸ்.எஸ் நிகழ்வின் போது 2030 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் “அனைவருக்கும் ஆங்கிலம்” நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார்.

அமரர் ஆர்.ஐ.டி. பிரபல கல்வியாளரும் டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தின் ஸ்தாபகருமான அலஸின் 10 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு,

“எனது பாதை” என்ற சுயசரிதை நூலை ஜனாதிபதி வெளியிட்டார். இலங்கையில் கல்வித்துறையை சீர்திருத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆர்.ஐ.டி. “அனைவருக்கும் கல்வி” என்ற அலஸின் நோக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடி காரணமாக மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இழப்பதை ஏற்க முடியாதென்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சொத்துக்களை விற்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை ஜனாதிபதி விக்கிகிரமசிங்க கோடிட்டுக் காட்டினார்.

இந்த முயற்சிக்கு பங்களிக்கும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு அரசு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

மேலும், சிங்களம் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோரை இலங்கைக்குத் திரும்பி புதிய பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்,   நன்றி தினகரன் 



 

யாழ். நகரில் இளையோரை குறிவைத்து போதை விருந்து 

ஒருபோதும் ஏற்க முடியாது என்கிறார் சுகாஷ்

November 16, 2023 6:28 am 

யாழ். நகரில் இளைஞர்களை குறிவைத்து அரங்கேற்றப்படும் போதை விருந்து, களியாட்டங்களை ஒருபோதும் ஏற்கமுடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற

களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள “X” தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ். நகரில் இளையோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட போதை விருந்து களியாட்டத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது. குறித்த தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாமெனவும் அவரது பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





விசாரணை அறிக்கை சிறப்புரிமை குழுவுக்கு        

டயனா கமகே விவகாரம்

November 16, 2023 6:00 am 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, எம்.பிக்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை, சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி

வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுக் காலை சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர், இதனைத் தெரிவித்தார்.

2023 ஒக்டோபர் 20இல்,பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, ரோஹன பண்டார, சுஜித் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப்பாராளுமன்றத்தில் அறிக்கையிட, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார்.

இதற்கமைய இக்குழுவின் உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேற்படி குழு, நான்கு தடவைகள் கூடியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை, அதன் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவினால் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்





அமெரிக்க தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

- மட்டக்களப்பில் American ihub திறந்து வைப்பு!

November 15, 2023 3:18 pm 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (15) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதோடு, அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார்.

இதன்போது அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பு சரவணா வீதியில் அமெரிக்க அரசினால் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் American ihub திறந்து வைப்பு!

மட்டக்களப்பு, கல்லடியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையமானது மாணவர்கள், உயர் தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக்கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், விசேடமாக இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக பிரதானிகள்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S. ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் L.P. மதநாயக்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன்




இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை

- சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் உத்தரவாதம்

November 15, 2023 2:34 pm 

– குரல்கள் இயக்கத்தின் முயற்சியால் உரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது

இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை என, சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை உத்தரவு கோரும் (Writ) வழக்கு அண்மையில் (07) முடிவிற்கு வந்தது.

தனது கலாசார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, ஆசிரியை பஹ்மிதா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார்.

பாடசாலை அதிபர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவிற்கு வந்ததிருந்தது.

எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும்.

அந்த வகையில் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், சண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்ட மாஅதிபர் திணைக்களம் ஆகியன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை எனும் உத்தரவாத்தினை எழுத்து மூலம் வழங்கியதை அடுத்து இவ்வழக்கு முடிவிற்கு வந்தது.

இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இன்று ஆஜராகி இருந்தனர்.

குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு சார்பாக ஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




 

No comments: