தெல்லிப்பழை மகாஜனா ஸ்தாபகரின் வழித்தோன்றல்
பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் 1910 ஆம் ஆண்டளவில் திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலை, படிப்படியாக வளர்ந்து, அபிவிருத்தி கண்டு, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியாக உயர்ந்தது.
அதன்பின்னர், 12 ஆண்டுகள் கடந்த நிலையில் 1984 ஆம் வருடம், அக்கல்லூரியில் நடந்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் ‘முரண்பாடுகள் அறுவடை’ கதைத்தொகுப்பு வெளியீட்டு அரங்கில் உரையாற்றுவதற்கு சென்றேன்.
பல இலக்கிய மற்றும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டிருக்கும் மகாஜனா கல்லூரியின் வழித்தோன்றலான தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது செய்தியாகிப் போனார். வழக்கம் போன்று காலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் அவர் கடந்த 08 ஆம் திகதி விபத்தொன்றில் காலமானார்.
அடிக்கடி அமெரிக்காவிலிருக்கும் தனது மைத்துனர் ராஜலிங்கம் அவர்களுடன் மெய்நிகர் ஊடாக உரையாடி ஆன்மீகம் முதல் அனைத்துலக அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகள், உடல் – உள நலம் சம்பந்தமான சந்தேகங்கள் பற்றியெல்லாம் உரையாடி வந்திருப்பவர்தான் தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா.
நவம்பர் 06 ஆம் திகதியும் அவ்வாறு அமெரிக்காவிலிருக்கும் மைத்துனருடன் உரையாடிவிட்டு, திரும்பி வந்து உரையாடலின் சாராம்சம் தொடர்பாக பதில் எழுதுவேன் எனச்சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்தான் மீண்டும் திரும்பி வரவில்லை.
அன்றைய தினமும் நடைப்பயிற்சியிலிருந்தவரை கார் ஒன்று மோதியதால், அவர் மரணமானார்.
1988 களில் அவரை விக்ரோரியா இந்து சங்கத்தின் (இச்சங்கம்தான் அதே ஆண்டு விக்ரோரியா மாநிலத்தில் கரம்டவுண்ஸ் என்ற இடத்தில் தைப்பொங்கல் தினமன்று ஸ்ரீசிவா – விஷ்ணு ஆலயத்திற்கான அடிக்கல்லையும் நாட்டியது.) பிரார்த்தனை நிகழ்ச்சிகள் Prahran Migrant Centre இல் வெள்ளிக்கிழமை தோறும் நடந்த வேளைகளில் அவரைச் சந்தித்திருக்கின்றேன்.
அவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவராயிருந்தமையினால், அந்த மாணவர் சங்கத்தின் விக்ரோரியா மாநில கிளையில் இணைந்து இயங்கியவாறு பல ஆக்கபூர்வமான பணிகளை கல்லூரிக்காக முன்னெடுத்தார்.
இதே கல்லூரியின் முன்னாள் மாணவியும், பின்னாளில் அக்கல்லூரியிலேயே ஆசிரியையாக பணியாற்றியவரும், படைப்பிலக்கியவாதியுமான திருமதி கோகிலா மகேந்திரன் மெல்பனுக்கு வருகை தந்தபோது, பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றிருந்தார். அக்கல்லூரியில் கற்ற பல மாணவர்களின் கல்வித்தேவைகளுக்காக தொடர்ந்தும் தனது உழைப்பினையும் வருவாயில் கணிசமான தொகையினையும் நல்கிய பெருந்தகைதான் ஸ்ரீஸ்கந்தராஜா.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமிருந்தாலும், கலை, இலக்கியத்தை ரசிப்பதிலும் நேசிப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.
பாரதியின் கவிதைகளில் ஈடுபாடுகொண்டிருந்த அவர், பாரதியின் ஏழைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகளினாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தார். கரம்டவுண்ஸ் ஸ்ரீ சிவா – விஷ்ணு ஆலயத்தில் இளம்தலைமுறை சிறார்களுக்காக அவர் சமய வகுப்புகளும் நடத்தியிருப்பதை அவதானித்திருக்கின்றேன். மகாபாரதக்கதைகள், இராமாயணக்கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லிக்கொடுக்கும்போதும் அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய நண்பரும், எழுத்தாளரும், சமூகச்செயற்பாட்டாளரும் கீழடி அகழ்வாராய்சி தொடர்பாக எழுதியும் பேசியும் வருபவருமான அ. முத்துக்கிருஷ்ணன் மெல்பனுக்கு வருகை தந்து புத்தகங்களை வாசிப்போம் நேசிப்போம் என்ற தொனிப்பொருளில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அன்னாரும் கலந்துகொண்டார்.
அன்னாரின் இறுதி நிகழ்வின்போது இரங்கலுரையாற்றிய அன்பர்கள் சம்பந்தன், இரத்தினம் கந்தசாமி, ராஜலிங்கம் மற்றும் செல்வப் புதல்வன் மனுபிரணவன் ஆகியோரின் உரைகள் தொகுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. எம்மத்தியில் இப்படியும் ஒரு மனிதநேயப் பண்பாளர், ஏழைத்தமிழ் மணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர்களது உரைகள் சொல்லிக்கொண்டே இருக்கும். எஞ்சியிருப்பது அவர் பற்றிய பசுமையான நினைவுகள்தான்.
லெ. முருகபூபதி…
அவுஸ்திரேலியா
நன்றி தினகரன்
No comments:
Post a Comment