லவகுசா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 இந்தியத் திரைப்படங்களின் பெரும்பாலான கதைகள்


இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களில் இருந்து எடுக்கப் பட்டவைதான் என்பது சில திரைப்பட ஆய்வாளர்களின் கருத்தாகும். காரணம் அந்த இரண்டு நூல்களிலும் அடங்கியிருக்கும் கதைகள். கிளைக் கதைகள், தத்துவங்கள், என்பன பல நூறு கதைகளைக் கொண்டதாகவே இருந்துள்ளது.


அப்படி ராமாயணத்தின் பிற்பகுதி கதையான ராமர்

அரசாள்வதையும், சந்தேகத்தின் பேரில் சீதையை அவர் காட்டுக்கு அனுப்புவதையும், அங்கே அவள் லவ, குசா என்ற இரு குழந்தைகளை பெற்றெடுப்பதையும் கதைக் கருவாகக் கொண்டு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தயாரான படம்தான் லவகுசா.

தெலுங்கு பட ரசிகர்களை பொறுத்த வரை அவர்கள் ராமரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் , தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் என் டி ராமராவ் மூலமாக அவரை பார்த்தார்கள். தரிசித்தார்கள். அந்தளவுக்கு ராமரின், கிருஷ்ணரின் மறு அவதாரமாகவே ரசிகர்களினால் ராமராவ் போற்றப்பட்டார். இதன் காரணமாக தெலுங்கில் தயாராகும் படங்களில் ராமர், கிருஷ்ணர் வேடம் என்றால் அந்த வேடத்தில் ராமராவ் தான் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

அந்த வகையில் தெலுங்கிலும், தமிழிலும் தயாரான லவ குசா படத்திலும் ராமராவ் ராமர் வேடம் தரித்தார். அவருக்கு இணையாக சீதை வேடத்தில் அஞ்சலிதேவி நடித்தார். ராம ராஜ்ஜியம் நடக்கும் காலத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியில் இருக்க ஒரே ஒரு சலவைத் தொழிலாளி தன் மனைவி மீது சந்தேகப்பட்டு , ராமர், சீதை இருவரையும் தூற்ற அது அறிந்து ராமர் தன பத்தினியை தனியாக வனவாசம் அனுப்புகிறான். இவ்வாறு அமைந்த கதை என்பதால் ராமராவ், அஞ்சலிதேவி இருவர் நடிப்பிலும் சோகமும், கவலையுமே மேவி இருந்தது. இருவரும் அதனை சிறப்பாக செய்திருந்தனர்.

இலட்சுமனணாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். வண்ணான் வேடத்தில் எம் ஆர் ராதாவும், அவர் மனைவியாக மனோரமாவுக்கு நடித்தனர். படத்தில் இவர்கள் தோன்றுவதும் சில நிமிடங்களே என்றாலும் , கதையோட்டத்துக்கு அவர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்பட்டது. அதே போல் வால்மீகியாக வரும் வி நாகய்யாவின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. கண்ணாம்பா, எஸ் வரலக்ஷ்மி, சந்தியா, ஆகியோரும் நடித்திருந்தனர்.


படத்தில் லவனாக பேபி உமாவும், குசனாக மாஸ்டர் முரளியும் நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். சில காட்சிகளில் அவர்களின் நடிப்பு உருக்கமாக இருந்தது. தந்தையுடன் அவர்கள் மோத தயாராகும் காட்சி விறுவிறுப்பாக அமைந்தது. படத்தின் வசனங்களை ஏ கே வேலன் எழுதினார். வசனங்கள் கருத்தாழத்துடன் தீட்டப்பட்டிருந்தது.

பாடல்களை ஏ மருதகாசி இயற்ற கே வி மகாதேவன் இசை வழங்கினார். படத்தில் பி. லீலா, பி.சுசிலா குரலில் இடம் பெற்ற ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே அதை செவி குளிர கேட்டிடுவோம் கேளுங்கள் இதையே பாடல் ஜெகம் எங்கும் பிரபலமானது. இதை தவிர கண்டசாலா பாடிய திருவளர் நாயகன் ஸ்ரீராமனே பாடலும் கவனத்தை ஈர்த்தது. படத்தில் சின்னதும், பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள்!

தெலுங்கில் முதல் முழு நீள கலர் படம் என்ற பெருமையை லவகுசா

பெற்றுக் கொண்டது. படத்தை ஒளிப்பதிவு செய்தவர் பி எல் ராய். தந்திர காட்சிகளை ரவிகாந்த் நிகாஷ் ஒளிப்பதிவு செய்தார். ஏ சஞ்சீவி படத் தொகுப்பை கையாண்டார். படத்துக்கு திரைக் கதை அமைத்தவர் பிரபல கதாசிரியர் சதாசிவப்ரம்மம்.

படத்தை இயக்கியவர் பழம் பெரும் இயக்குனர் சி புல்லையா . இவர் 1934ல் தெலுங்கில் இயக்கிய லவகுசா படத்தையே மீண்டும் 63ல் இயக்கி வெற்றி கண்டார். படத்தை ஏ சங்கர ரெட்டி தயாரித்தார்.

1958ல் தொடங்கப் பட்ட படப்பிடிப்பு நிதி நெருக்கடியால் இழுபட்டு 63ல் வெளிவந்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. அத்துடன் சிறந்த தெலுங்கு படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொண்டது. தமிழிலும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டது !

இப் படத்தில் ராமராக நடித்து ராம ராஜ்யத்தை அமைத்த ராமராவ் இருபது ஆண்டுகள் கழித்தது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகி ராம (ராவ் ) ராஜ்யத்தை நிறுவினார்!

No comments: