இலங்கைச் செய்திகள்

 இலங்கை, இந்திய கப்பல் சேவை விரைவில்

பொன்சேகா இராஜினாமா, வெற்றிடத்தை நிரப்பிய ஹக்கீம்

 சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ். தமிழர்

2300 நாட்களை கடந்து தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

கலைவாதி கலீல் காலமானார் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

பொலிஸாரின் தரப்பில் எந்த தவறும் கிடையாது


இலங்கை, இந்திய கப்பல் சேவை விரைவில்

இந்திய துணைத் தூதர் நம்பிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் நூறாவது விமானச் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றித் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் இலங்கையிடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானது.

இப்போக்குவரத்தை மேம்படுத்த இரு நாட்டு அரசுகளும் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 


 


பொன்சேகா இராஜினாமா, வெற்றிடத்தை நிரப்பிய ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு நேற்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளாரென்றும் அறிவித்தார்.   நன்றி தினகரன் 





சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ். தமிழர்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகுவதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

இவர், சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவி உள்ளிட்ட பிற பொறுப்புக்களிலிருந்தும் விலகுவாரென தெரிவிக்கப்படுகிறது.   நன்றி தினகரன் 





2300 நாட்களை கடந்து தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்று வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றுடன் 2,300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு

வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் நடக்கும் பந்தலுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் தொடருமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.   நன்றி தினகரன் 





கலைவாதி கலீல் காலமானார் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

புனைப்பெயரால் புகழ்பெற்ற கலைவாதி கலீல் நேற்று (09) வெள்ளிக்கிழமை காலமானார். மன்னார் மூர் வீதியை பிறப்பிடமாகக் கொண்ட கலைவாதி கலீல், மன்னார் நல்லாயர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து, மன்னார் அஸ்ஹர் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.ஆசிரியராக ஆரம்பித்த இவரது தொழிற்துறை,பல்வேறு பரிணாமங்களாக புகழ்பெறத் தொடங்கியது.அழுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்,ஓவியர் மற்றும் குறுங்கலை நடிகராகவும் திகழ்ந்தவர் இவர்.

ஊடகத்துறையிலும் கைதேர்ந்த கலைவாதி கலீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னோடிச் செயற்பாட்டாளர்.வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்களில் ஒன்றான "வில்பத்து" குறித்தும் இவர்,ஒரு நூலை எழுதியவர்.கலைவாதி கலீலின் மறைவுக்கு பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.அன்னாரின் ஜனாஸா நேற்று பாணந்தயைில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   நன்றி தினகரன் 




பொலிஸாரின் தரப்பில் எந்த தவறும் கிடையாது


கஜேந்திரகுமார் எம்.பி. விவகாரம்

அமைச்சர் டிரான் அலஸ்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரின் தரப்பில் எந்தகைய

தவறும் கிடையாதென, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி இவ்விவகாரம் தொடர்பில் நேற்று சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டபோது, பொலிஸாரைப் பார்த்து ''வாயை மூடு'' எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் பாராளுமன்ற உறுப்பினரல்ல எவர், அவ்வாறு கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதில் வழங்கினார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு மிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

இச்சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்வையிட்டேன். அதில் கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ளவில்லை. பொலிஸ் அதிகாரிகளை ''வாயை மூடு''என தரக்குறைவாக பேசியதையும் நான் அவதானித்தேன். பரீட்சை மண்டபத்தை அண்மித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாருடன் முரண்படும் வகையில் உரையாடியுள்ளார்.

ஒரு பொலிஸ் அதிகாரியின் கழுத்துப் பகுதியை பிடித்து இழுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அந்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலிருந்து ஓடியுள்ளார்.இவரும்,அங்கு கூடியிருந்தவர்களும் அவரை பின்தொடர்ந்து ஓடியுள்ளனர். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பொலிஸாருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸ் எனக் குறிப்பிட்டார்கள்.நான் அதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவில் உடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் நாட்டில் பல உள்ளன.

பொலிஸ் சீருடையில் இருந்தவருடன் நான் வாக்குவாதம் செய்யவில்லை.வேலிக்குப் பின்னால் ஆயுதமேந்திய பொலிஸார் சீருடையில் இருந்தார். அவர் எதுவும் பேசவில்லை.

சிவில் உடையில் இருந்தவர்தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆகவே, முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள். அந்த அறிக்கை மற்றும் காணொளிகளை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அந்த காணியின் வேலிக்கு பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள்.என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? எனக்கேட்டார். இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி சீருடையில், ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அவ்வாறு பேசவில்லை என்றார்.

இதன் போது குறிப்பிட்ட அமைச்சர், பொலிஸ் அதிகாரியை நோக்கி நீங்கள் ''நீ வாயை மூடு'', என முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள். பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அவ்வாறு கதைக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பொலிஸ் சேவைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 நன்றி தினகரன் 


No comments: