உலகச் செய்திகள்

 சவூதியின் உற்பத்திக் குறைப்பால் சர்வதேச எண்ணெய் விலை ஏற்றம்

ஆப்கான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் பிரதான அணை வெடித்து பாரிய வெள்ள அபாயம்

அணை உடைப்பினால் உக்ரைனில் அவசரநிலை

கனடாவின் காட்டுத் தீயினால் அமெரிக்காவில் புகைமூட்டம்

 உக்ரைனிய அணை உடைப்பால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

வட அமெரிக்காவில் காற்றின் தரம் பாதிப்பு


சவூதியின் உற்பத்திக் குறைப்பால் சர்வதேச எண்ணெய் விலை ஏற்றம்

குறைவடைந்து வரும் எண்ணெய் விலையை உயர்த்தும் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து குறைப்பதற்கு எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணங்கியுள்ளன.

எதிர்வரும் ஜூலையில் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை குறைப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருப்பதோடு 2024 இல் இருந்து நாளொன்றுக்கு மேலும் 1.4 மில்லியன் பீப்பாய்களை குறைக்க இலக்கு வைத்திருப்பதாக ஒபெக் பிளஸ் நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

உலக மசகு எண்ணெய் உற்பத்தியில் ஒபெக் பிளஸ் நாடுகள் 40 வீதத்தை பெற்றிருக்கும் நிலையில் அதன் முடிவுகள் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக உள்ளது.

ஆசிய வர்த்தகத்தில் நேற்று (06) பிரெண்ட் மசகு எண்ணெய் 2.4 வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 77 டொலர்களாக பதிவானது.

ரஷ்யா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) ஏழு மணி நேரம் நீடித்த ஒபெக் பிளஸ் கூட்டத்தில், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஒக்டோபர் தொடக்கம் ஒபெக் பிளஸ் முன்னெடுத்துள்ள மொத்த உற்பத்திக் குறைப்புகள் நாளொன்றுக்கு 3.66 மில்லியன் பீப்பாய்களை தொட்டிருப்பதாக ரஷ்ய பிரதமர் அலெக்சான்டர் நொவக் தெரிவித்துள்ளார்.

பெற்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டணியை உள்ளடக்கி இருக்கும் ஒபெக் பிளஸ் அமைப்பு, உலகளாவிய தேவையில் சுமார் 2 வீதமான நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்களை குறைக்க ஏற்கனவே இணங்கியுள்ளது.

“இந்த பேச்சுவார்த்தை மூலம் 2024 இறுதி வரை இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது” என்று நொவக் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் அமுலுக்கு வரும் வகையில் கடந்த ஏப்ரலிலும் எதிர்பாராத வகையில் நாளுக்கு 1.6 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்திக் குறைப்புக்கு இணக்கம் எட்டப்பட்டது. அந்த முடிவு எண்ணெய் விலையை அதிகரித்தபோதும் நிரந்தரமான மீட்சி ஒன்றை கொண்டுவரத் தவறியது.

இந்த ஒரு மில்லியன் பீப்பாய் குறைப்பானது தேவையெனில் ஜூலை மாதத்தைத் தாண்டியும் நீடிக்கப்படும் என்று சவூதி வலுசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்லஸிஸ் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில் எண்ணெய் உற்பத்திகள், விலை வீழ்ச்சி மற்றும் அதிக சந்தை ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டுள்ளது.

ஒபெக் அமைப்பு அதிக வலுசக்தி செலவுகள் ஊடாக உலக பொருளாதாரத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் விலைகளை கையாள்வதாகவும் மேற்கத்திய உலகம் குற்றம்சாட்டுகிறது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பில் ரஷ்யா மீதான தடைகளை அந்த அமைப்பு பொருட்படுத்துவதில்லை என்றும் குற்றம்சாட்டுகிறது.

எனினும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் மேற்கத்திய நிதிக் கொள்கை பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றிருப்பதோடு அது எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமது பிரதான ஏற்றுமதியின் பெறுமதியை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க தூண்டி இருப்பதாக ஒபெக் தரப்பு பதலளித்துள்ளது.   நன்றி தினகரன் 




ஆப்கான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பதில் மாகாண ஆளுநரின் இறுதிக் கிரியையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வட கிழக்கு பல்கான் மாகாண பதில் ஆளுநராக இருந்த நிசார் அஹமது அஹமதி இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை (08) நடந்த அவரது இறுதிக் கிரியையின்போது பள்ளிவாசலுக்கு அருகில் இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நிசாரின் படுகொலைக்கு இஸ்லாமிய அரசுக் குழு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

“வருகின்றவர்களை வரவேற்பதற்காக நான் பள்ளிவாசலுக்கு அருகில் நின்றிருந்தபோது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டு பள்ளிவாசல் அதிர்ந்தது” என்று சம்பவத்தை பார்த்த நசீர் அஹமது என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் மற்றும் இஸ்லாமிய அரசுக் குழு கடுமையான இஸ்லாமிய சித்தாந்தத்தை பின்பற்றுகின்றபோதும் இஸ்லாமிய அரசு “உலகளாவிய கலீபத்தை” நிறுவுவதில் அதிக ஆர்வத்துடன் உள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய அரசுக் குழுவுக்கு எதிராக தலிபான்கள் சுற்றிவளைப்புத் தேடுதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் அதேநேரம் தலிபான் அதிகாரிகளை இலக்குவைத்து இஸ்லாமிய அரசு குழு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.    நன்றி தினகரன் 





உக்ரைனின் பிரதான அணை வெடித்து பாரிய வெள்ள அபாயம்

ரஷ்யா, உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

தெற்கு உக்ரைனில் பரவலாக வெள்ளத்தை ஏற்படுத்தி இருக்கும் அணை ஒன்று தகர்க்கப்பட்டது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சோன் பிராந்தியத்தில் உள்ள சோவியட் காலத்து நோவா அணையை ரஷ்ய படை குண்டு வைத்துத் தகர்த்ததாக உக்ரைனிய இராணுவத்தின் தெற்கு கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அணையை சுற்றி வெடிப்புகள் இடம்பெறுவது மற்றும் அதன் வழி நீர் பாய்ந்து செல்வதை காட்டும் உறுதி செய்யப்படாத வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 30 மீற்றர் உயரம் மற்றும் 3.2 கி.மீ நீளம் கொண்ட இந்த அணை டினிப்ரோ நதியில் 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்த கிரிமியா பிராந்தியம் மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிசியா அணு உலைக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது.

“நீரின் வேகம் மற்றும் அளவு அதன் அழிவின் அளவை காண்பிப்பதோடு நீரில் மூழ்கக் கூடிய பகுதிகளை காட்டுவதாகவும் உள்ளது” என்று உக்ரைன் இராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் ஷெல் குண்டு தாக்குதலின்போதே இந்த அணை சேதமடைந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பயங்கரவாதச் செயல் என்று ரஷ்ய கட்டுப்பாட்டு நகர மேயர் நவொக் கஹவ்கா குற்றம்சாட்டினார். உக்ரைனிய தாக்குதல்களுக்கு ரஷ்யா பயங்கரவாதம் என்றே கூறி வருகிறது.

அணையை சுற்றியுள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து மணி நேரத்தில் நீர் மட்டம் ஆபத்தான நிலையை எட்டும் என்று நேற்று (06) எச்சரிக்கப்பட்டிருந்தது.   நன்றி தினகரன் 





அணை உடைப்பினால் உக்ரைனில் அவசரநிலை

உக்ரைனின் கெர்சன் வட்டாரத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நோவா காகோவ்கா அணை தகர்க்கப்பட்டதால் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றித் தவிப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்தார்.

கெர்சன் வட்டாரத்தில் நீர்மட்டம் அபாயகர அளவை எட்டிவிட்டது. அங்கு சில வாகனங்கள் நீரில் கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கியுள்ள வீடியோக்களை உக்ரைனியத் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டது. உக்ரைனின் நிப்ரோ ஆற்றில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் 42,000க்கும் அதிகமானோர் அபாயத்தில் உள்ளனர். வீட்டுக் கூரைகளிலும் மரங்களிலும் மக்கள் மீட்புப் பணியாளர்களுக்காகக் காத்திருக்கின்றனர். நோவா காகோவ்கா நகரில் 7 பேரைக் காணவில்லை.

உடைப்பு ஏற்பட்ட அணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷ்யா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.   நன்றி தினகரன் 





கனடாவின் காட்டுத் தீயினால் அமெரிக்காவில் புகைமூட்டம்

கனடாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. நியூயோர்க் நகரில் காற்றுத் தூய்மைக்கேடு உலகின் மிக மோசமான நிலையை எட்டியது.

உயர்தர முகக்கவசங்களை அணியும்படியும் கூடுமானவரை உட்புறங்களில் இருக்கும்படியும் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்திவருகின்றனர். விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளைப் பாடசாலைகள் ரத்து செய்துள்ளன. பிலடெல்பியா நகரில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருக்கும்படி குடியிருப்பாளர்களிடம் கூறப்பட்டது. இந்நிலையில் கனடாவில் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்களை அந்நாடடுக்கு அனுப்பியுள்ளது. கனடாவில் இதுவரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இதுவே மிக மோசமானது என வருணிக்கப்படுகிறது.

கனடாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் காட்டுத்தீ மூண்டுள்ளது. அவற்றுள் கியூபெக் மாநிலமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35,000 சதுர கிலோமீற்றர் நிலம் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டது. காட்டுத்தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடுகின்றனர்.   நன்றி தினகரன் 




உக்ரைனிய அணை உடைப்பால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

மோசமான விளைவை ஏற்படுத்துமென ஐ.நா எச்சரிக்கை

உக்ரைனில் உள்ள பிரதான அணை ஒன்றில் உடைப்பு எடுத்ததை அடுத்து டினிப்ரோ நதியை ஒட்டி இருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் சுமார் 42,000 மக்கள் வெள்ள அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

தெற்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு அணை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலால் பல டஜன் கிராமங்கள் நீரில் மூழ்கியதோடு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மனிதாபிமான அனர்த்தத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வெள்ளம் நேற்று (07) உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அணையில் இருந்து நீர் வெளியான நிலையில் அருகில் இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த குறைந்தது ஏழு பேர் காணாமல்போயிருப்பதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட நொவக் ககொவ்கா நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. “இது மோசமான மற்றும் நீண்டகால விளைவை ஏற்படுத்தும்” என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

தகர்க்கப்பட்டிருக்கும் ககொவ்கா அணை போரின் முன்னரங்கு பகுதியில் அமைந்திருப்பதோடு இந்த நீர் 150 கிலோமீற்றருக்கு அப்பால் சகோரிசியா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலை நீரை குளிரூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

உக்ரைனின் பதில் தாக்குதலை தடுக்கும் வகையில் ரஷ்யா இந்த அணையை தகர்த்திருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் ரஷ்யாவின் பாரிய பதில் தாக்குதல் ஒன்றை திசைதிருப்பும் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டிருப்பதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

இந்த அணைக்கு அருகில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியான கெர்சோனில் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்த அணையில் இருந்து கீழ்நோக்கி சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கெர்சோன் நகரில் கடந்த ஆண்டு உக்கிர மோதல் இடம்பெற்றது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை நீர் மட்டம் 3.5 மீற்றர் உயர்ந்திருந்தது.

இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகாதபோதும் இந்த வெள்ளம் பல உயிரிழப்புகளுக்கு காரணமாகலாம் என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 24 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு குறைந்தது 17,000 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக உக்ரைன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை எடுக்கப்பட்ட செய்மதி படங்களில் பல கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பது தெரிகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் உதவித் தலைவர் மார்டின் கிர்ப்த் செவ்வாயன்று பாதுகாப்புச் சபையில் பேசியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் வாழ்வாதாரங்களை இழக்கும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருப்பதாக எச்சரித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக போரில் அணைகளை குறிவைப்பதை ஜெனீவா உடன்படிக்கை வெளிப்படையாகத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




வட அமெரிக்காவில் காற்றின் தரம் பாதிப்பு

கனடாவில் இடம்பெற்று வரும் காட்டுத் தீ சம்பவங்களால் வட அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு காற்றுத் தரம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொரன்டோ மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் உட்பட ஒன்டாரியோ மற்றும் கியுபக்கில் உள்ள பிரதான நகரங்கள் காட்டுத் தீ புகையால் மூடப்பட்டுள்ளன. இந்த புகை தொலைதூரத்தில் இருக்கும் அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் கனக்டிகட் மாநிலங்களையும் அடைந்துள்ள சூழலில், அங்கு காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்றது’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கியுபக் மாகாணத்தில் இருந்தே அதிகம் புகை வெளியாகி வருகிறது. அங்கு 160 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது கனடா முழுவதும் 413 இடங்களில் காட்டுத் தீ பற்றியெரிகிறது. அவற்றுள் 249 இடங்களில் நெருப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.

அல்பர்ட்டா, நோவா ஸ்கோஷா, கியூபெக் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளன. சுமார் 26,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.    நன்றி தினகரன் 



No comments: