செல்வி விஜயாள் முகுந்தனின் பரத நாட்டிய அரங்கேற்றம் - செளந்தரி கணேசன்

 


May 28, 2023 அன்று Parramatta Riverside நிகழ்கலை அரங்கில் செல்வி விஜயாள் முகுந்தனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

அவ்வைத் தமிழானவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்என்னும் ஸ்ரீ கணேச சரணத்துடனும் புஷ்பாஞ்சலியுடனும் மலரும் அரும்பாய் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து, ஜதிகளும் ஸ்வரங்களும் கோர்வையாய் தொடர, அவற்றை விஜயாள் தனது அபிநயத்திலும் அசைவிலும் அழகான சரங்களாக மாற்றிக் கொண்டிருந்தார். அடுத்து இடம்பெற்றது வர்ணம்ஆஞ்சநேயம்”. அனுமனின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படைக்கப்பட்டிருந்தது இந்த அற்புதமான பகுதி. இராம தூதனான ஆஞ்சநேயரின் சாகசங்களை தனது அபிநயத்தினாலும் நடிப்பாலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.  வாயு புத்திரனான, இவர் இலங்கையில் இருந்து சீதையை மீட்பதற்கு , மலையை பெயர்த்தெடுக்கும் விதம், ஆஞ்சநேயரின் வலிமை, மாருதி செய்கின்ற சேட்டைகள், சீதாவைக்கண்டதும், ஜடாயுவாகப் பறந்து, அனுமனாகத் தாவுகின்ற விதம் என ஆஞ்சநேயரின் சிறப்புகளை சிறிதளவும் பிசகாமல் வெளிப்படுத்தியவிதம் அழகோ அழகு.  அனுமனைப் போற்றும் வகையில் பாடலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

அரங்கில் நிற்கும் ஒவ்வொரு கணமும், முகபாவங்களினாலும், நடன அசைவுகளினாலும் மேலதிகமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தார் விஜயாள். அயோத்தியில் ஆஞ்சநேயத்தை கண்முன்னே  கொண்டு வந்த அவரது ஆட்டத்தில் அரங்கமே மயங்கியிருந்தது.

அடுத்து வந்த பாடல்களுக்கும் தாமரையில் தவழும் அன்பு


முகமாகவும், காதல் மனநிலையை வெளிப்படுத்தும் அழகு முகமாகவும், புலியில் அமரும் ஆவேச முகமாகவும் பல ஸ்வரூபங்களை நம்முன் கொண்டு வந்தார். இறுதியில் தில்லானாவில் குதித்தாடிய அவரது கால்கள் சலங்கைகளுடன் பேசிய அழகே தனி. இறுதியாக அரங்கத்தினரின் கைதட்டலுடன் மங்களம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்த ஓர் அழகான கலை நிகழ்வாக விஜயாளின் அரங்கேற்ற நிகழ்வு அமைந்திருந்தது.


விஜயாளுக்கு
சிறு வயதுமுதல் நடனம் பயிற்றுவித்த குரு சிறீமதி அபிராமி குமரதேவன் அவர்களது  நடன வடிவமைப்பு, புதுமையும் பாரம்பரியும் கலந்து அருமையாக அமைந்திருந்தது. அகிலனின் குரல் வழமைபோல் இனிமையாகவும் கம்பீரமாகவும் இருந்தது. இசைக்குழுவினர் வயலின் இசையையும், புல்லாங்குழல் இசையையும், மிருதங்கத் தாளத்தையும் மிகவும் பிரமாதமாக வழங்கினர்.

தமிழ் பாடசாலையில் 12ம் வகுப்புவரை தமிழைக் கற்று பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்றவர் விஜயாள். தாய் மொழி மீது கொண்ட பற்றுக் காரணமாக விஜயாளின் பெற்றோர்கள் முகுந்தன், விஜி இருவரும் தமிழ் மற்றும் சமயம் சார்ந்த எல்லாத் துறைகளிலும் சிறு வயது முதல் விஜயாளைப் பங்கேற்கச் செய்து அவரது ஆற்றலையும் அறிவையும் மேலும் சிறப்பாக்கினார்கள் என்பது பாராட்டப்படவேண்டிது.

பெரியோரை மதித்தல், எல்லோரிடமும் பண்பாய் பழகுதல் போன்ற பல நற்பண்புகளை நான் விஜயாளிடம் சிறுவயதிலிருந்தே அவதானித்திருக்கிறேன். மூன்று வயதில் இருந்தே பேச்சு, பாட்டு, நடனம் என்று மேடைகளில் ஏறத் தொடங்கிய விஜயாள் மேடைக் கூச்சம் எதுவுமின்றி அரங்கை ஆக்கிரமித்திருப்பார் என்பது கூறித் தெரியவேண்டியதில்லை.   

 தமிழ் மொழியில் உள்ள ஆளுமை, இசைமீது உள்ள ஆர்வம் போன்றவை  விஜயாளின் ஆட்டத்தில் அழகாக வெளிப்பட்டிருந்தது. ஒவ்வொரு சொற்களையும் உணர்ந்து அதை உள்வாங்கி அதனுடன்  தன்னை அப்படியே ஐக்கியமாக்கி அவற்றை நளினமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை அரங்கிலிருந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள் போலும், கரகோசத்தின் ஓசை அதைக் கூறிக்கொண்டிருந்தது.

 பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றைப் புரிந்து பாடல்களுக்கேற்ற பாவங்களோடு மட்டுமல்ல, நளினத்தையும் ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் விஜயாள்

இன்றைய நிகழ்வில் தனது ஆடற்கலைத் திறமைகளையும், இயல்பான நளினங்களையும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாகக் கொடுத்த செல்வி விஜயாள் முகுந்தன் அவர்களையும், அவரைப் பலரும் வியக்கும் வண்ணம் உயர்த்துவதற்கு அரும் பாடுபட்ட அவரின் குருவாகிய   சிறீமதி அபிராமி குமரதேவன் அவர்களையம், எல்லாவற்றிற்கும் மேலாக விஜயாளின் ஆர்வங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிய அவரது பெற்றோரையும் பாராட்டி ஒரு சிறப்பான அரங்கேற்றத்தை கண்டு களிப்பதற்கு கிடைந்த சந்தர்ப்பத்திற்கும் நன்றி கூறுகிறேன்

 
 

 
No comments: