போதைப்பொருளை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு அவசியம்!

 Thursday, June 8, 2023 - 1:00am

போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் இலங்கையை மாத்திரமன்றி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. உலகம் எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளில் போதைப்பொருள் கடத்தலும் ஒன்றாக இருக்கின்றது.

போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்கு உலகநாடுகள் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அதற்கென மிகக்கடுமையான சட்டதிட்டங்களையும் வகுத்துச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளும் மிகக் கடுமையானதாகவே உள்ளன.

ஆனாலும் போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதென்பது இயலாத காரியமாகவே இருக்கின்றது. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்ைககள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடத்தல்காரர்கள் தங்கள் குற்றத்தைத் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர். போதைப்பொருட்களும் நாட்டுக்குள் வந்து கொண்டேயிருக்கின்றன.

போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதென்பது உலகநாடுகளுக்கு பெரும்பாடாகவே அமைந்துள்ளது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்படுகின்ற போதிலும், அதனைவிட அதிக தொகை போதைப்பொருட்கள் முறியடிப்பில் அகப்படாமல் சென்று விடுகின்றன என்றே நம்பப்படுகின்றது. அகப்படாமல் தப்பிக் கொள்ளும் ஒவ்வொரு சிறுதொகை போதைப்பொருளும் ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தையும் சீரழிப்பதாகவே அமைந்து விடுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை ஐஸ் என்ற போதைப்பொருளே சமீப காலமாக நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரியவந்துள்ளது. வளர்ந்தவர்களை மாத்திரமன்றி, இளவயதினரான மாணவர்களையும் இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகள் செயற்படத் தொடங்கியுள்ளதால், எமது நாட்டின் எதிர்கால சந்ததியே சீரழிந்து போகும் அபாயம் உள்ளதாக பலரும் எச்சரிக்கின்றனர். எனவே எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தலையும் பாவனையையும் முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியமாகின்றது. இல்லையேல் எமது எதிர்கால சந்ததியே இருளுக்குள் தள்ளப்பட்டு விடும் அபாயம் உள்ளது.

ஏனைய போதைப்பொருட்களைப் பார்க்கிலும் ஐஸ் போதைப்பொருளானது அதிக ஆபத்து நிறைந்ததென்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்ைக செய்கின்றனர். உடலுக்கு அதிக போதையைக் கொடுக்கின்ற இப்போதைப்பொருளானது இறுதியில் உடலின் அத்தனை அங்கங்களையும் வலுவிழக்கச் செய்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்ைக செய்கின்றனர்.

ஐஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற ஒருவர் அதிகபட்சமாக இரண்டு வருடங்களில் மரணத்தின் விளிம்புக்குச் சென்று விடுவதாகவும் கூறப்படுகின்றது.

ஐஸ் போதைப்பொருளைப் பொறுத்தவரை மற்றொரு ஆபத்தான விடயமும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐஸ் போதைப்பொருளை ஒரேயொரு தடவை உபயோகித்துப் பார்ப்போமென்ற எண்ணத்தில் அதனைப் பயன்படுத்தும் ஒருவர், இறுதியில் அதற்கே அடிமையாகிப் போகின்றாரென்பதும் தெரியவந்துள்ளது. அதாவது ஒரேயொரு பாவனையிலேயே ஒருவரை முற்றாக அடிமையாக்கி விடக் கூடிய ஆபத்தான போதைவஸ்துவாக ஐஸ் காணப்படுவதாக உலகளாவிய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்ைக விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இப்போதைப்பொருள் குறித்து நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. ஏனெனில் இளவயதினர் இலக்கு வைக்கப்படுவதால் நாட்டின் எதிர்காலமே இந்த விடயத்தில்தான் தங்கியிருக்கின்றது. அதுவும் மாணவ சமுதாயத்தை இலக்கு வைப்பதை ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வதில் சில விஷமக் குழுக்கள் ஈடுபட்டு வருவதாக பலதரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். அதாவது மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம் தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாமென்று போதைப்பொருள் கடத்தல்காரர்களும் வியாபாரிகளும் நினைக்கின்றனர். எனவேதான் அவர்கள் மாணவர்களை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இளவயதினரை மரணத்தின் விளிம்புக்குக் கொண்டு செல்கின்ற போதைப்பொருளை எவ்வாறாயினும் கட்டுப்படுத்துவது அவசியமாகின்றது. மக்களும் இது குறித்து விழிப்படைந்தால் மாத்திரமே இதற்கு முடிவு காண முடியும். பொலிசாருக்கு மக்கள் தகவல்களை வழங்குதல் மிக முக்கியம். தகவல்களின் அடிப்படையிலேயே பொலிசாரால் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும்.

கிழக்கின் சில பிரதேசங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்பெற்ற இடங்களாக உள்ளன. அவ்விடங்களில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சில பிரதேசங்களில் இருந்துதான் மற்றைய பிரதேசங்களுக்கு போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பலரும் கூறுகின்றனர். தூர இடங்களில் இருந்து கிழக்குக்கு எவ்வாறு கடத்தல்காரர்கள் போதைப்பொருளை கடத்திக் கொண்டு வருகின்றார்களென்பது வியப்பாகவே உள்ளது.

போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதில் பொலிசார் மற்றும் கடற்படையினரின் பணிகள் பாராட்டும்படியாகவே உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் போதுமானதாக இல்லையென்பது புரிகின்றது. போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு பொதுமக்கள் தாராளமாக உதவி ஒத்தாசைகளை வழங்க ​வேண்டுமென்பதே இங்கு அவசிமாகின்றது.   நன்றி தினகரன் 

No comments: