20 ஆண்டு சிறை இருந்த தாய்க்கு பொது மன்னிப்பு

 Tuesday, June 6, 2023 - 2:06pm

அவுஸ்திரேலியாவின் மிக மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது நான்கு குழந்தைகளையும் கொல்லவில்லை என்பதை உறுதி செய்யும் புதிய ஆதாரங்கள் வெளியானதை அடுத்து பொது மன்னிப்புப் பெற்றுள்ளார்.

ஒரு தசாப்த காலத்தில் தனது நான்கு குழந்தைகளை கொன்றதாக குற்றங்காணப்பட்ட கத்லீன் பெல்பிக் என்ற பெண் கடந்த 20 ஆண்டுகள் சிறை அனுபவித்து வந்தார்.

எனினும் அந்தக் குழந்தைகள் இயற்கையாக இறந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுவதாக அண்மைய விசாரணை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 55 வயதான அந்தப் பெண்ணின் வழக்கு, அவுஸ்திரேலியாவில் மிகப்பெரிய நீதி தவறிய சம்பவமாக பதிவாகியுள்ளது.

பெல்பிக் தான் நிரபராதி என தொடர்ந்து கூறிவந்தபோதும், அவருக்கு 2003ஆம் ஆண்டு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1989 மற்றும் 1999க்கு இடையே அவரது ஒவ்வொரு குழந்தையும் 19 நாட்கள் தொடக்கம் 19 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் திடீரென மரணித்துள்ளனர். இவர்களின் மரணத்திற்கு மரபணு மாற்றமே காரணம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெல்பிக்கு முழுமையான பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ள நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர், அவரை சிறையில் இருந்து உடன் விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 

No comments: