அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார் முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள் முருகபூபதி


உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும்,  அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே  எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர்.

கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன்  மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.

 “ நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?   என நான்


 யோசித்துக்கொண்டிருந்தபோது,  கொழும்பிலிருந்து  நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு, “ எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர்                   ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார்  கமலி அக்கா கனடாவில்  மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.

அடுத்தடுத்து துயரமான  செய்திகளே வந்துகொண்டிருந்தன.

கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது.  மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன்.

ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது.  என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு  கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன்.

அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சிரியம் அடைந்தனர்.

   “ பூபதி அண்ணா, அம்மா உங்களை தனது இறுதிச்சடங்கிற்கு அழைத்து வந்துவிட்டார்.   என்று அவர்கள் நா தழுதழுக்கச் சொன்னபோது விம்மிவந்த அழுகையை அடக்குவதற்கு சிரமப்பட்டேன்.

இலங்கையில்  எமது மூத்த தலைமுறை வாசகர்கள் நன்கு வாசித்து அறிந்த சோவியத் நாடு மாத இதழை மறந்திருக்க மாட்டார்கள். அத்துடன், சோஷலிஸம்: தத்துவமும் நடைமுறையும் என்ற இதழையும் மறக்கமாட்டார்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ சார்பு )  தேசாபிமானி, புதுயுகம், சக்தி முதலான இதழ்களையும் மறந்திருக்கமாட்டார்கள்.

தனது கணவர் பிரேம்ஜி  மட்டுமன்றி,  இதர எழுத்தாளர்களும் தங்கள் கையால் எழுதிக்கொடுத்த பிரதிகளையெல்லாம் எழுத்துப் பிழையின்றி கச்சிதமாக தட்டச்சில் பதிவுசெய்து கொடுத்தவர்தான் கமலி அக்கா.

இலங்கையில் சேர் ஏர்ணஸ் டீ சில்வா மாவத்தையில் அமைந்திருந்த நவஸ்தி என அழைக்கப்பட்ட சோவியத் தூதுவராலய தகவல் பிரிவில்தான் கமலி அக்கா, தனது கணவர் பிரேம்ஜி ஞானசுந்தரனுடன் பணியாற்றினார்.

குறிப்பிட்ட  சோவியத் நாடு,  மற்றும் சோஷலிஸம் : தத்துவமும் நடைமுறையும் ஆகிய இரண்டு இதழ்களுடன் தினம் தினம் வெளியாகும் சோவியத் செய்திக்குறிப்பேட்டையும்                           ( News Letter ) தட்டச்சு செய்தவர் கமலி அக்கா.

அக்காலப்பகுதியில் அங்கே பணியாற்றிய இலக்கிய நண்பர் இராஜகுலேந்திரன் ( யாதவன் என்ற புனைபெயரில் இலக்கிய பிரதிகள் எழுதியவர் ) கமலி அக்கா, ரோணியோ படிவத்தில் தட்டச்சுசெய்து கொடுக்கும் செய்தி ஏட்டினை பிரதிகள் எடுத்து கொழும்பிலிருக்கும் பத்திரிகை ஊடகங்களுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்.


அங்கே பிரேம்ஜி – கமலி அக்கா தம்பதியருடன், எழுத்தாளர்கள் மு. கனகராஜன், ராஜ ஶ்ரீகாந்தன், பெரி. சண்முகநாதன், லத்தீஃப் மற்றும் அவரது மனைவி, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த பி. ராமநாதனின் மனைவி ஆகியோரும் சிங்கள படைப்பிலக்கியவாதியும் தொலைக்காட்சி நாடக பிரதியாளருமான சுமித்ரா ரகுபத்த ஆகியோரும் கடமையாற்றினர்.

மூவினத்தையும் சேர்ந்தவர்களை அன்றைய சோவியத் ஒன்றியம் இவ்வாறு தனது  வெளிவிவகார ஊடகத்துறையில் ஒன்றிணைத்திருந்தது.

1970 காலப்பகுதியில் நடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து அமைத்த கூட்டரசாங்கத்தின் காலத்தில்தான் அணிசேரா நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது.

இலங்கைக்கும் சோவியத்திற்குமிடையே நெருக்கமான உறவும் இருந்தது.  இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியும் கியூபா அதிபர் ஃபிடல் காஷ்ரோவும் லிபியா அதிபர் கேர்ணல் கடாபியும் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர்.

அவ்வேளையில் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவு மிகவும்


துரிதமாக இயங்கியது.  கமலி அக்கா,  அங்கிருந்த எழுத்தாளர்களும் , அங்கிருந்து வெளியான இதழ்களின் ஆசிரியர்களும் எழுதியும் மொழிபெயர்த்தும் தரும் பிரதிகளை துரிதமாக தட்டச்சு செய்துகொடுத்துக்கொண்டிருந்தவர்தான் எங்கள் கமலி அக்கா.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், உருவாக்கியிருந்த எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தில் நான் சிறிது காலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அதற்கான ஊதியத்தை பிரேம்ஜியும்  எழுத்தாளர் சோமகாந்தனும் தங்கள் மாதச்  சம்பளத்திலிருந்து எனக்கு வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு அனுமதித்தவர்கள்தான் திருமதி கமலி அக்காவும், திருமதி பத்மா சோமகாந்தனும்.

செ. யோகநாதன், காவலூர் இராசதுரை, மேமன் கவி ஆகியோரின் நூல்களையும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் வெளியிட்டது.  அவற்றுக்கான முகப்பு ஓவியத்தை எழுத்தாளர் ஐ. சாந்தன் வரைந்து தந்திருந்தார். கிட்டத்தட்ட தமிழ்நாடு அறுசுவை வெளியீடுகளின் முகப்பின் பாணியில் அவை அமைந்திருந்தன.

கமலி அக்கா,  எமது பணிகளுக்கு பக்கபலமாக இருந்தவர்.

பொருளாதார ரீதியில் எமது கூட்டுறவுப்பதிப்பகம் முன்னேறவில்லை.  என் மீது அன்பும் பரிவும் கொண்டிருந்த கமலி அக்கா,  “ இந்த எழுத்தாளர்கள் கூட்டத்தை முழுமையாக நம்பியிருக்கவேண்டாம்.  உமக்கும் ஒரு  வாழ்க்கை இருக்கிறது. நீரும் திருமணமாகி குடும்பஸ்தனாகவேண்டும்.  வீரகேசரியில் ஒப்புநோக்காளர் வேலைக்கு ஆட்களை தேடுகிறார்கள். அதற்கு விண்ணப்பிக்கவும்  “ என்று சொல்லி அதற்கான விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் தட்டச்சு செய்துகொடுத்தவரே இந்த கமலி அக்காதான்.


எமது குடும்பத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தவர். இவர்  அக்காலப்பகுதியில் அறியாத இலங்கை – தமிழக – சோவியத் எழுத்தாளர்களே இல்லை எனலாம்.

சோவியத்தின் உக்ரேய்ன் எழுத்தாளர் கலாநிதி விதாலி ஃ பூர்ணிக்கா, ஸ்ரோகன்,  அனதோலி பர்பரா, குப்ரியானோவ் ஆகியோரையெல்லாம்  கணவருடன் சந்தித்தவர்.

இந்தத் தம்பதியர் தமது இரண்டு பெண்குழந்தைகளுடன் கொழும்பில் வாழ்ந்த வீட்டுக்கு அருகிலேயே ( ஒரு சுவர்தான் இரண்டு வீட்டையும் பிரித்தது )  கலைஞர்   கோமாளிகள்  “ ராமதாஸின் குடும்பத்தினரும் வசித்தனர். அவர்களின் குழந்தை நாகப்பிரியா,  கமலி அக்காவின் மற்றும் ஒரு செல்லக் குழந்தை.

சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவில் பணியாற்றியவர்களின் குடும்பத்துப் பிள்ளைகளையெல்லாம் நேசித்தவர் கமலி அக்கா.

குறிப்பிட்ட தகவல் பிரிவு அமைந்திருந்த இல்லம், இலங்கையில் குறிப்பிடத்தகுந்தது.  அதன் உரிமையாளர் திருமதி லலிதா ராஜபக்‌ஷ. இவர் அன்றைய மீன்பிடித்துறை அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்‌ஷவின் புதல்வி.  அத்துடன் சில சிங்கள திரைப்படங்களையும் தயாரித்தார்.  அந்த இல்லம் அமைந்த காணியிலேயே லலிதா ராஜபக்‌ஷ தனது குடும்பத்துடன் வசித்த  மற்றும் ஒரு இல்லமும் அமைந்திருந்தது. அதனால், அவர் அடிக்கடி வந்து கமலி அக்காவுடன் பேசிக்கொண்டிருப்பார்.

குறிப்பிட்ட  தகவல் பிரிவு அமைந்த இல்லத்தை இந்தப்பதிவை வாசிக்கும் வாசகர்கள்,  லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இயக்கத்தில் வெளியான கம்பெரலிய திரைப்படத்தில் பார்க்கலாம்.

கம்பெரலிய நாவலை எழுதியவர் மார்டின் விக்கிரமசிங்கா.

1970 களில் இலக்கியப்பிரவேசம் செய்த எனக்கு இந்த அரிய தகவல்களையெல்லாம் சொன்னவர்தான் கமலி அக்கா.

எனது இலக்கியப்பிரவேச ஐம்பது ஆண்டுகள் நிறைடைந்த காலப்பகுதியில் எனக்கு கிடைத்திருந்த கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினை பெறுவதற்காக கடந்த 01 ஆம் திகதி மெல்பனிலிரும் புறப்பட்டு வரும்போது, கனடாவில்,  நான் மீண்டும் சந்திக்கவிருந்த கமலி அக்காவை பூதவுடலாக தரிசித்தபோது, மேலே குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் மனதில் அலை அலையாக வந்து மோதியது.

கமலி அக்காவின் பூதவுடலுக்கு முன்னால் நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தியபோது,  ஆயிரக்கணக்கான பிரதிகளை ஒரு காலத்தில்  தட்டச்சில் பதிந்துகொடுத்த அவரின் கரங்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்றேன்.

தான் காதலித்து கரம்பிடித்த கணவர் பிரேம்ஜியிடமே அவர் சென்றுவிட்டார் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவர்களின் புதல்விகளை  தேற்றினேன்.

கமலி அக்கா – பிரேம்ஜியின் திருமணம் கூட எளிமையாகத்தான் நடந்தது. இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மற்றும் ஒரு இலக்கியத்தம்பதியர்தான்.

அவர்கள் கி. இலக்‌ஷ்மண அய்யர் – திருமதி பாலம் இலக்‌ஷ்மண அய்யர் தம்பதியர்.

இலக்‌ஷ்மண அய்யர் அவர்கள் இந்திய தத்துவஞானம் என்ற நூலை எழுதியிருக்கும் இலங்கை கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதி.

பாலம் அம்மையார் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்  பத்மஶ்ரீ சார்வாகனனின் ஒன்றுவிட்ட சகோதரி.

அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நான் திரும்பும்போது சிட்னியில் தற்போது வதியும் திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையாருக்கு கமலி அக்காவின் மறைவுச்செய்தியை சுமந்துகொண்டு செல்லவிருக்கின்றேன்.

கமலி அக்கா பற்றிய நினைவுகளுக்கு மரணம் இல்லை.

எனது வாழ்க்கைப்பயணத்தில்  கமலி அக்காவும் முக்கியமானவர். 

---00---

No comments: