எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 67 சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் , முடிவே இல்லாதது ! முருகபூபதி


தாயகத்தில்  நீண்ட காலம் வாழ்ந்து , ஏதோ ஒரு காரணத்தினால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழநேரிடும் எவரும்,  மீண்டும்  தமது தாயகத்திற்கோ அல்லது  ஏனைய நாடுகளுக்கோ பயணப்படும்போது சந்திக்கும்  பெரும் சிக்கல் நேரம்தான்.

 “ தமிழருக்கென்று ஒரு  நாடு இல்லை. ஆனால், தமிழர் இல்லாத தேசங்களும் இல்லை.     என்பது தமிழ் தேசிய பற்றாளர்கள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை.  

எனக்கென்னமோ தோழர் ஏர்ணஸ்ட் சேகுவேராவின் வார்த்தைகள்தான் மிகவும் பிடித்தமானது.

அவர் சென்னார்:   “ தனது காலடி பதியும் இடங்கள் யாவுமே தனக்குச்


சொந்தமானது.      அதன் அர்த்தம் நில ஆக்கிரமிப்பு அல்ல !  கனியன் பூங்குன்றனாரின்  “ யாதும் ஊரே யாவரும் கேளீர்  “ என்பதன் மற்றுமோர் அர்த்தம்தான் சேகுவேராவின் கூற்று !

கனடாவில் சில இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் நூறுபேரையாவது எனக்கு நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் கனடா தேசத்தில் எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறார்கள் என்பது தெரியாதுவிட்டாலும், ஏதோ ஒரு வழியில் அவர்களுடன் தொடர்பை பேணிவருகின்றேன். அவர்களில் சிலர் முதுமையினாலும்,  உடல் உபாதைகளினாலும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். முடிந்தவரையில் அவர்களை சந்திப்பதற்காகவும் இந்த நெடிய பயணத்தை ஆரம்பித்தேன்.


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்காக  நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்து கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்குமேல்  Qantas    விமானத்தில் புறப்படத்தொடங்கியதுமே நேரம் குறித்த பதட்டம் தொடங்கிவிட்டது.

பல உடல் உபாதைகளின் சொந்தக்காரனாக நீண்ட காலம் வாழ்வதனால்,  பயணங்களில் எனது உடைமைகளுக்குள் இன்சுலின் உட்பட பல மருந்து – மாத்திரைகளும் இருக்கும்.

விமானத்தில் எனக்கு அடிக்கடி எழுந்து செல்வதற்கும்,  உள்ளே நடமாடுவதற்கும் ஏற்றவகையில் ஆசனம் வேண்டும் என்று கேட்டுப்பெற்றுக்கொள்வேன். அத்துடன் எனக்குரிய உணவு விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவேன்.

விமானம் ஏறியதும்,   அங்கிருக்கும் பணிப்பெண்களிடம் எனது இனசுலின் பேனைகள் நிரம்பிய பொதியை ஒப்படைத்து,  விமானத்திலிருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கச்சொல்வேன்.       

இம்முறையும் கனடா பயணத்தில் இதுதான் நடந்தது.

எனக்குரிய ஆசனம் Qantas    விமானத்தில் சிரமபரிகாரம் செய்யும் சிறிய அறைக்கு பக்கத்திலேயே கிடைத்தது பாக்கியம்தான். அதன் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்த சில நிமிடங்களில்,  ஒரு இளம் யுவதி யன்னலோர இருக்கைக்கு வந்தார். 

வந்ததுமே,    நீங்கள் இந்த ஆசனத்தை ஏன் தெரிவுசெய்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.  உங்களுடன் அமெரிக்கா லோஸ் ஏஞ்சல்ஸ் வரையில் பயணிப்பேன்.  எதற்கும் கவலைப்படவேண்டாம். நான் ஒரு மருத்துவ தாதி. உங்களுக்கு இரத்தத்தில் சீனி குறைந்தால் என்ன செய்யவேண்டும் ?  என்பது எனக்குத் தெரியும்.  “ என்று சொன்னது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அவரே எனது இன்சுலின் பொதியை விமானப்பணிப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தார்.

அவரது கனிவான வார்த்தைகள் நெகிழ்ச்சியாக இருந்தது. அவரும்  மெல்பன் விமான நிலையத்தில் Qantas அலுவலர்களிடம்  ஆசனத்தெரிவில் அக்கறை காண்பித்துக்கேட்டபோதுதான், அவருக்கு முன்னரே விமனத்திற்குள் வந்துவிட்ட என்னைப்பற்றி அறிந்திருக்கின்றார்.

எனது வாழ்க்கைப் பயணத்தில் இத்தகைய தருணங்கள் தொடர்ந்து


வந்திருக்கின்றன.

அதனால்தான் நான் அடிக்கடி  “ எதிர்பாராத சம்பவங்களின் சங்கமம்தான் வாழ்க்கை  “ என்று எழுதியும் பேசியும் வந்திருக்கின்றேன்.

எண்ணமே வாழ்க்கை என்பார்கள். இதனுள் ஒரு உளவியல் தத்துவம் பொதிந்திருக்கிறது.

நாம் எதனைத் தொடர்ந்து நினைக்கின்றோமோ, அதுவே வாழ்க்கையிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பதையும் எனது வாழ்க்கைப் பயணத்தில் உணர்ந்திருக்கின்றேன்.


என்னருகே அமர்ந்து லோஸ் ஏஞ்சல்ஸ் வரையில் பயணம் செய்த அந்த யுவதியின் தாயாரும் கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இறந்திருக்கிறார்.  அத்துடன் அந்தத்தாயாரும் நீரிழிவு உபாதையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஒரு காலையும் இழந்திருக்கிறார்.

எமது பொதிகள் அனைத்தும் லோஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இறக்கப்பட்டு, மீண்டும்  ஏயார் கனடா விமானத்திற்கு ஏற்றும் போது, பயணிகள் அவற்றை மீண்டும் பொறுப்பேற்றுத்தான்,  ஏயார் கனடா விமானத்திற்கு ஒப்படைக்கவேண்டும் எனச்  சொல்லியிருந்தார்கள்.

அமெரிக்காவுக்குள் பிரவேசித்து கனடா செல்வதனால், அமெரிக்கா விசாவும் எடுக்க நேர்ந்திருந்தது.

இந்தப்பயணம் மிகுந்த அலுப்பினைத்தரும் என்பதை தெரிந்துகொண்டே, இந்த மார்க்கத்தை தெரிவுசெய்த புத்திசாலிதான் நான்.

எனக்கிருக்கும் நோய் உபாதைகளை கருத்தில்கொண்டு  பயணக்காப்புறுதி  ( Travel Insurance ) மருத்துவரின்  Travel Letter , கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தியதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆகியனவற்றுடனும் இந்தப்பயணத்தை மேற்கொள்ள நேர்ந்தது.

வருடாந்த Flu Vaccine உட்பட இதுவரையில் ஐந்து கொவிட் 19 


தடுப்பூசிகளும் பெற்றிருந்தாலும்,  Travel Insurance  அவசியம் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் வலியுறுத்தினர்.

போதாக்குறைக்கு எனது மனைவி மாலதி  இருமல் வந்தால் உட்கொள்ளவேண்டிய Robitussin Chesty Cough Forte மருந்தையும் வாங்கி எனது  Hand luggage இல் வைத்துவிட்டார்.

லோஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, கனடா டொரன்டோ பயணிப்பதற்கான விமானம் ஏறுவதற்கான வாயிலுக்கு வருவதற்கு வெளிப்புறமாக சுமார்  கால் கிலோ மீற்றர் நடக்க நேர்ந்தது.

மெல்பன் விமான நிலையத்தின் சுங்கப்பரிசோதனை பிரிவில் வெளியே துருத்திக்கொள்ளாத இந்த இருமல் நிவாரணி மருந்து லோஸ் ஏஞ்சல்ஸ் விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பிற்குள்ளானது.

மூன்று அதிகாரிகள் அதனை துருவித்துருவிப்பார்த்தார்கள். ஒரு  சிறிய இயந்திரத்திற்குள்ளும் செலுத்தி பரிசோதித்தார்கள்.

நேரத்தில் மாற்றம்,  எந்த மருந்தை எப்போது உட்கொள்வது என்பதில் தடுமாற்றம், உறக்கத்தில் குழப்பம்,  இத்தனை அவதிகளுடன் டொரன்டோவுக்கு ஏயார் கனடாவில் புறப்பட்டேன்.

பயணக்களைப்புடன் கனடாவுக்கு வெள்ளிக்கிழமை காலைப்பொழுதில் வந்து இறங்கியபோது என்னை வரவேற்பதற்காக வீரகேசரியில் முன்னர் எம்முடன் பணியாற்றிய நண்பர் சட்டத்தரணி பாலச்சந்திரன் பெரிய மலர்க்கொத்துடன் என்னை வரவேற்றார்.

எனக்கு முன்பே  ஒரு சில நாட்களுக்குள் மெக்சிக்கோவிலிருந்து கனடா வந்தவிட்டிருந்த எனது உடன்பிறந்த தம்பி ஶ்ரீதரனின்  புதல்வி லாவண்யாவும் வந்திருந்தாள்.

சென்னையில் படித்து பட்டம்பெற்றிருக்கும் எமது பெறாமகள் லாவண்யா,  கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவில் என்னை பார்ப்பதற்காகவே தனது தொழில் நிறுவனத்தில் ஒரு வார காலம் அனுமதிபெற்றுக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டாள்.

2003 ஆம் ஆண்டு இலங்கையில் எனது பறவைகள் நாவலுக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்தபோது, அந்த விழாவிலும் பெறாமகள் லாவண்யா ஶ்ரீதரன் குழந்தையாக வந்து கலந்துகொண்டாள்.

மீண்டும் இருபது வருடங்களின் பின்னர்  குமரியாக  நான் சம்பந்தப்பட்ட  மற்றும் ஒரு  விருது விழாவுக்காக வந்திருந்தாள்.

சட்டத்தரணி  பாலச்சந்திரனை 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில்தான் சந்தித்தேன்.  அவரும் ஊடக நண்பர்கள் வீரகத்தி தனபாலசிங்கமும் , இ. தம்பையாவும் எனக்கு கொட்டாஞ்சேனையில் ஒரு உணவு விடுதியில் பிரிவுபசார விருந்து வழங்கினார்கள்.

பாலச்சந்திரனும்  தம்பையாவும் ஶ்ரீகாந்தலிங்கம் என்ற மற்றும் ஒரு நண்பரும்  சட்டக்கல்லூரியிலிருந்து வீரகேசரி ஆசிரிய பீடத்திற்கு வருகை தந்தவர்கள். இவர்களில் ஶ்ரீகாந்தலிங்கம் எமக்கு முன்பே இங்கிலாந்து சென்றுவிட்டார்.

லண்டன் செல்லும் சந்தர்ப்பங்களில் இவரையும் நான் சந்திப்பதுண்டு. அங்கே தனது வழக்கறிஞர் தொழிலை அவர் சிறப்பாக செய்துவருகிறார்.

பாலச்சந்திரனுடைய துணைவியார் ராஜியை இலங்கை வானொலியில்  கலைக்கோலம் நிகழ்ச்சியை நான் 1980 களில் நடத்தியகாலப்பகுதியில் வானொலி  கலையகத்திற்கு அழைத்துவந்து இலக்கிய உரையாற்றச் செய்திருக்கின்றேன்.

அவரும் சட்டத்தரணியாகிவிட்டார். கணவனும் மனைவியும் கனடாவில் தமது தொழிலை தொடருகின்றனர். நண்பர் இ. தம்பையா கொழும்பில் தமது சட்டத்தொழிலை தொடருகின்றார்.

நண்பர் தனபாலசிங்கம், வீரகேசரி – தினக்குரல் மீண்டும் வீரகேசரி என்று தனது ஊடகப்பணியை மேற்கொண்டு தற்போது  அந்தக்கடமையிலிருந்து இளைப்பாறியிருந்தாலும் தனது எழுத்துப்பணிக்கு ஓய்வுகொடுக்காமல் சுதந்திர பத்திரிகையாளராக ( Freelance Journalist  ) தொடர்ந்தும் அயராமல் இயங்குகிறார்.

எனது எழுத்துலக வாழ்க்கையில் இந்த நான்கு நண்பர்களும் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள்.

இம்முறை கனடா பயணத்தில்  விமான நிலையம் வந்து அழைத்துச்சென்று தன்னோடு தங்கவைக்க விரும்பியிருந்த எனது பால்ய கால நண்பர்  சிவராசாவின் பேரக்குழந்தைக்கு எதிர்பாராதவகையில் சுகவீனம் வந்துவிட்டது.

அதனால், எனது தங்குமிடத்தை மாற்ற நேர்ந்தது. எனக்கு 1954 ஆம் ஆண்டு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து  எழுத்தறிவூட்டி  தனது அரிவரி வகுப்பில் சேர்த்துக்கொண்ட எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் அபிமானத்திற்குமுரிய ஆசிரிய பெருந்தகை பெரிய ரீச்சர் அம்மா திருமதி  ( அமரர் ) ம. திருச்செல்வம்  அவர்களின் இரண்டாவது புதல்வி திருமதி செல்வமணி ராஜதுரையின் இல்லத்திற்கு எனது தங்குமிடத்தை மாற்றநேர்ந்தது.

எனது கடிதங்கள் நூலை பெரிய ரீச்சர் அம்மா திருமதி  ம. திருச்செல்வம்  அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன்.

எனது உடன்பிறவாத தங்கை செல்வமணி முன்னர் ஏயார் லங்காவில் பணியாற்றியவர்.  குழந்தைப் பருவம் முதல் இவரையும் இவரது சகோதரிகள் செல்வராணி, செல்வநளினி ஆகியோரையும்  எனக்கு நன்கு தெரியும்.

இவர்களையெல்லாம் மீண்டும் கனடாவில் பார்க்கச் சந்தர்ப்பம் தந்த கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு, குறிப்பாக அதன் நிறுவனர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

நான் மெல்பனிலிருந்து  புறப்பட்டது  ஜூன் 01 ஆம் திகதி வியாழக்கிழமை  காலைப்பொழுது .  கனடா  வந்திறங்கியது  ஜூன் 02 ஆம் திகதி கனடாவின் காலைப்பொழுது. 

நேரங்களில் நேர்ந்த மாற்றத்தினால், உறக்கத்திலும் மருந்து உட்கொள்வதிலும்  மாற்றங்கள் நேர்ந்தது.

உடலிலும் அசதி தொற்றியது.

இந்தக்களைப்பு யாவும் கடந்த 04 ஆம் திகதி டொரன்டோவில் நடந்த இயல் விருது விழாவில் மறைந்துபோனது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ.

இனிவரும் இந்தத் தொடரில்  கனடா பயணம் பற்றிய மேலதிக செய்திகள் இடம்பெறும்.

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: