“ கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே
படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால்
குடிக்கவில்லை. எனினும், ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன் “
இவ்வாறு 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர்
- மார்ச்சில் யுகமலர் என்ற தனது கதைத்தொகுதியை
வெளியிட்ட எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில்
கல்கரி மாநகரில் இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.
இவ்வாறு 1968 ஆம் ஆண்டில் தான் எழுதிய மாவீரன் செண்பகராமன் என்ற நூலின் முதல் அத்தியாயத்தை தொடக்கி எழுதியவர்தான் யோகா பாலச்சந்தரன். எமது தமிழ் கலை, இலக்கிய, ஊடக குடும்பத்தில் “ யோகா “ எனவும் “யோகா அக்கா “ எனவும் அழைக்கப்பட்டவர், 1962 இற்குப்பின்னர் வீரகேசரியில் துணை ஆசிரியராக இணைந்தார். அக்காலப்பகுதியில் இவர் பணியாற்றிய காலத்தில் இவருடன் மேலும் சில எழுத்தாளர்களும் அங்கே பணிபுரிந்தனர். அவர்கள்: அன்னலட்சுமி இராஜதுரை, எஸ். எம். கார்மேகம், ஸ்ரெனிஸ்லஸ் என்ற அன்டன் பாலசிங்கம், காசிநாதர்.
சிறிது காலம் தினபதி, சிந்தாமணியிலும் யோகா செய்தியாளராக இயங்கினார். இவரது காதல் கணவர் பாலச்சந்திரன் கொழும்பில் பிரபல Times பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் கொழும்பில் கலைச்சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி நாடக விழாக்களை நடத்தினார். அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாடக விழாவில்தான் இவர்கள் இருவரும் முதல் முதலில் சந்தித்து ஒருவரை ஒருவர் விரும்பி மணம்
முடித்தனர். இவர்களது காதலுக்கு தூதுவனாக விளங்கியவர்தான் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன்.
யோகா அக்கா, உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுக்கு
வித்திட்ட அருட்திரு தனிநாயகம் அடிகளாரையும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து
சிந்தாமணியில் ஒரு நேர்காணலை பதிவு செய்திருக்கிறார்.
இருவரும் இலங்கைத்
தலைநகரில் மூவின கலைஞர்கள் மத்தியில் பாலமாக
விளங்கியவர்கள். 1979 இல் சுனில் ஆரியரத்னாவின்
இயக்கத்தில் பிரபல சிங்கள திரைப்படக் கலைஞர்
காமினி பொன்சேக்கா நடித்த சருங்கலய திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில்
பெரும்பாலான காட்சிகள் வடமராட்சி கரவெட்டியில் எடுக்கப்பட்டது.
கரவெட்டியில் வல்லிபுரம் தம்பதியரின் மூத்த புதல்வியாகவும், தனக்குப்பின்னர் பிறந்த ஒன்பது சகோதர சகோதரிகளின் பாசமுள்ள அக்காவாகவும் விளங்கிய யோகா, சருங்கலய திரைப்பட குழுவினருக்கு தமது பூர்வீக கிராமத்தையே அறிமுகப்படுத்தி அந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்கு உதவினார்.
அவரது தந்தையார்
வல்லிபுரம் பொலிஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.
சருங்கலயவில்
வரும் தமிழ் வசனங்களை எழுதியவர் யோகா பாலச்சந்திரன்.
சில பாடல் வரிகளையும் வழங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் இலங்கை சினிமா வரலாற்றில்
முக்கிய தடம் பொறித்தது. அத்துடன் இலங்கை பாராளுமன்றிலும் பேசுபொருளானது.
சிங்கள கடும்போக்காளர்களிடம், “ சருங்கலயே திரைப்படத்தை ஒரு
தடவையாவது பாருங்கள் “ என்று அங்கிருந்த முற்போக்காளர்கள் கூறினர்.
யோகா பாலச்சந்திரன்
சிறந்த சிறுகதை எழுத்தாளருமாவார். இவரது சிறுகதையொன்று செ. யோகநாதன் தொகுத்திருக்கும்
வெள்ளிப்பாதசரம் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
யோகா எழுதியிருக்கும் மாவீரன் செண்பகராமன் நூலுக்கு
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ( பின்னாளில் அமைச்சரானவர் ) செல்லையா இராஜதுரை அணிந்துரை
எழுதியுள்ளார். யுகமலர் கதைத் தொகுதிக்கு ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் செ.
கணேசலிங்கன் சிறப்புரை எழுதியிருக்கிறார். 12 சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் பற்றிய தமது பார்வையில்
கணேசலிங்கன், “ பரந்த சமூகவியல் அறிவும் துணிச்சலும்
நேர்மையும் பெண் விடுதலை வேண்டும் வேட்கையும் புதிய கிராமிய தமிழ் நடையும் பாராட்டிற்குரியன “ என்று பதிவுசெய்துள்ளார்.
யோகாவின் யுகமலர் தொகுதி வெளியீட்டு அரங்கு கொழும்பு
கோட்டை தப்ரபேன்ஹோட்டலில் நடந்தது. அச்சமயம் தினகரன் ஆசிரியாராகவிருந்த ஆர் . சிவகுருநாதன்
தலைமையில் நடந்தபோது, வீரகேசரியிலிருந்து சென்றிருந்தோம்.
வீரகேசரி பிரதம ஆசிரியர் கே. சிவப்பிரகாசம்,
துணை ஆசிரியர்கள் எஸ். எம். கார்மேகம், அன்னலட்சுமி இராஜதுரை, மற்றும் நாட்டிய நர்த்தகி
கார்த்திகா கணேசர் உட்பட சிலர் உரையாற்றினர்.
அக்காலப்பகுதியில் யோகா கொழும்பில் குடும்பத்திட்டச்சங்கத்தில்
பணியாற்றினார். இலங்கை வானொலியில் கலை, இலக்கியம், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளையும்
தயாரித்து வழங்கினார். சில வெளிநாடுகளில் நடந்த மாநாடுகளிலும் பங்கேற்றவர்.
நானும் யோகா அக்காவும் 1985 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
உயர்தரவகுப்பு மாணவர்களின் அழைப்பின்பேரில் சரஸ்வதி மண்டபத்தில் உரையாற்றினோம்.
அச்சமயம் நான் சோவியத் நாட்டில் மாஸ்கோவில் நடந்த
உலக இளைஞர் – மாணவர் விழாவிலும் யோகா அக்கா மற்றும் ஒரு வெளிநாட்டில் நடந்த மாநாட்டிலும்
கலந்துகொண்டு திரும்பியிருந்தோம். எம்மை அழைத்திருந்த மாணவர்கள் எமது பயண அனுபவங்கள்
குறித்து உரையாற்றச் சொல்லியிருந்தனர்.
யோகா அக்கா குடும்பத்திட்டச்சங்கத்தில் பணியாற்றிய
காலத்தில் எங்கள் ஊரைச்சேர்ந்த பல பெண்களுக்கு குடும்பத்திட்டம் தொடர்பாக நல்ல ஆலோசனைகளையும்
வழங்கியதுடன் அவர்களுக்கு தேவைப்பட்ட சிகிச்சைகளுக்கும் உதவியவர்.
1997 ஆம் ஆண்டு இலங்கை
சென்றிருந்தபோது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில் அவரை
சந்தித்து நீண்ட நேரம் உரையாடினேன். அப்போது வெளியாகியிருந்த எனது பாட்டி சொன்ன கதைகள்
நூலைப்பெற்றுச்சென்று, ஒரே நாளில் படித்துவிட்டு,
அடுத்த சந்திப்பில் சிலாகித்துச்சொன்னார்.
கடிதத் தொடர்பிலுமிருந்தார். அவருடைய கணவர் பாலச்சந்திரன் 2000 ஆம் ஆண்டு மறைந்தபோது, அவருக்கு
ஆறுதல் தெரிவித்து அனுதாபக்கடிதம் எழுதினேன்.
அதற்கு அவர் 22- 07- 2000 ஆம் திகதி எழுதியிருந்த பதிலை
இங்கே அவரது நினைவாக வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.
என் அருமைச்
சகோதரர் முருகபூபதிக்கு அநேக ஆசீர்வாதங்கள்.
தாங்கள் அனுப்பிய அனுதாப மடல் நேற்று கிடைத்தது. அன்பான வாசகங்கள் என் நெஞ்சுக்கு
இதமாக இருந்தன.
நான் இழந்தது கணவரை என்பதைவிட ஒரு நல்ல சுவாரஸ்யமான
நண்பனை என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
திடீரென கூட இருந்த 15 பேரை இழந்தது போன்ற வெறுமை.
அவரைப்பொறுத்தவரையில் கஷ்டப்படாத நல்ல சாவு. மன ஆறுதலுக்காக மகனிடம் – இன்று கனடா செல்கிறேன்.
ஏனோ, கணவர் இறந்த கால கட்டத்தில் சில வெளிநாட்டுத்
தபால்கள் எனக்குத் தவறியுள்ளன.
பூபதி, தங்கள் இலக்கியத்துறை வளர்ச்சியை தொடர்ந்து
கவனித்துவருகிறேன். அதனூடாக – நீங்கள் ஆற்றும்
சமூகப்பணி சாலச்சிறந்தது.
நிறையச்செய்ய, தொடர்ந்து வெற்றிகாண நாம் நம்பும்
இறை துணை நிற்பதாக. தங்கள் பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள்.
நான் இலக்கியம் படைத்து சில காலமாகிவிட்டது.
அயராத வெளிக்கள வேலைகள். மகளிரை வலுவாக்கல், ஆண் – பெண் சமத்துவம் பற்றிய 3
ஆண்டுத்திட்டம்.
16 மாவட்டங்களில் நல்ல
வெற்றி.
சிங்களத்தில் பணியாற்றல் ஒரு புதிய அனுபவம்.
இப்படிப்போனதில் – மித்திரன் வாரமலர் கேள்வி – பதில் தவிர வேறு எதுவுமே எழுதவில்லை. இனி ஓய்வாய் எழுதவேண்டும். மீண்டும் உங்கள் சத்தியமான அன்புக்கு என் நன்றிகள்.
அன்பின் அக்கா
யோகா பாலச்சந்திரன்.
------
-------- -------
இவ்வாறு எழுதியிருக்கும் யோகா அக்காவின் மறைவுச்செய்தியை
முதலில் என்னுடன் பகிர்ந்துகொண்டவர் கனடாவில் வதியும் மற்றும் ஒரு இலக்கிய சகோதரி எழுத்தாளர்
ஶ்ரீரஞ்சனி. சமகாலத்தில் நான் எழுதிவரும் முதல்
சந்திப்பு தொடரில் யோகா அக்கா பற்றியும் எழுதவிரும்பியிருந்தேன். அதற்கிடையில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
அவரது குடும்பத்தில் கடைசிச் சகோதரனும் எழுத்தாளருமான கனடாவில்
வதியும் ராதா மனோகரை தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். யோகா அக்காவின்
புதல்வர்கள் ஜெகனுக்கும் சுதனுக்கும் அலைபேசியில், அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாக
பதிவுசெய்தேன்.
“ ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை “
என்று அமைதிகொள்வோம்.
யோகா அக்காவுக்கு எமது இதய அஞ்சலி.
---0---
No comments:
Post a Comment