கொடுத்து வைத்தவள் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் சினிமா உலகில் பி எஸ் சரோஜா, எம் சரோஜா , சரோஜாதேவி என்று ஓரே கால கட்டத்தில் பல சரோஜாக்கள் நடித்துக் கொண்டிருந்த போது தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் இ வி சரோஜா. இவருடைய நடனத்துக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அன்று மயங்கி இருந்தனர். மதுரை வீரனில் இவர் ஆடி நடித்த வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க பாடலும் குலேபகாவலி படத்தில் இவர் நடனமாடி நடித்த லா சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகின. இந்த சரோஜா 1961ம் ஆண்டு இயக்குனர் டி ஆர் ராமண்ணாவை திருமணம் செய்து தான் கொடுத்து வைத்தவள் என்று மகிழ்ச்சி அடைந்தார். அதே கையேடு அவரின் சகோதரர் இ வி ராஜன் படத்தயாரிப்பாளராக மாறி படம் ஒன்றை தயாரித்தார். அந்த படம் தான் கொடுத்து வைத்தவள்.


இந்தப் படத்தில் கதாநாயகியாக இ வி சரோஜா நடிக்க , ஹீரோவாக
எம் ஜி ஆர் நடித்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டது. கட்டட என்ஜனியரான செல்வம் தொழில் விஷயமாக காஷ்மீர் பயணமாகிறான். வழியிலேயே அவனை தீர்த்து கட்ட அவனில் முதலாளி ஜம்பு ஒரு முரடனை அனுப்புகிறான். அவனுடன் ஏற்படும் மோதலில் செல்வம் உயிர் தப்பினாலும், அவனுக்கு சித்த சுவாதீனம் ஏற்பட்டு விடுகிறது. அனாதை பெண்ணான மீனா
அவன் மீது பரிவு காட்ட, ஒர் இக்கட்டான சூழலில் இருவருக்கும் கல்யாணம் நடந்து விடுகிறது. ஆனால் சில நாட்களிலேயே செல்வம் அவளை பிரிந்து , பின்னர் வைத்தியம் செய்யப்பட்டு , பழைய நிலைக்கு திரும்பி விடுகிறான். எத்தேச்சையாக மீனா அவனை மீண்டும் சந்திக்கிறாள். ஆனால் செல்வத்துக்கோ அவளை அடையாளம் தெரியவில்லை. அவளை பொறுத்த வரை அவள் வாழ்வில் அவன் ஒரு ‘மூன்றாம் பிறைதான்’ .

இவ்வாறு அமைத்த படத்தின் கதையை இயக்குனரான தாதாமிராசி எழுதியிருந்தார். வசனத்தை மற்றொரு இயக்குனரான ப . நீலகண்டன் எழுதினார் . சிறந்த வசனகர்த்தாவாக அடையாளம் காணப்பட்ட நீலகண்டன் எம் ஜி ஆரின் படங்களை இயக்க ஆரம்பித்த பின் வசனம் எழுதுவதை நிறுத்தி விட்டார். ஆனாலும் இந்தப் படத்துக்கு அவர் வசனங்களையும் எழுதி , படத்தையும் இயக்கி இருந்தார். வசனங்கள் சிறப்பாகவும் , அளவுடனும் அமைத்திருந்தன. நானே ஊரை ஏமாத்துறவன், நான் உற்பத்தி பண்ணின பயல் என்னையே ஏமாத்துறான் என்று எம் ஆர் ராதா சொல்லும் போது கொட்டகையே அதிர்கிறது. படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருந்தார் நீலகண்டன்.

கண்ணதாசனின் என்னம்மா சவுக்கியமா எப்படி இருக்குது மனசு, பாலாற்றில் சேலாடுது இரண்டு டூயட்டுகளும் இனிமையாக அமைந்தன. ஏ மருதகாசி இயற்றிய நீயும் நானும் ஒன்று பாடல் கதையுடன் மிக பொருந்தி சுசிலா குரலில் உருக்கமாக ஒலித்தது. கே வி மகாதேவனின் இசை ரசிக்கும் படி அமைந்தது. ஜி துரை படத்தை ஒளிப்பதிவு செய்தார். சையத் அஹம்மத் கலை இயக்குனராக செயற்பட்டு தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

படத்தில் எம் ஜி ஆரின் நடிப்பு அருமை. சித்தம் கலங்கியவராக அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவர் நடிப்பு பிரகாசித்தது. இந்தப்

படத்தில் கவர்ச்சி, நடனம் என்பனவற்றை விடுத்து உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நடிக்கும் வாய்ப்பு இ வி சரோஜாவுக்கு கிடைத்தது. அதனை நன்றாக கையாண்டிருந்தார் அவர். இவர்களுடன் அசோகன், எம் வி ராஜம்மா, எல் விஜயலக்ஷ்மி, சுந்தரிபாய், ஆகியோரும் நடித்தனர். எம் ஆர் ராதா ஒரு பக்கம் வில்லனாகவும் , மறுபக்கம் தங்கவேலு, ஜி சகுந்தலாவுடன்

சேர்ந்து நகைச்சுவையாகவும் நடித்து ரசிகர்களை தன் வசமாக்கிக் கொண்டார். படத்தில் குண்டுமணி, அசோகன் இருவருடனும் எம் ஜி ஆர் மோதும் காட்சி சூப்பர். இ வி ராஜன் படத்தை தயாரித்தார். மன நோயாளியாக நடித்தால் படம் ஓடாது என்று சில பட விநியோகஸ்தர்கள் அச்சுறுத்த படத் தயாரிப்பை பாதியிலேயே நிறுத்தி விட எம் ஜி ஆர் தீர்மானித்து விட்டார். ஆனால் பின்னர் ராஜன் அவரை தைரியப் படுத்தி மீதி படத்தில் நடிக்க வைத்தார்.

எம் ஜி ஆர், இ வி சரோஜா இருவரும் ஜோடியாக நடித்த ஒரே

படமாகவும், இருவருடைய நடிப்புக்கும் தீனி போடும் படமாகவும் கொடுத்து வைத்தவள் அமைந்தது.


No comments: