உலகச் செய்திகள்

உக்ரைனிய தலைநகரில் ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல் 

உலக வெப்பமாதல் முதல்முறையாக 1.5 செல்சியஸ் வரம்பை மீற வாய்ப்பு

எல்லை பிரச்சினை குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சு

தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே குழப்பத்துடன் போர் நிறுத்தம் அமுல்


உக்ரைனிய தலைநகரில் ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல் 

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இந்த மாதத்தில் எட்டாவது முறையாகவும் ரஷ்யா கடும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மூவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

நகருக்கு மேலால் வந்த ஏவுகணைகள் மீது வான் பாதுகாப்பு முறை சூடு நடத்தும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது. இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் விழும் ஆபத்து இருப்பதால் மக்கள் ஜன்னல்களில் இருந்து ஒதுங்கி இருக்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில ரொக்கெட் பாகங்கள் நகரின் மிருகக்காட்சி சாலை உட்பட மத்திய மாவட்டங்களில் விழுந்ததாக நகர மேயர் விடாலி கிளிச்கோ தெரிவித்துள்ளார்.

வான் தாக்குதல் எச்சரிக்கை உக்ரைன் நேரப்படி நேற்று அதிகாலையில் விடுக்கப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இந்த சிக்கலான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு இந்தத் தாக்குதலின் தீவிரம் அசாதாரணமாக இருந்தது என்று கீவ் நகர அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பிய நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரது சுற்றுப்பயணத்தில் ரோம், பெர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் கூட்டணிகள் பெரும் அளவான இராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மோதல்களால் பல நகரங்களும் அழிவுக்கு உள்ளாகி உள்ளன. சுமார் 8.2 மில்லியன் உக்ரைனியர்கள் ஐரோப்பாவில் அகதிகளால் பதிவாகி இருப்பதோடு இவர்களில் 2.8 மில்லியக் பேர் ரஷ்யாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.   நன்றி தினகரன் 




உலக வெப்பமாதல் முதல்முறையாக 1.5 செல்சியஸ் வரம்பை மீற வாய்ப்பு

அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பநிலை அதிகரிப்பதற்கான முக்கிய வெப்பநிலை வரம்பு உடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

தற்போதில் இருந்து 2027 ஆம் ஆண்டுக்கு இடையே 1.5 பாகை செல்சியஸ் உலக வெப்பமாதல் வரம்பை கடப்பதற்கு 66 வீத வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கோடை காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை நிகழ்வுடன் மனித செயற்பாடுகளால் வெளியிடப்படும் பசுமையில்ல வாயு உமிழ்வுகள் காரணமாகவே வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் இந்த வரம்பை கடந்தாலும் அது தற்காலிகமானதாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரம்பு எட்டப்பட்டால், தொழில்மயமாக்கலில் இருந்து புதைபடிவ எரிபொருள் வெளியேற்றம் உண்மையில் அதிகரிக்க ஆரம்பிப்பதற்கு முன், 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்ததை விட உலகம் 1.5 பாகை செல்சியஸ் வெப்பமாக இருக்கும்.

சர்வதேச பருவநிலை பேச்சுவார்த்தைகளில் 1.5 பாகை செல்சியஸ் ஓர் எச்சரிக்கை அடையாளமாக உள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் உலக வெப்பநிலை 1.5 செல்சியஸ் வரம்புக்கு மட்டுப்படுத்த உலக நாடுகள் இணங்கின.

1.5 செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை செல்வது ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில் நீண்ட வெப்ப அலை, மேலும் தீவிரம் கொண்ட புயல்கள் மற்றும் காட்டுத் தீ சம்பவங்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

எனினும் இந்த வெப்பநிலை வரம்பு மீறப்பட்டபோதும் அது பாரிஸ் கட்டுப்பாட்டை மீறுவதாக அமையாது. உமிழ்வுகளை விரைவாக குறைப்பதன் மூலம் உலக வெப்பமாதலை கட்டுப்படுத்த இன்னும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

எந்த ஓர் ஆண்டிலும் 1.5 செல்சியஸ் வரம்பை மீற வாய்ப்பு இருப்பதாக 2020 தொடக்க உலக காலநிலை அமைப்பு மதிப்பீடு செய்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.5 பாகை வரம்பை மீற 20 வீதத்துக்கும் குறைவான வாய்ப்பே இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டு அது 50 வீதமாக அதிகரித்ததோடு தற்போது அது 60 வீதமாக உயர்ந்துள்ள நிலையில் முன்னரை விட வெப்பமாதல் வரம்பு மீறப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.    நன்றி தினகரன் 





எல்லை பிரச்சினை குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சு

எல்லைப் பிரதேசங்களில் நிலவும் அசாதாரண நிலைமைகள் குறித்து இந்தியாவும் சீனாவும் கலந்துரையாடியுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங்வுக்கும் இடையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த சீன வெளிவிவகார அமைச்சருடன் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

“சீன மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகள் குறித்து நாம் வெளிப்படையாகக் கலந்துரையாடியுள்ளோம். இங்கு விலகல் செயன்முறையை நாம் முன்நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் எல்லைப் பகுதிகளின் அமைதி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 





தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

தாய்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கடந்த ஒரு தசாப்த இராணுவ மற்றும் இராணுவ ஆதரவு ஆட்சியை நிராகரித்து சீர்திருத்தவாத எதிர்க்கட்சி அதிக இடங்களையும் அதிக மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தேர்தலின் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், முற்போக்கான முன் நகர்வு கட்சி மற்றும் பியு தாய் கட்சி 500 ஆசனங்களில் 286 இடங்களை வென்றுள்ளன.

எனினும் 250 உறுப்பினர்களைக் கொண்ட இராணுவம் நியமித்த செனட், பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்கும் நிலையில் புதிய அரசு ஒன்றை அமைப்பதில் தொடர்ந்தும் நிச்சயமில்லாத சூழல் இருந்து வருகிறது.

இதில் இளைஞர்களை தலைமையாகக் கொண்டு முதல் முறை தேர்தலில் போட்டியிட்ட முன் நகர்வு கட்சி கீழ் சபையில் அதிக இடங்களைப் பெற்றிருப்பதோடு முன்னால் பிரதமர் சினவாத்ரா மகளின் தலைமையில் போட்டியிடும் பியு தாய் கட்சி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரச குடும்பம் மற்றும் இராணுவ சார்பு தரப்புகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதனிடையே தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்கத் தயார் என்று முன் நகர்வு கட்சித் தலைவரான 42 வயது பிட்டா லிம் ஜரொன்ராட் கூறியுள்ளார்.

ஆட்சி அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.    நன்றி தினகரன் 





காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே குழப்பத்துடன் போர் நிறுத்தம் அமுல்

காசாவில் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையெ ஐந்து நாட்கள் நீடித்த மோதலுக்குப் பின் போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (13) இரவு போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரும் இரு தரப்புகளும் தாக்குதலை தொடர்ந்த நிலையில் குழப்பமான சூழலிலேயே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (09) தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 33 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழு இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

காசாவில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ரொக்கெட் குண்டு தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலியர் மற்றும் இஸ்ரேலில் பணி புரியும் ஒரு பலஸ்தீனர் என இருவர் கொல்லப்பட்டனர்.

மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட எகிப்து, போர் நிறுத்தத்தை இரு தரப்பும் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளது. போர் நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் அமெரிக்கா, தீர்வொன்றை எட்டுவதற்கு பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.போர் நிறுத்தம் சனிக்கிழமை இரவு 10 பணிக்கு அமுலுக்கு வந்த நிலையில் காசாவுக்கு நெருக்கமாக உள்ள டெல் அவிவின் புறநகர் பகுதியில் காசாவில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வந்ததால் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது மீண்டும் வான் தாக்குதல்களை நடத்தியது.

இந்த குழப்ப சூழலை தொடர்ந்தே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இதில் பொதுமக்கள் மற்றும் மற்றைய தனி நபர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகள் இணங்கி இருப்பதாக எகிப்து உளவுத் தகவல்களை மேற்கோளாகக் கொண்டு பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்கள் நீடித்த மோதல்களில் காசாவில் இருந்து குறைந்தது 1234 ரொக்கெட் மற்றும் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

மறுபுறம் காசாவெங்கும் 371 பலஸ்தீன ஜிஹாத் அமைப்புகளின் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இந்தத் தாக்குதல்களில் அந்தக் குழுவின் மூன்று தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 33 பேரில் பாதி அளவானவர்கள் பொதுமக்கள் என்பதோடு அவர்களில் ஏழு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 





No comments: