இலங்கைச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 

கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வடக்கு: சார்ள்ஸ்; கிழக்கு: செந்தில் தொண்டமான்; வடமேல்: லக்ஷ்மன் யாப்பா

யோகா பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 

முள்ளிவாய்க்கால் நிகழ்வின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று கொழும்பில் நடைபெறவுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை   10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில், கொழும்பில் இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருவோர்,வெள்ளை மலர்களை கொண்டுவருமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி தினகரன் 


கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சுப வேளையில் கடமைகளை பொறுப்பேற்றார்.

உத்தியோகபூர்வமாக சுபவேளையில் ஆவணத்தில் கையெழுத்திட்டபின்னர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்கவிடம் கையளித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இ.தொ.கா.வின் மூத்த தொழிற்சங்கவாதியும் கட்சியின் உபதலைவருமான ரி.வி.சென்னன், பரத் அருள்சாமி, கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களின் செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகளென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ரொட்டவெவ குறுப் நிருபர் - நன்றி தினகரன் 





கிழக்கு ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், நேற்று (18) காலை தெட்சண கைலாயமென போற்றப்படும் அருள்மிகு மாதுமையாள் சமேத கோணேஸ்வரர் பெருமான் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சென்ற போது பிடிக்கப்பட்ட படம்.

(படம்: அன்புவழிபுரம் தினகரன் நிருபர்) - நன்றி தினகரன் 





வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.   நன்றி தினகரன் 





வடக்கு: சார்ள்ஸ்; கிழக்கு: செந்தில் தொண்டமான்; வடமேல்: லக்ஷ்மன் யாப்பா

- ஜனாதிபதியினால் ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் இ.தொ.கா. பிரதிநிதிகளான அமைச்சர் ஜீவன் தொண்டமான், எம். ரமேஷ்வரன் எம்.பி  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புதிய ஆளுநர்கள்

திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் - வடமாகாண ஆளுநர்

செந்தில் தொண்டமான் -  கிழக்கு மாகாண ஆளுநர்

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - வடமேல் மாகாண ஆளுநர் 

வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களின்  ஆளுநர்கள் ஜனாதிபதியினால் கடந்த திங்கட்கிழமை (15) பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.   நன்றி தினகரன் 





யோகா பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், ஒலிபரப்பாளர் மற்றும் பெண்ணிய ஆர்வலருமான திருமதி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கடந்த (18) காலமானார்.

யாழ். கரவெட்டியைச் சேர்ந்த எம் வல்லிபுரம் (பொலிஸ் இன்ஸ்பெக்டர்) தம்பதியினரின் மூத்த மகளான இவர்,

தினபதி, சிந்தாமணி மற்றும் வீரகேசரியிலும் பத்திரிகையாளராகக் கடமைபுரிந்தவர். பின்னர் இலங்கை குடும்பத் திட்டச்சங்கத்தில் சிறப்பாகப்பணி புரிந்து ஓய்வு பெற்றார். அத்துடன் இலங்கை வானொலியில் கல்விச்சேவை உட்பட பல நிகழ்ச்சிகளையும் நடத்திப் பெயர் பெற்றதோடு சிறந்த மேடைப்பேச்சாளராகவும் விளங்கினார். பல நாடுகளுக்கும் குடும்பத்திட்ட சங்கம் சார்பாக விஜயம் செய்த யோகா, பத்திரிகைகளில் சிறப்பான தொடர் கட்டுரைகளையும் எழுதினார். யுகமலர் இவரது சிறுகதை தொகுப்பு நூலாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது. தொடர்ந்தும் இவர் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கொழும்பு கலைச்சங்க செயலாளராக செயற்பட்ட கே, பாலச்சந்திரனின் அன்பு துணைவியாரான யோகா, தற்போது கனடாவிலுள்ள ஜெகன். சுதன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.   நன்றி தினகரன் 

No comments: