ஒரு புறம் கஞ்சி, மறுபுறம் கலயம் இரண்டுக்கும் நடுவே பதினான்கு வருடங்கள் ! அவதானி


இறுதிப்போர் முடிந்து 14 வருடங்களின் பின்னர், புதிதாக வந்துள்ள இலங்கை அதிபருடன் தமிழ்க் கட்சிகள் பேசத்தொடங்கிய காலப்பகுதியில் வடக்கிலும், கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியை , அந்தப் போரில் பாதிக்கப்பட்ட உறவுகளும், தன்னார்வத் தொண்டர்களும் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் கொடுந் துயரத்தை நினைவேந்தவிடாமல்


தடுத்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவை விரட்டும் காலிமுத்திடல் அறப்போராட்டத்தின்போதும்,  கடந்த ஆண்டு இதே மாதம் அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இன்றைய அதிபர் அமைச்சராகவும் இவரது  மாமனார் ஜே.ஆர். ஜெயவர்தனா  அதிபர் பதவியிலுமிருந்த காலப்பகுதியில் எரிக்கப்பட்ட யாழ். பொது நூலகம் குறித்தும் காலிமுகத்திடலில் நினைவுகூரப்பட்டது.

அவ்வேளையில் அங்கு தோன்றிய சுவடுகளை முற்றாக அழித்துவிட்டு, இந்த ஆண்டு பெப்ரவரிமாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் காலிமுகத்திடலை மாற்றினார் இன்றைய அதிபர்.

மீண்டும் அங்கே எவரும் போராட்டம் நடத்தமுடியாதவகையில் சட்டங்களை இறுக்கமாக்கினார், இந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி.

இவர் பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன அதிபராகவும் இருந்த காலப்பகுதியில் இவர்களுடன் தேன் நிலவுகொண்டாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், அவ்வேளையில் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் அடையாமல் இருந்துவிட்டு, தற்போது பேச்சுவார்த்தைக்கு  வந்தனர்.

இவர்கள் தலைநகரில் பேச்சுவார்த்தையில் இழுபறிப்பட்டுக்கொண்டிருந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாரப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு குடும்பத் தலைவனுக்கோ, தலைவிக்கோ தமது குடும்பத்தின் தேவை என்ன..?  என்பது நன்கு தெரிந்திருக்கும். பிள்ளைகள் அவர்களை நம்பி வாழ்பவர்கள். சுயமாக தங்கள் கால்களில் நிற்கும் வரையில் அவர்கள் தமது பெற்றோரின் தயவில்தான் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு முயற்சிப்பார்கள்.

ஒரு நாட்டின் அதிபரும் பிரதமரும் குடும்பத்தலைவன் – தலைவிக்கு ஒப்பானவர்கள்.

அரைநூற்றாண்டுக்கு மேல் அரசியல் அனுபவம் மிக்க சமகால அதிபருக்கும் பிரதமருக்கும்,  இலங்கையில்  பிழையான அரசியல் நடைமுறைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் மூவின மக்களுக்கும் என்ன தேவை?  என்பது  தெரியாமலா இருக்கிறது.?

இதுவரையில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன.

தொடர்ந்தும்  ஏமாற்றியமையால்தான், சிங்களவர் தரப்பிலும் தமிழர் தரப்பிலும்  தோன்றிய இளம் தலைமுறையினர்  ஆயுதங்களை  நம்பி களத்தில் இறங்கினர்.

1971 இல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவ முன்வந்தது போன்று, 2009 இறுதி யுத்தத்தின்போதும் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா முன்வந்தது.

அதனால்தான்,   அந்த யுத்தத்தை நடத்தியது இந்தியாதான்  “ என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் சொல்லி வந்தார்.

நிறைவேற்று அதிகாரம் மிக்க பதவியிலிருந்த ஜே. ஆர். ஜெயவர்தனா, தனது உட்கட்சி வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டே அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அதனை எதிர்த்தவரும், அந்த ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் கைச்சாத்திட்டவரும் இறுதியில் யாரால், எவ்வாறு கொல்லப்பட்டனர்?  என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை.

பேச்சுவார்த்தை என்பது காலத்தை கடத்தும் ஒரு வகை உத்தி என்பது எமது தமிழ்த்தலைவர்கள் உட்பட சாதாரண மக்களுக்கும் தெரியும்.

தமிழ்த்தலைவர் சம்பந்தன் ஐயா  அவர்களுக்கு 90 வயதாகிவிட்டது. அவருடைய ஆயுள் காலத்திற்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.


தந்தை செல்வாவின் காலத்தில் தமிழ் ஈழம் அமைத்துவிடவேண்டும் என்று முன்னர் சொன்னவர்களின் அடுத்த சந்ததிதான் தற்போது இவ்வாறும் சொல்லி வருகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை மீண்டும் இயங்கவைத்தால், ஒரளவு அதிகாரப்பரவலாக்கல் இடம்பெறலாம் என்று ஒரு தரப்பு சிந்திக்கின்றது.

இதேவேளை,  தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் புத்த விகாரைகளுக்கு எதிராக தமிழ்மக்கள்  கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது,  தென்னிலங்கை கடும்போக்காளர்கள் குரலில் வழக்கமான சுருதி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பௌத்த பாரம்பரியத்தை வடக்கு - கிழக்கில் பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என்று கடும்போக்காளர்களான பௌத்த பிக்குகள் மீண்டும் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

ஆளுநர்களை நியமிக்கும்போதும் பௌத்த பாரம்பரியத்திற்கும் சிங்கள மக்களுக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது எனச் சொல்கிறார்கள். இத்தகைய குரல்களுக்கு மத்தியில்தான் வடக்கிற்கும் கிழக்கிற்கு இரண்டு தமிழர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் வடக்கினையும் மற்றவர் மலையகத்தையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

முன்பு இதே அரசினால் வடக்கில் நியமனம் பெற்றிருந்த ஆளுநருக்கும் இங்கிருந்த தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிளுக்கும் இடையே இருந்த உறவின் இலட்சணம் நாம் அறிந்ததே!

ஆளுநர்கள், உயர் அதிகாரத்திலிருக்கும் நாட்டின் அதிபரால் நியமிக்கப்படுபவர். அவர், அந்த அதிகாரத்திற்கு விரோதமாக இயங்கவே முடியாது. இயங்கினால், பதவி பறிபோய்விடும்.

ஆளுநர்கள் மூலம் மாகாணங்களின் நிருவாகத்தை கவனிக்க அதிபர் விரும்புவார்.  அவரை மீறி ஆளுநர்கள் எதனையும் செய்துவிட முடியாது.

இவ்வாறு ஒரு புறத்தில் ஆளுநர்களிடம்  தனது விருப்பத்திற்கு ஏற்ப அதிகாரத்தை கொடுத்துவிட்டு, பாரளுமன்ற தமிழ்ப்பிரதிநிதிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் தினமும் மே மாதங்களில் வரும்போது, போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தவேண்டும் என்ற குரல் எழுந்து,  பின்னர் ஓய்ந்துவிடும்.

மீண்டும் அடுத்த வருடத்தில் மே மாதம் வரும்போது இந்தக்குரல் ஒலிக்கத்தொடங்கும்.

இப்படியே கடந்த 14 வருடங்கள் ஓடிவிட்டன.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒரு புறத்தில் கஞ்சி வார்த்துக்கொண்டிருக்கும்போது, எமது தமிழினத்தலைவர்கள் கலயம் ஏந்திக்கொண்டு தீர்வுப்பிச்சைக்காக அதிபரிடம் கையேந்திக்கொண்டிருக்கிறார்கள்.

அர்த்தமுள்ள தீர்வை வழங்கக்கூடிய நிறைவேற்று அதிகாரம் இந்த அதிபரிடம் இருக்கிறதா..?

அவரிடத்தில் ஆளுநர்களை மாற்றும் அதிகாரம் இருக்கிறது.  அந்த அதிகாரத்தையாவது தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் தன்னை இந்தப்பதவியில் அமர்த்துவதற்கு பின்னணியிலிருந்தவர்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டிய சூழ்நிலையின் கைதியாகவே இருப்பார்.

அடுத்த ஆண்டு ( 2024 ) மே மாதம் வரும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை நாம் பார்ப்போம்.

யார் அதிகாரத்தில் இருப்பார்கள்…?   யார்… யார்… ஆளுநர்களாக இருப்பார்கள்…?  என்பதை இப்போது சொல்ல முடியாது.

---0---

 

 

 

No comments: