செந்தமிழ் சேக்கிழார் செப்பினார் மாக்கதை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



பலமொழிகள் உலகிருக்கு பக்தியினைப் பாரா

பக்தியினை உள்வாங்க நினைப் பதுவுமில்லை
தமிழன்னை பக்தியினை தானேந்தி நின்றாள்
நிலவுலகில் பக்தியினை நிறுத்தியதே தமிழும்

கம்பனொடு இளங்கோவும் கன்னித் தமிழணைத்தார்

வள்ளுவரும் வள்ளுவத்தை வழங்கிட்டார் தமிழில்
சங்கத்தமிழ் தமிழுக்கே தங்கத் தமிழாகும்
சேக்கிழார் செழுந்தமிழோ பக்தித் தமிழாகும்

பக்தியினைப் பொருளாக்கிப் பாடினார் அவரும்


பரமனடி பணிந்தாரை பலரறியச் செய்தார்
சொத்தெனவே பக்தியினை சேக்கிழார் கொண்டார்
சுந்தரத் தமிழெடுத்து சுவையாக ஈந்தார்

தேமதுரத் தமிழில் தேவாரம் இருக்கிறது

தித்திக்க தித்திக்க திருவாசக மினிக்கிறது 
அத்தனையும் சேக்கிழார் அகத்தி லமர்த்தினார்
அரனடியார் பக்தியே அவர்கருவாய் ஆகியது

சோழரின் அமைச்சர் சுந்தரமாம் வாழ்க்கை

ஆளணிகள் நிறைவு அதிகாரம் ஆளுமை
சேக்கிழார் மனத்தைத் திசைமாற வைக்கவில்லை
எம்பிரான் எண்ணமே ஏற்றதவ ருள்ளமே

பட்டை பகட்டை தொட்டுவிடா மனமவர்க்கு
பரமனைப் பக்தியை இருத்திட்ட மனமவர்க்கு
உலகுய்ய உலகெலாம் அடியெடுத்தார் சேக்கிழார் 
உமைபாகன் அடியாரை உரைத்திட்டார் காவியமாய்  

அமைச்சராய் இருந்தார் அறவழி நடந்தார்
ஆணவம் மேலிடும் அரசினைக் கடிந்தார்
அரனது அடியார் அன்பினைச் சொன்னார்
ஆணவ அரசின் போக்கினை மாற்றினார்

போரும் வெற்றியும் இன்பமே அல்ல 

இறையது நினைப்பே என்றுமே இன்பம் 
குறையுடை வாழ்வினை ஒழித்திடல் வேண்டும்
புவியதில் நிறைவு இறையது வழியே 

சேக்கிழார் சிந்தனை சிறந்துமே நின்றது

மாக்கதை புராணமாய் மலர்ந்தது தமிழில்
ஆக்கிய சேக்கிழார் ஆசியியைப் பெற்றார்
அன்னைத் தமிழும் பக்தியாய் மலர்ந்தது

தொண்டே கதையின் தொடர்பாய்  அமைந்தது

வந்த அடியார் மனமதில் நிறைந்தனர்
பற்பல குலத்தவர் பற்பல தரத்தினர்
பக்தியின் நிலையில் ஒன்றாய் தெரிந்தனர்

அடியார் உளத்தை தெளிவாய்க் காட்ட 
சேக்கிழார் சொற்கள் திறம்பட  அமைந்தன
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
என்பதைச் சேக்கிழார் இருத்தினார் சிறப்பாய்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்
வீடும் வேண்டா விறலின் மேவினார் 
கூடு மன்பினில் கொட்டினார் சேக்கிழார்  

சம்பந்தர் அப்பர் சைவத்தின் காவலராய்
சேக்கிழார் காட்டுவது சிறப்பான சிந்தனை
சுந்தரர் தோழமை தொய்விலா பக்தியே
செந்தமிழ் சேக்கிழார் செப்பினார் மாக்கதை 

குலங் காணா குணங் கண்டார்
நிலம் சிறக்க நலன் சொன்னார்
உளம் பக்தி நிறை கண்டார்
உவந் தளித்தார் உயர் கதையை 

தொண்டைத் தொட்டார் தொண்டினைத் தொட்டார்
வண்டாய் பக்தியை இருத்தினார் தமிழில்
நன்றாய் சைவம் நானிலம் விளங்க
தந்தார் மாக்கதை தமிழினில் இனிக்க 

சேக்கிழார் வார்த்தை திருவுடை வார்த்தை
சிவனது திருவருள் நிறைந்திடு வார்த்தை 
மாக்கதை சேக்கிழார் மருளகல் பெருங்கொடை
கேட்பவர் திருந்துவர் கிளர்மன மொடிங்கிடும்


No comments: