சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ( 1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன்.
1973 ஆம் ஆண்டு அவரது விடிவை நோக்கி நாவல், வீரகேசரி
பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.
எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில்
ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன்.
தெணியான் தன்னுடன் இரண்டு
நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்: கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம், சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும்
ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.
வதிரியைச் சேர்ந்த அன்பர்
சதாசிவம், எங்கள் ஊரில் பூட் எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்திவந்தார். வடமராட்சியிலிருந்து
வந்த மூவரும் சதாசிவம் வீட்டில் தங்கியிருந்தனர்.
விடிவை நோக்கி அறிமுகவிழா,
எங்கள் ஊரில், 1966 இல் அண்ணி என்ற இலக்கிய இதழை நடத்திய, உறவு முறையில் எமது மாமாவான அ. மயில்வாகனன் தலைமையில் நடந்தது.
கொழும்பிலிருந்து இலக்கிய
ஆர்வலர் எம். கிஸார், தனது காரில் மல்லிகை ஜீவா, மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரை
அழைத்து வந்தார்.
அந்த விழா வெகுசுவாரசியமாக
நடந்தது.
அதனைப்பற்றி அடுத்த வாரம்
வெளிவந்த தேசாபிமானியில் ( கம்யூனிஸ்ட்
கட்சியின் ஏடு ) மு. கனகராஜன் எழுதியிருந்தார். இவ்வாறு தெணியானுடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கிய நட்புறவு , சகோதர வாஞ்சையாக வளர்ந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அவர் மறைந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்ததினம் வரும் ஜனவரி மாதம்
06 ஆம் திகதி முடிந்தவரையில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதும் எனது கடமையாக இருந்தது.
குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.
இலங்கை வானொலிக்காக பல நாடகங்களும்
எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் கா.
சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றிய நூல்களையும்
வரவாக்கியிருப்பவர்.
தான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.
தெணியானின் தம்பி நவம் கனடாவில்
நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தெணியானின் மணிவிழாக்காலத்தில் ( 2003 ), இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா
சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார்.
இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.
வடபுலத்தில் அடிநிலை மக்களின்
போராட்டங்களிலும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களிலும் பங்கேற்ற தெணியான், ஆலயத்துக்குள்
எம்மால் பிரவேசிக்க முடியாத மூலஸ்தானம் வரையும் சென்று பூசை செய்யும்
ஐயர்களின் அவல வாழ்வையும் தனது பொற்சிறையில்
வாடும் புனிதர்கள் என்ற நாவலில் சித்திரித்தவர்.
---0---
No comments:
Post a Comment