சிட்னியில் நடந்த தமிழ் வளர்த்த சான்றோர் விழா – ஒரு கண்ணோட்டம்

 


 பல்லாண்டுகளுக்கு முன்னர் புகழ் பூத்த தமிழறிஞர் மு. வரதராசனார் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் ஓர் அரிய நூலை எழுதினார்.  அதனை இந்திய சாகித்திய அக்காதெமி வெளியிட்டிருந்தது.  அந்த நூலிலே தமிழ் இலக்கியத்துக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்திருந்த அனைத்துத் தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும் கால வரிசைப்படி தொகுத்து எழுதி இருந்தார்.

 அந்நூலிலே “நாவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக் குறைய பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.  ஆடிப் பிறப்புக் கொண்டாட்டம் முதலியனவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார்...” என்று தங்கத் தாத்தா என நாமெல்லோரும் போற்றுங் கவிஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  கம்பனும், இளங்கோவும், பாரதியும் அணிசெய்யும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கைக் கவிஞர் ஒருவரும் இடம்பெற்றார் என்பதே பெருஞ்சாதனை தான்!




அத்தகைய சாதனையாளரின் பெயரன் கவிஞர் இளமுருகனார் பாரதி.  அவர் பல்லாண்டுகளாகச் சிட்னியில் வசித்து வருகின்றார்.   தமிழ் மீது தாளாத அன்பும், பற்றுங் கொண்டவர்.

 

இந்த எண்பது வயது இளைஞர் சென்ற தசாப்தத்தில் தமிழ் வளர்த்த சான்றோர்களுக்காக எட்டு விழாக்களை எடுத்துத் தமிழறிர்கள் பலரைப் பற்றி நாம் அறியவும் நினைவு கூர்ந்து போற்றவும் வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார்.

 

தனி மனிதராக இவர் செய்து வரும் பணி போற்றுதற்குரியது. எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமைவது.

 

இந்த வரிசையில் எட்டாவது விழாவாகச் சென்ற ஞாயிறு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானக் கிராமணியாருக்கும், யாழ்ப்பாணத்துச் சதாவதானி  நா. கதிரவேற்பிள்ளைக்கும் விழா எடுத்திருந்தார்.  விழாவுக்குச் சிட்னித் தமிழ் ஆர்வலர்கள் திரண்டு வந்திருந்து சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபத்தில் நிறைந்திருந்தார்கள்.   கொரானாவின் பாதிப்பால் சில ஆண்டுகளாக இத்தகைய இலக்கிய விழாக்கள் தடைப்பட்டிருந்தன.  மீண்டும் அவை புத்துயிர் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தந்தது!

 

கவிஞர் இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடலைப் பல்வைத்தியக் கலாநிதி  திருமதி சிவரதி கேதீஸ்வரன் தானே இசையமைத்துச் சிறப்பாகப் பாடினார்.  கர்நாடக சங்கீதத்தை மக்கள் இரசிக்கும் வகையில் வழங்குந் திறமை படைத்தவர் அவர் என்பதை அன்று மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.

 

சிட்னியின் ஔவைப் பிராட்டி என்று நாம் கொண்டாடுந் திருமதி பாலம் இலட்சுமணன் அம்மா அவர்கள் தள்ளாத வயதிலும் விழாவுக்கு வருகை தந்து ஆசியுரையை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் வழங்கினார்.  பழைய பல சம்பவங்களை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டமை எமது ஆர்வத்தைத் தூண்டியது.

 

விழாவுக்கு வந்திருந்தோரைக் கவிஞர் இளமுருகனார் பாரதியும் அவரது பெயரன் செல்வன் அமிர்தன் திருவரங்கனும் வரவேற்றுப் பேசினார்கள்.  கவிஞரின் பேச்சுக் கவிதை நடையாகவே இருக்கும். அன்றும் அப்படித்தான் இருந்தது.  செல்வன் அமிர்தன்



கணீரென்ற குரலில் மிகவும் எழுச்சியுடன் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றான்.  தமிழ் எதிர்காலத்தில் என்னாகுமோ என்று ஏங்குவோர் உள்ளத்தில் அன்று நிச்சயம் ஒரு புத்துணர்வு செல்வன் அமிர்தனின் பேச்சைக் கேட்டதும் ஏற்பட்டிருக்கும்!

 

சிட்னி சைவ மன்றத் தலைவர் சிவஞானச் சுடர் சிவத்திரு. ந. சிதம்பரநாதன் அவர்கள் நல்லதோர் தலைமை உரையை வழங்கினார்.

 



 அதன் பின்பு தமிழிசைப் பாடல்கள் சிலவற்றை வைத்தியக் கலாநிதி செல்வி யதுகிரி உலோகதாசன் அவர்கள் அட்சரசுத்தியுடனும் நல்ல தமிழ் உச்சரிப்புடனும் பாடினார்.  இவருக்குப் பக்கவாத்தியமாக மிருதங்கத்தைச் செல்வன் பிரணவன் ஜெயராசாவும் வயலினைச் செல்வி அகல்யா பாவலனும் திறமையாக வாசித்தார்கள்.  ஓர் இளைஞர் குழு அருமையான தமிழிசை நிகழ்ச்சியை மனதை ஈர்க்கும் வகையில் வழங்கியமையைப் பாராட்டுகின்றோம்.  இவர்களிடம் இருந்து மேலும் பல சிறப்பான தமிழிசை நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றோம்!

   



 

செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் மிகச் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்.  மபொசியைப் பற்றி அவர் ஓர் அரிய சொற்பொழிவை ஆற்றினார்.  செஞ்சொற் செல்வர் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர் அல்லர்.  அவரது பேச்சில் பல வரலாற்றுத் தகவல்கள் நிறைந்திருக்கும்.  அவற்றையெல்லாம் குறிப்புகளின் உதவி இன்றிப் பேசும் போது இயல்பாகவே வழங்கும் நினைவாற்றலுங் கொண்டவர். ஆற்றொழுக்காக அமைதியாகப் பேசி மக்களைக் கவர்பவர்.  அன்றும் அவர் அதையே செய்தார். மபொசியைப் பற்றி நாம் அறிந்திராத பல தகவல்களைச் சொன்னார்.   பாரதியைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தவரே மபொசி தான் என்றார்.  இத்தனைக்கும் மபொசி மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லை என்று அவர் சொன்னபோது நாம் உண்மையிலேயே பிரமித்துப் போனோம்.  ஏழு மணிக்கு இடைவேளை என்பதால் அவரது பேச்சை இடையிலே நிறுத்த வேண்டியதாயிற்று.   இன்னும் பேசியிருந்தால் பல அரிய தகவல்களை அவர் பகிர்ந்திருப்பார் என்பது நிச்சயம்.

 

இடைவேளையின் பின் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் சதாவதானி நா. கதிரவேற்பிள்ளையைப் பற்றி ஓரு சிறந்த சொற்பொழிவை ஆற்றினார்.  வேந்தனார் என்று நாம் கொண்டாடும் யாழ்ப்பாணத்துக் கவிஞர் வேந்தனாரின் புதல்வி திருமதி கலையரசி அவர்கள்.  தந்தையின் வழியிலேயே தமிழிலே தோய்ந்து வாழ்பவர் அவர்.  அவரது தமிழின் ஆற்றலையும் ஆர்வத்தையும் அன்று அவரது பேச்சிலே கண்டோம்.  சதாவதானி என்றால் ஒரே நேரத்தில் நூறு விடயங்களைச் செய்யும் ஆற்றல் படைத்தவர்.   இது ஓர் அசாதாரணத் திறமை.  இத்தகைய பேரறிஞர் எவ்வாறு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரின் சைவத் தமிழ்த் தொண்டால் ஈர்க்கப்பட்டார் என்றும் அவர் வழியிலேயே எவ்வாறு இலங்கையிலும் கடல் கடந்து தமிழகத்திலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்தார் என்பதையெல்லாம் விரிவாகத் திருமதி கலையரசி அவர்கள் சொன்னார்கள்.





 

இரண்டு சொற்பொழிவுகளுமே சரித்திரக் கருவூலங்களாக அமைந்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தன.

 

யாழ்ப்பாணத்து மக்களின் ஆன்மீக வாழ்விற்கு இருபதாம் நூற்றாண்டில் பெரும் வழிகாட்டியாக இருந்தவர் யாழ்ப்பாணத்து  யோகர் சுவாமிகள்.  அட்டமாசித்தி கைவரப் பெற்ற அரும்பெரும் ஞானி அவர்.  அவரது வழியிலே பல சீடர்கள் உருவாகி உலகெங்கும்



பல அரிய பணிகளைச் செய்து வருகின்றார்கள்.  சுவாமிகள் இன்றைக்கும் அவரது சீடர்களின் வாழ்விலே பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார்.  சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிலர் ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றார்கள். இருந்தாலும் கவிஞர் பாரதி அவர்கள் அவற்றிலே இடம்பெறாத பல புதிய நிகழ்வுகளையும் சுவாமிகளின் அரிய புகைப்படங்களையுந் தொகுத்து சிவஞானச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகள் என்னும்

ஓரு சிறப்பான  நூலை எழுதியுள்ளார்.  யோகர் சுவாமிகளைப் பல தடவை தரிசனம் செய்து அவரது ஆசியைப் பெற்றவர் கவிஞர் அவர்கள்.  அந்த வகையிலே இத்தகைய பணிக்கு அவர் சாலவும் பொருத்தமானவர் தான்.  இருந்தாலும் சிட்னியில் வாழ்ந்து கொண்டே, முதுமை தரும் உடல்நலப் போராட்டங்களில் தோற்று விடாமல் இந்த அரிய

பணியை நிறைவு செய்தமையை உளமாரப் போற்றுகின்றோம்.  இந்நூலும் அன்றைய விழாவில் வெளியிடப்பட்டது.  முந்நூறுக்கும் அதிகமான பக்கங்களில் சுவாமிகளின் நற்சிந்தனைகளுடன் அமைந்திருக்கும் இந்த நூல் ஒவ்வொரு சைவத் தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்!  ஒவ்வொரு சைவத்தமிழரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்!!

 

பல் வைத்தியக் கலாநிதி திருமதி யசோதரபாரதி சிங்கராயர் அவர்களின் நன்றியுரையுடனும் உலகசைவப் பேரவைத் தலைவர் திரு வனதேவா அவர்களின் தேவார, புராண வழிபாட்டுடனும் தமிழ் வளர்த்த சான்றோர் விழா இனிதே நிறைவு பெற்றது.

 

செஞ்சொற் செல்வனார் இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரையும் நாம் சிட்னிக்கு அழைத்து இங்கேயே இருக்கச் செய்து விட்டோம், அதனால் இலங்கையில் அறிஞர்களுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தமது உரையின் போது ஆதங்கப்பட்டார்.  உண்மை தான்!

 

அன்று விழாவில் பேசிய சிட்னித் தமிழ் அறிஞர்களும் விழாவுக்கு வந்திருந்த தமிழ் ஆர்வலர்களும் வாழும் நாளில் நாமும் வாழ்கின்றோமே என்னும் மகிழ்ச்சியுடனும் சிறப்பான ஓர் இலக்கிய விழா தந்த மன நிறைவுடனும் நாம் வீடு திரும்பினோம்.

 

கவிஞர் த. நந்திவர்மன்

சிட்னி

சித்திரை 2023

 

 

No comments: