வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் ? ! அவதானி


தற்கொலை செய்துகொள்வதற்கு பலரும் பல காரணங்களைச் சொல்வார்கள்.  காதல் தோல்வி, அவமானம்,  விரக்தி, பாலியல் தொல்லை,  சொத்திழப்பு, ஏமாற்றம், மனவுளைச்சல்  உட்பட எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்,  தம்மைப்பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள்  ஒரு தாயோ தந்தையோ வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகளையும் ஏமாற்றங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்து பார்ப்பதில்லை.

யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலாசாரம் எனத் திருவாய் மலர்ந்தவர் இங்கு வாழ்ந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை.  அத்தகைய யாழ். குடாநாடு தற்போது எந்தத் திசையில் செல்கிறது…?  என்பதைப் பார்க்கும்போது சமூக அக்கறைகொண்ட ஆர்வலர்களுக்கு வேதனைதான் எஞ்சியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த பதினாறு மாத காலத்துள், பதினொரு


சிறார்கள் உட்பட 229 பேர் தற்கொலை செய்து மடிந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இவர்கள் என்ன காரணத்தினால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதற்கு அவரவர் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணங்களை கூறலாம்.  கற்பிக்கலாம்.

ஆனால் அவர்கள் இழந்தது பெறுமதியான மனித உயிர்களை.  சீரான வாகனப் போக்குவரத்து இன்மையாலும், வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாதமையினாலும் கவனக் குறைபாட்டினாலும் நாளாந்தம் வீதி விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் உயிர்ப்பலிகள் தொடருகின்றன.

அத்துடன் இளம் தலைமுறையிடத்தில் போதைப் பாவனையும் அதிகரித்து வருகிறது.  யாழ். போதனா மருத்துவமனையில்  போதை வஸ்து பாவனையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றியும் அறிகின்றோம்.

இந்தச் செய்திகளின் பின்னணியில் தற்போது யாழ். குடாநாட்டில் தற்கொலை மரணங்களும் அதிகரித்திருக்கும் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருக்கிறது.

எனினும்,  யாழ்ப்பாணத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான சீர்மிய தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே இயங்கி வருகின்றன.

அண்மையில் ஒரு படித்த இளம்பெண் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.  அதனை அரசியல் கண்ணோட்டத்திலும் பார்த்தார்கள்.

சில நாட்களில் அந்தச்செய்தி அடங்கிவிட்டது.  கொழும்பிலும் ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த பெண் எரியுண்டு இறந்தார்.

இச்செய்திகள்  சில நாட்களில் அடங்கிவிடும்.

சில மாதங்களுக்குப் பின்னர் பொலிஸ் திணைக்களம் வெளியிடும் புள்ளி விபரங்கள்  அடங்கிய குறிப்பில்தான் எத்தனை மரணங்கள் தற்கொலையால் சம்பவித்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஏப்ரில் மாதம் வரையிலான 16 மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணம் குடாநாட்டில்தான் 229 பேர் தங்கள் உயிர்களை தாங்களே மாய்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று பொலிஸ் தரப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது. இவர்களில் பதினொருபேர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள். வாழ்ந்திருக்கவேண்டியவர்கள். சமூகத்தில் தொடர்பாடல் அருகிவருவதும் இதற்கு அடிப்படைக்காரணமாகியிருக்கிறது. ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் பெருகியிருக்கின்றன.  கைத் தொலைபேசியின் தொடு திரையில் நேரத்தை செலவிடும் மக்கள்,  பரஸ்பரம் ஆளையாள் பார்த்தோ, தொடர்புகொண்டோ பேசுவது குறைந்துகொண்டிருக்கிறது.


பாடசாலையிலிருந்து வரும் தமது பிள்ளைகள் அன்றைய தினம் அங்கே எவ்வாறு பொழுதை செலவிட்டார்கள் …? என்று கேட்டறிவதற்கும் பெற்றோருக்கு நேரம் இல்லை. தமது பிள்ளைகளின் நண்பர்கள் யார்..? என்பது பற்றியும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பிப்பது இல்லை.

பிள்ளைகள் தமது  மனதிலிருக்கும் பிரச்சினைகளை பெற்றவர்களிடம் சொல்வதுமில்லை. அத்தகைய சமூக அமைப்பினைத்தான் காலம் காலமாக கட்டி வளர்த்துவருகின்றோம்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற நடைமுறையை இன்று எத்தனை குடும்பத்தில் காண்கின்றோம்? !

மனவுளைச்சல் வரும் பட்சத்தில் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நட்புகளிடம் அல்லது உறவுகளிடம் மனம்விட்டுப்பேசி, தமது நெருக்கடிகளுக்கு பரிகாரம் தேடவேண்டும்.

அல்லது உளவியல் மருத்துவர்களின் ஆலோசனையை நாடவேண்டும். 

பரிகாரங்களை முதலில் குடும்ப உறவிலிருந்து தேடவேண்டும். யாழ்.


குடாநாட்டிலியங்கும் சன சமூக நிலையங்கள் அடிக்கடி தங்கள் பிரதேச மக்கள் மத்தியில் ஒன்று கூடல்களை நடத்தி, சமூகத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவேண்டும்.

பல்கலைக்கழகங்களும் இதுவிடயத்தில் கவனம் செலுத்த முடியும்.  எதற்கெல்லாமோ போராட்டம் எனவும் கடையடைப்பு கோரிக்கை , சத்தியாக்கிரகம் என்றும்  முன்னெடுக்கும் வளர்ந்த மாணவர்கள்,  சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டங்களிலும் ஈடுபடல் வேண்டும்.

இரத்த தான முகாம் நடத்துவது போன்று,  தற்கொலைகளை தடுக்கும் சீர்மிய முகாம்களையும் மாணவர்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் தன்னம்பிக்கையுள்ள தலைமுறையினரை உருவாக்க முடியும்.

கடந்த சில மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொள்ள முயன்று,  உறவினர்களின் தீவிர முயற்சியினால் காப்பாற்றப்பட்டு,  யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.  அவர்களின் தற்கொலை முயற்சிக்கான உண்மையான  காரணத்தை கண்டறிந்து பரிகாரம் தேடுவதே உறவினர்களின் பிரதான கடமையாக இருக்கவேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.  வாழவேண்டும் என நினைக்கும் வகையில் அறிவுறுத்தல்கள் அவசியம்.


இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் தங்கள் கணவர்மாரை இழந்த தமிழ்ப் பெண்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகம். அவர்கள் தமது பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு எத்தனையோ சிரமங்களை சந்திக்கின்றனர். எனினும்,  தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்நோக்கி பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழுகின்றனர்.

தமிழ்நாட்டைப் போன்று வரதட்சணைக் கொடுமையால் இலங்கையில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவு. ஆனால்,  மனவுளைச்சல்களினாலும் விரக்தியினாலும் ஏமாற்றத்தினாலும் தற்கொலை மரணங்கள் அதிகரித்துவருகின்றன.

இந்த நிலை மாறவேண்டுமானால், சமூகத்தில் தொடர்பாடல்கள் பெருகவேண்டும்.

அயலாரை நேசியுங்கள்.

 “ தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?  “

என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது வாழ்வில் எத்தனை இன்னல்களை கண்டார். வறுமையில் வாடினார் .

வீழ்ந்தாரா…?

----0-----

 

---0---

 

 

No comments: