அறிவாளி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 


தமிழில் வெளிவரும் படங்கள் பலவற்றின் கதைகள் பல வேற்று மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டனவாகவே இருந்துள்ளன. சில படங்களில் கதை எவரால் எழுதப்பட்டது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் சொல்லப்பட்டிருக்கும். பல படங்களில் அவை வெளிப்படுத்தப் படாமலே வெளியாகி இருக்கும் . அவ்வாறு வெளியான ஒரு படம்தான் அறிவாளி.

ஆங்கிலத்தில் தலை சிறந்த நாடக ஆசிரியராக திகழ்ந்த வில்லியம்

ஷேக்ஸ்பியர் எழுதிய The taming of shrew என்ற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஏ டி கிருஷ்ணசாமி தமிழில் பெண் படுத்தும் பாடு என்ற நாடகத்தை எழுதி அதனை வை ஜி பார்த்தசாரதியின் நாடக சபா மேடையேற்றி வந்தது. அந்த நாடகமே பின்னர் 63ம் ஆண்டு அறிவாளி என்ற பேரில் படமாக வெளிவந்தது.

ஏவி மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களை இயக்கியவரும், சிவாஜியின் வெற்றி படமான தூக்கு தூக்கி படத்துக்கு வசனம் எழுதியவருமான ஏ டி கிருஷ்ணசாமி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே படம் தயாரிக்கப்பட்டது.


செல்வந்தர் மகளான மனோரமா ஓர் அடங்காபிடாரி. அவளை திருமணம் செய்ய எவருமே முன்வருவதாக இல்லை. அப்படியே எவரேனும் வந்தாலும் அவளால் அவர்கள் அவமானப்படுத்தப் பட்டு விரட்டப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆளவந்தான் என்ற கிராமத்து பட்டதாரி இளைஞன் அவளை துணிந்து மணக்க முன்வருகிறான். ஆரம்பத்தில் அவனை வெறுக்கும் மனோரமா பின்னர் ஒருவிதத்தில் அவனை மணக்கிறாள். அவளை எவ்வாறு ஆளவந்தான் வழிக்கு கொண்டு வருகிறான் என்பதே படத்தின் கதை.

இந்த கதையுடன் கிராமத்து அப்பாவிப் பெண்ணான தங்கலக்ஷ்மியை மணக்கும் முத்துவேல் , மனோரமாவின் சகோதரி இந்தியாவை மணக்கும் எக்ளோவ் இவர்களின் கதைகளும் இணைக்கப் பட்டு அறிவாளியாக உருவெடுத்துள்ளது.

ஆளவந்தானாக வரும் சிவாஜி இயல்பாக நடித்திருந்தார். அடங்காபிடாரியான தனது மனைவியை வன்முறையில் அடக்காமல் சமோயோசித்தமாக திருத்துவது சபாஷ் போட வைக்கிறது. அடங்காபிடாரி மனோரமா பாத்திரம் பி பானுமதிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அவரின் அலட்சிய நடிப்பு ரசிக்கும் படி அமைந்தது.


தங்கவேலு , முத்துலட்சுமி ஜோடியின் நகைச்சுவை படத்தின் பிளஸ் பாயிண்ட். முத்துலெட்சுமிக்கு பூரி சுடுவது எப்படி என்று தங்கவேலு சொல்லிக் கொடுப்பதும் , அதற்கு அவர் எனக்குத்தான் தெரியுமே என்று சொல்வதும் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது! அத்துடன் ஆரம்ப கால நடிகரான என்னத்தே கன்னையாவை , தங்கவேலு அதட்டும் காட்சியும், அதற்கு அவர் நடுங்குவதும் அருமை.

அதே போல் டீ ஆர் ராமசந்திரன், எம் சரோஜா ஜோடியின்

நகைச்சுவையும் , அவர்களுடன் கே சாரங்கபாணி இணைந்து கொள்வதும் கலகப்பாக இருந்தது. இவர்களுடன் எஸ் வி ராமதாஸ், சட்டாம்பிள்ளை வெங்கடராமன், ஜெமினி சந்திரா, ஆகியோரும் நடித்தனர்.

படத்தில் வில்லனாக வருபவர் டி எஸ் பாலையா. வசன உச்சரிப்பு, முகபாவம் என்று அவர் காட்டும் நடிப்பு ஜோர்.
படத்தின் நகர்வுக்கு துணையாய் இருக்கிறார் அவர். சாய், சுபபலக்ஷ்மியின் நடனம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

படத்தின் பாடல்களை ஏ மருதகாசி எழுதினார். பழம் பெரும் இசையமைப்பாளர் மீரா புகழ் எஸ் வி வெங்கடராமன் இசையமைத்டஜிருந்தார். பாடல்களுக்கான இசை பழைய பாணியில் இருந்த போதும் இனிமையாக இருந்தன. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே, கூவாத இன்பக் குயில் கூவும் பாடங்கள் பிரபலம் அடைந்தன. பாபநாசம் சிவம் இயற்றிய கீர்த்தனை ஒன்றும் படத்தில் இடம் பெற்றது. படத்தை கே பாலு ஒளிப்பதிவு செய்தார்.


ஏ டீ கிருஷ்ணசாமி கதை வசனம் எழுதி தயாரித்து , இயக்கிய அறிவாளி நீண்ட காலம் படப்பிடிப்பில் இருந்தே திரைக்கு வந்தது. அதற்குள் தமிழ் படங்களின் போக்கும் ஓரளவு மாறியே இருந்தது. ஆனாலும் படத்தின் நகைச்சுவையும் அவற்றிற்கு கிருஷ்ணசாமி எழுதிய வசனங்களும் படத்தை ஓரளவு காப்பாற்றியது.

அத்துடன் பல படங்களில் இணைந்து நடித்த சிவாஜி, பானுமதி இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படமாகவும் அறிவாளி அமைத்தது.


No comments: