யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி
வலி வடக்கு விஹாரை விவகாரம்; சுமந்திரன், மாவை கடும் எதிர்ப்பு வெளியீடு
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம்
சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரிட்டன் பயணம்
நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நிலாவரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில், இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில்
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளி டமிருந்து, கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையிலுள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதுடன், உள்ளூர் விவசாயிகளுக்குப் பெரிதும் நன்மை கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10,000 கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டம், அனுராதபுரம் இராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
வலி வடக்கு விஹாரை விவகாரம்; சுமந்திரன், மாவை கடும் எதிர்ப்பு வெளியீடு
பொலிஸாரால் நேற்று ஐவர் கைது
யாழ்ப்பாணம் வலி.வடக்கு தையிட்டி விஹாரையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
விஹாரையை அகற்றக்கோரி நேற்று முன்தினம்(03) முதல் இன்று (05) வரையில் தொடர் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்ட இடத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற பொலிஸார், போராட்டக்காரர்களின் கொட்டகையை அங்கிருந்து பிடுங்கியதுடன், போராட்டகாரர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இல்லையெனில் அனைவரையும் கைது செய்வோமெனவும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வேறு எவரும் செல்ல முடியாதவாறு வீதிகளில் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன . இவற்றை மீறி பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கான உணவு , நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கவும் பொலிஸார் அனுமதிக்கவில்லை.இதனால் சுமார் 07 மணி நேரத்தின் பின்னர் மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்டவர்களின் அழுத்தங்கள் காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலையே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.
நேற்றுக் காலை பாராடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் தடைகளை மீறி உள்ளே சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தது தமது ஆதரவை தெரிவித்தனர். நன்றி தினகரன்
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம்
- வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானம்
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் வரலாற்றை ஆராய்ந்து, அந்த ஆலயங்களை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
நகுலேஸ்வரம், திருகேதீச்சரம், திருகோணேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் (புராதன பெயர் சந்திரசேகரேஸ்வரம்), ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் உள்ளிட்ட சிவாலயங்கள் தொடர்பில் ஆராய எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்த சிவாலயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை தொல்பொருள் அடையாளங்களாக பாதுகாக்கத் தீர்மானித்துள்ளதுடன், இவை சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துகள் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், பொருளாதார ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளால், சிவாலயங்களை பாதுகாப்பது தொடர்பான திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச ரீதியில் செயற்படும் இந்து அமைப்புகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களை தம்முடன் கைகோர்க்குமாறும், அமைச்சர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். நன்றி தினகரன்
சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரிட்டன் பயணம்
- நிகழ்விற்கு 2,200 பேருக்கே அழைப்பு
மே 06ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரிட்டனின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரிட்டன் நோக்கி பயணமாகியுள்ளார்.
இன்று (04) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.
எதிர்வரும் மே 06 ஆம் திகதி சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் (UK) வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரச குடும்ப தேவாலயத்தில் நடைபெறும் குறித்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் மன்னர் சார்ள்ஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் மன்னர் சார்ள்ஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஓர் ஆடை 1821 ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ஆம் ஜோர்ஜுக்காகவும், மற்றொன்று 1911ஆம் ஆண்டு மன்னர் 5ஆம் ஜோர்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டவை. இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஆடைகள் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்த தயாராகி வருகின்றன.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சுமார் 8,200 பேரிலிருந்து, இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2,200 பேருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.
1926ஆம் ஆண்டில் பிறந்த எலிசபெத் மகாராணி அம்மையார், 1952 இல் மகாராணியின் தந்தை ஆறாம் ஜோர்ச் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, 1953ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி பிரித்தானிய மகாராணியாக அரியணை ஏறினார்.
கடந்த 2022 செப்டெம்பர் 08ஆம் திகதி தனது தாயாரான எலிசபெத் மகாராணி காலமானதைத் தொடர்ந்து, மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.
மகாராணியின் இறுதிக்கிரியைகள் கடந்த வருடம் செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெற்றதோடு, குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
- வருட இறுதிக்குள் உடன்படிக்கை கைச்சாத்து
நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்த வருடத்தில் உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்விற்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"2048 வெல்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதிக் கொண்டாட்டத்தில் 68 பல்வேறு தொழில்சார் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை கட்டியெழுப்பிய டீ.எஸ். சேனாநாயக்கவினதும் திறந்த பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவினதும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்படுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது, தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லையென்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முயற்சி அரசியல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுமே எனது முயற்சி.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.
2048 இல், நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.
குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்காது 2048 ஐ, பற்றி சிந்திக்க வேண்டும். மீண்டும் பாராளுமன்றத்துக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படுமாறு அழைப்பு விடுகின்றேன்.
“எனது உந்துதல் அரசியலில் வேரூன்றவில்லை, மாறாக நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகித்தல் மற்றும் குடிமக்கள் மீதான சுமைகளைக் குறைப்பதில் இருக்கிறது.
"இந்த காரணத்துக்காக, நான் ஜனாதிபதியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மற்றும் அதனை அடைய ஆதரவான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது திறனில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆகும் போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று, அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும்.
அத்துடன், 2048 இலங்கையின் அபிவிருத்திக்கான ஆண்டாகும். தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவுமே இந்நாட்டை கட்டியெழுப்புகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் போது, நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உத்தேசித்துள்ளோம்.
அனைத்து சமூகங்களின் உரிமைகளை மதித்து, பாதுகாத்து முன்னேறுவது முக்கியம். இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பர இணக்கமான தீர்வை எட்ட உத்தேசித்திருக்கிறோம். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகியிருப்பது வீணாகும். சகல சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய, போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment