திருமண வரவேற்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் விருந்துபசார மண்டபம் அரையிருட்டாகவிருந்தாலும் கூரையிலிருந்து வர்ண ஒளிக் கற்றைகள் சுற்றிச் சுழன்று விழுந்து கொண்டிருந்தன. சிவப்பு நிறத்தில் கார்பட் விரிக்கப்பட்டிருந்த தரையெங்கும் அவை சிதறிப் பரவி ஒளிந்து ஓடுவதும், பிறகு வருவதுமாக வர்ண வித்தை காட்டிக் கொண்டிருந்தன.
‘ஒரு கிழமைக்கு முன்பாகவே வந்து நின்றுவிடு’ என்று உத்தரவு
போட்ட சித்தியிடம் மறுப்புச் சொல்ல முடியாமல் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து நளினிச் சித்தியின் மகளின் திருமணத்துக்கு நான்கு
நாட்களுக்கு முன்னரே சிந்துஜா விமானத்தில் வந்திருந்தாள். சிந்துஜாவின் கணவன் திருமணத்துக்கு வர முடியவில்லை
பெற்றோர் நிச்சயம் பண்ணிப் பார்த்து வைக்கும் கலியாண வீடு என்றால் எல்லாம் தடல் புடலாகத்தான் நடக்க வேண்டும். அதுவும் சித்தியின்
மகள் வர்மிகா முப்பது வரும் வரை கலியாணத்தை தள்ளிப் போட்டு வந்து கடைசியில் சம்மதித்ததில் நளினிக்குப் பெரிய மனப் பாரம் குறைந்த மகிழ்ச்சி.
ரிஷப்சனுக்கு வந்ததிலிருந்து
நளினிச் சித்தி பம்பரமாக ஓடியோடி ஒவ்வொரு மேசையிலும் வந்த ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
சிந்துஜாவுடன் அவளுக்குப் பேசவே நேரமில்லை. மண்டபத்தில் லூசியாவைத்தவிர
அவளுக்கு எவரையும் தெரியவில்லை. நல்ல வேளையாக லூசியாவும் அவள் இருந்த அதே மேசையில்
இருந்ததால் சற்று சகஜமாக இருக்க முடிந்தது,
லூசியா குளிருக்கு மேலே ஒரு ஷோல் ஒன்றைக் கழுத்துவரை போர்த்தியிருந்ததால்
கழுத்தில் என்ன அணிந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. வயது அறுபத்தைந்துக்கு
மேலிருக்கும்.
லூசியாயாவின்
கணவனும் அந்த
விருந்தில் கலந்து கொள்ளாததால் சிந்துஜாவுக்கு தான் மட்டும் தனியாள் இல்லை என்ற
நினைப்பு ஆறுதலைத் தந்தது. மேசையிலிருந்த மற்றய மூன்று பெண்களுக்கும் கணவன்மார் பக்கத்தில்
அமர்ந்திருந்தனர்.
அந்தப் பெண்கள் மூவரும் மேசையிலிருந்த சிவப்பு வைனை கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டனர். ஆண்கள் சிலர் எழுந்து
பிரிஸ்டோ என்கிற சிறிய மதுக்கூடம் நோக்கி சென்றவர்கள் மேசைக்குத் திரும்பவில்லை. சிலர்
அப்படியே வெளியே சென்றனர். மேசைகளில் முதலில் இருந்த ஒழுங்கு கலைந்து அவரவர் தமக்கு
விருப்பமான மேசைகளில் சென்று அரட்டையடிக்கத் தொடங்கினர்.
லூசியா தனது வைன்
கிளாசில் அரைவாசிக்கு சிவப்பு வைனை ஊற்றினாள் சிந்துஜாவுக்கு தனக்கு வேண்டாமென்றாள்.
சிவப்பு வைன் நல்லதுதான் என்று சொல்லிக் கொண்டே சிந்துஜாவின் கிளாசில் அரைவாசி நிரப்பினாள்.
அதன் கசப்பை சிந்துஜா விரும்பியதில்லை. நல்லதாக
இருப்பதற்காக இப்படிக் கசப்பாக இருக்க வேண்டுமா?
மற்றைய பெண்கள் மூவரும் வைன் அருந்த ஆரம்பித்திருந்தனர்.
அதில் ஒருத்தி இவளை ஏளனமாகப் பார்த்தது சிந்துஜாவுக்கு புரிந்ததும் உடனே தனது வைன்
கிளாஸை கையில் எடுத்துக் கொண்டாள். கணவனுடன் வந்திருந்தால் சிந்துஜாவுக்கு சங்கடமாக
இருந்திராது. அதற்காக மற்றைய பெண்களுக்கு முன்னால் சிறுமைப்பட முடியுமா?
சிந்துஜாவின் கணவன்
அலுவலக வேலையாக தலைமையலுவலகம்
இருந்த நகரத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவன் பொறியியல் நிறுவனமொன்றில்
உயரதிகாரி. அந்த நிறுவனத்தின் செலவிலேயே ஏற்பாடு
செய்த ஹோட்டல். விமானப் போக்குவரத்து வசதிகள் எல்லாம்.
ராஜன் வெளியூர்ப் பயணம் போகும்போது சிந்துஜா வீட்டிலில்லாமல் போனது இதுதான் முதல் தடவை.
‘மறக்காமல் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு போயிருப்பாரா?’
இப்படி ஒவ்வொன்றுக்கும் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதுதான் சராசரித் தமிழ்ப்பெண்ணின் மனம். அவளும்
விதிவிலக்கில்லை.
ஆனால் மனதில் ஓடும்
ஒரு குறு குறுப்பொன்று அடிக்கடி அடிமனதிலிருந்து மேலெழுவதும் புதைந்து
போவதுமாகவேயிருக்கிறது. அப்படியிருக்குமோ
அல்லது இப்படியிருக்குமோ என்ற கேள்விகள். ஆனால்
அவள் பல்கலைக்கழகம் சென்று
படித்தவள். வங்கியொன்றில் வேலை செய்கிறாள். திருமணம்
நிகழ்ந்து மூன்று வருடங்கள்தான். அவள் திருமணமும் பெற்றோர்
பார்த்து செய்து வைத்ததுதான்.
மேசைக்கு அவ்வப்போது உணவுகள் வரத் தொடங்கின. மேசையிலிருந்த
முக்கோண வடிவில் மடித்திருந்த வெண்நிற துணியை
எடுத்து மடியில் போட்டுக் கொண்டனர்.
சாப்பாட்டை முடித்துக் கொண்ட மேசையிலிருந்த மற்றை பெண்கள் நடனத்துக்காக
எழுந்து சென்றனர்.
நடனத்தரையின் ஒரு
மூலையிலிருந்த புகையைக் கக்கும் மெஷினிலிருந்து
வந்து கொண்டிருந்த வெண் புகை கால்களுக்குக் கீழே
மிதந்து நடுவிலே நடனமாடிக் கொண்டிருந்த ஜோடிகளின் கால்களை மறைக்து விட்டிருந்தது. பளிச்சிடும் வெளிச்சங்களுக்கிடையே
வர்மிகாவின் முகம் புன்னகையுடன் மின்னல் கணங்களில் தோன்றி மறைய அவள் கணவனுடன் போல்
ரூம் நடனமாடிக் கொண்டிருந்தாள்.
சிந்துஜாவுக்குப் போரடித்தது.
"அன்ரி, வெளியே போய் ஏரியைப்
பார்ப்போமா“ என்று லூசியாவிடம் கேட்டாள்.
"குளிராகவிருக்கும். நீங்கள் போங்கோ" என்றாள்.
வயதில் மூத்தவளாகவிருந்தாலும் மரியாதை தருகிறாள்.
“போன்
பண்ண வேண்டும். இங்கே சத்தமாகவிருக்கிறது”.
“ஹஸ்பண்டுக்கா?”
சிந்துஜா
தலையசைத்தாள்.
அப்போது அங்கே வந்த
சித்தி நடனமாடுவதற்காக
சிந்துஜாவையும் லூசியாவையும் கையைப் பிடித்து
இழுக்க இருவரும் மறுத்துவிட்டனர். சித்தி லூசியாவுடன் பக்கத்தில் சில வினாடிகள் இருந்து
பேசினாள்.
அதே நேரம் சிந்துஜா யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திவிட்டு தனது கைப்பையை மேசைச் சேலைக்குள் கீழ் கவனமாக வைத்து விட்டு சிந்துஜா கூட்டத்திலிருந்து விடுபட்டு அந்த மண்டபத்தின் வாசலைக் கடந்து மண்டபச் சுவரோடு சமாந்திரமாகக் கட்டப்பட்டிருந்த வரவேற்பறைக்கு வந்தாள். அங்கிருந்து வெளியே தெரிந்த ஏரியை பார்க்க வசதியாக
அதன் ஒரு பக்க சுவர் முழுவதும் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
கண்ணாடிக் கதவைத் திறக்க ஏரிக்காற்று முகத்திலடித்தது. வெளியே இருந்த அந்தத் தளம் மரபலகைகளால் பொருத்தப்பட்டிருந்ததுடன்
உள்ளே இடமில்லாததால் வெளியேயும் வட்ட மேசைகள் போடப்பட்டிருந்தன.
கதிரைகளில் இருக்காது கண்ணாடிச் சுவரில் சாய்ந்தபடி மதுக் கிண்ணங்களுடன் நின்ற சில ஆண்கள் அவளைப் பார்த்து
மரியாதைக்குப் புன்னகைத்தனர். எவரும் தெரிந்தவரில்லை.
யூன் மாதக் குளிர் காற்றில் ஏறியிருந்தது.
வெளியே தெரிந்த ஏரியில் தூரத்தில் ஓரு படகு வெளிச்சம் அசைந்து
செல்வது தெரிந்தது. பகல் முழுவதும் அந்த ஏரி
நீர்ச் சறுக்கு விளையாட்டுப் படகுகளாலும், உல்லாசப் பயணிகளின் கப்பல்களாலும் நிறைந்திருந்தது.
இரவாக ஏரியில் படகுகள் இல்லாது ஓய்ந்திருந்த
தண்ணீரில் பாதி நிலா வெளிச்சம் தெறித்தது.
அவளது பிளவுசுக்குக் கீழே இறங்கி இடை வரை தொட்டு நின்ற கூந்தலைப்
பின்னி ரோஜாவொன்றை பின்னுச்சியில் வைத்திருந்தாள்.
ஒழுங்காக அடுக்கிவைத்தது போன்ற பல் வரிசை, புன்னகைக்கும்
போது அவை தரும் முகக் கவர்ச்சி பருவப்
பெண்ணா அல்லது பள்ளிப் பெண்ணா என்று வயதை
குறைத்து விடுகிறது. வெண்ணிறக் கழுத்தில் அணிந்திருந்த வெளீரென்ற
வைரக்கல் பதித்த அட்டியலை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். பழக்கமில்லாததால்தான் அது கழுத்தை இறுக்கிக் கொண்டிப்பதாக உணர்ந்தாள்.
இது எல்லாவற்றுக்குக் காரணம் எல்லாமே நளினிச் சித்தியின் ஆட்டம்தான். சிந்துஜாவுக்கு
கோபமாக வந்தது. தான் ஆசையாகக் கொண்டு வந்த சிவப்புக் கல் அட்டியலை அணியவிடாமல் சாறிக்கு மேட்ச் இல்லை என்று தடுத்து
தனது வெள்ளைக் கல் அட்டியலை அணிய வைத்தாள்.
நளினிச் சித்திக்கு உடுப்புகள், நகை தொடக்கம் செருப்பு, ஹாண்ட் பாக் என்று எல்லாமே
மச்சிங் ஆக இருக்க வேண்டும்.
சித்தியின் வயதைக்கூட இலகுவில் மதிப்பிட்டுவிடமுடியாது. உயரம்
சற்றுக் குறைவாகவிருந்தாலும் தலையில் குதிரைவால் கொண்டை, இமைகளை அகற்றி அந்த இடத்தில்
இழுத்துவிட்டிருக்கும் கரிய வளைவுகள், உதட்டுச் சாயம், அணிந்திருக்கும் குட்டைக்கை பிளவுஸ் எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு கவர்ச்சியைக்
கொடுக்க வைத்திருந்தாள்.
கோயிலில் நடந்த திருமணத்துக்கு அணிந்த கூறையை விட ரிசப்ஷனுக்கு
என்று தனியாக சிந்துஜா கொண்டு வந்த ஸ்டோன் வேர்க் ஜோர்ஜட் அது. சிவப்புக்கல் அட்டியல் மச் இல்லை என்று தீர்மானமாகச்
சொல்லிவிட அதை மறுக்க முடியாமல்தான் கழுத்தை இறுக்கும் இந்த அட்டியலை கட்டிக் கொண்டு
தனது சிவப்புக்கல் அட்டியலை கைப்பையிலேயே வைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
மாலை ஆறு மணிக்குத்தான் இங்கே ரிசப்ஷன்
என்றாலும் அன்று மதியம் கடந்து இரண்டு மணிக்கே சித்தியின் வீட்டில் புறப்படும் ஆரவாரங்கள்
தொடங்கியிருந்தன.
சித்தியின் மைத்துனிகள் இருவர் இருந்தனர் ஆனால் மணப்பெண் வீட்டு வேலைகளுக்கு என்று எவரும்
தலை காட்டவில்லை. அதை முன்பே அறிந்திருந்த நளினி புத்திசாலித்தனமாக சிந்துஜாவை வரச்
சொல்லியதில் வீட்டு வேலைகள் எல்லாம் கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன.
அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஆட்களுக்குகென்று பலகாரம் தயாரித்தது முதல், சமையறையிலேயே நின்று
கழுவுதல் துடைத்தல் என்று வீட்டு வேலைகள்
முழுவதும் சிந்துஜாவின் தலையிலேயே விழுந்தது. அப்போது உதவிக்கு வந்தவள் சித்தியின் பக்கத்துக்கு
வீட்டில் குடியிருந்த லூசியா மட்டும்தான்.
* * * *
வழமையாக வார நாட்களில் எனக்கு
ஹோட்டலின் பிரிஸ்ரோவில் வேலை. மதுவை எப்போதும் ஊற்றிப் பரிமாறுவதுதான் என்றில்லாமல்
எல்லாவித வேலைகளையும் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை என்றால்
எனக்கு
வெயிட்டர் வேலையுடன் கிச்சினிலும் வேலைகள் இருக்கும்.
இரவு என்றால் அதுவும் திருமண ரிசப்ஷன் என்றால் சுழன்று, சுழன்று வேலை செய்பவர்களைக் கிச்சனில் போட்டுப் பிழிந்தெடுப்பான் செஃப். ஒரு ஆறு மணி நேரம் போர்க்களம் போலத்தான் அது இருக்கும்.
இது இந்த நகரத்துக்கு வந்த பின் தேடி எடுத்த இரண்டாவது வேலை. சமையலறை எடுபிடியாக நான் இந்த ஹோட்டலின்
ரெஸ்டாரெண்டில்
சேர்ந்த போது செஃப் ஆகவிருந்த டங்கன் வைற்றின் மேற்பார்வையில் என்னோடு என்னோடு சேர்த்து எட்டுப்
பேர்
வேலை செய்தனர். ஹோட்டலின் மனேஜிங் டிரக்டர் பெயர் டிமிட்ரிஸ்.
பெரும்பாலும் எனது வேலை இரவுகளில் என்பதால் பகலில் மட்டுமே தனது அறைக்கு வந்து செல்லும்
அவரை நான் கண்டது ஓரிரு முறை மட்டுமே. ஹோட்டலின் ஏகபோக உரிமையாளன் இங்கிலாந்திலிருந்த ஒரு செல்வந்தன்.
இந்த ஹோட்டல் கட்டிடம் அதன் முக்காற் பகுதி நிலத்திலும், காற்பகுதி
தண்ணீருக்குள் மரக் கம்பங்களில் நிற்குமாறும்
கட்டப்பட்டிருக்கிறது. ஏரித் தண்ணீரின் அழகிய காட்சிக்காக ஏரியின் தெற்குப் புறமாக
இப்படி திட்டமிட்டுக் கட்டியதனால் இங்கே வரும் விருந்தினருக்கு கட்டணமும் அதிகம். தண்ணீருக்குள் பருத்த செடார் மரக் மரக் கால்களைப்
புதைத்தவாறு. தண்ணீருக்கு வெளியே தெரியும் உருளை மரக் கம்பங்களைச்சுற்றி சிப்பிகளும், ஊரிகளும்
ஒட்டிப் பிடித்திருந்தன. தண்ணீர் பச்சை
நிறத்திலிருந்தது. ஏரியின் ஆழம் குறைந்த
பகுதிதான் என்றாலும் இதுவே பத்து மீட்டர் ஆழத்துக்கு குறையாது.
ஹோட்டல்
சுற்றி நான்கு பக்கமும் ஓடும் மரப் பலகை பொருத்தப்பட்ட தளம் உணவுக்கு அங்கே வரும் விருந்தினர் கையில் மதுவுடன்
ஏரியைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது.
தலைக்கு போட்டிருக்கும் நீண்ட தொப்பியும் முகத்தில் வளர்ந்திருந்த
தாடியும் வழித்த மீசையும், கறுப்புடைக்கு
மேல் வெண்ணிற ஏப்பிரனையும் அணிந்து நான் ஒரு தேர்ந்த சமையற்காரனைப்போல என்னைக் காட்டிக் கொண்டு
நடந்து திரிந்தேன். நான் முதலில் இந்த நாட்டுக்கு வந்த போது இந்த நகரம் எனக்கு காண்பித்த உலகமும் அதில் எனக்கு
கிடைக்குமென்று நம்பியிருந்த கனவுத்
தொழிலும் மாயமென்றாகிப் போக கிடைத்ததைப் பிடித்தது போல இந்த வேஷம் எனக்கு
வாய்த்தது.
எதிர் பார்த்தது நடவாததும் மற்றதெல்லாம் நடப்பதும் எனக்கு
மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருப்பது முட்டாள்தனமல்லவா?
பாரத் தட்டுகளைத்தூக்கி இடக்கை வலித்துக் கொண்டிருந்தது.
முன்னாள் ஒரு குவியல் வெள்ளைப் பீங்கான் தட்டுகள் தகர மேசையில் கிடக்கின்றன. ஏற்கனவே
முள்ளுக் கரண்டிகளையும் கத்திகளையும் வேறாக்கி வைத்திருந்ததால் தட்டுகளில் மிச்சம்
விட்டிருந்த உணவுத் துணிக்கைகளை மளமளவென்று
தட்டிக் குப்பை வாளிக்குள் போட்டு விட்டு, ஆளுயரத்துக்கு இருந்த பாத்திரம்
கழுவியிலில் பச்சை
வெளிச்சம் வருகிறதா என்று பார்த்து விட்டு அதை திறந்து பிளேட்டுகளை அடுக்கி
மேலிருந்த கைபிடியை இழுத்து மூடினேன். கிச்சினின்
நடுவே இருந்த நீண்ட தகர மேசைக்கு இரு புறமும்
நான்கு பேர் நின்று பிளேட்டுகளில் உணவுகளை அழகாக அடுக்கிக் கொண்டிருந்தனர்.
இனி கையில்
தட்டுகளைப் பிடித்தபடி
உள்ளே மேசைகளுக்கிடையே ஒரு சேர்க்கஸ்காரனைப்போல நெளிந்து செல்வேன். ஆங்காங்கே ‘பியர்
முடிந்தது’, ‘வைன் எங்கே’ என்று முறுமுறுப்பவர்களுக்கு முகங் சுழிக்காது ‘இதோ வருகிறேன்’
அல்லது 'பின்னால் வருகிறது' என்று சொல்லிவிட்டு அவர்கள் மிச்சம் விட்ட குறைந்தது பதினைந்து
பிளேட்டுகளை கையில் அடுக்கிக் கொண்டு கிச்சனுக்கு
கொண்டு போய் விடுவேன்.
மெயின் டிஷ் என்ற இரண்டாவது ரவுண்டில்தான் பெரிய பிளேட்டுக்கள்
வரும். மூன்றாவது டெசர்ட் ரவுண்டுக்குப் பிறகு
எதுவும் பரிமாறுவதற்கு இல்லை. ஆனால் எல்லாவற்றையும் கழுவி, மேசைகளையும், தரையையும்
துப்பரவாக்கி, கிச்சினையும் மொப்
பண்ணி முடிக்க விடிந்து இரண்டு மணியாகி விடும்.
கீழ்த்தளம் முழுவதையும் மேசைகளும், நடனத் தரையும், பிரிஸ்டோ
என்கிற சிறிய மதுக்கூடமும் நிறைத்திருந்தபடியால் டொய்லட்டுகளை மேல்தளத்தில் வைத்திருந்தது
வயதானவர்களுக்கு சிரமம்தான். ஆனால் இந்த வகையான இரவு ஹோட்டல்களுக்கு வயதானவர் யார் வருவர்? உண்மையில் இது இளசுகளுக்குரிய பார்ட்டிதான், ஆனாலும்
சிந்துஜா போன்ற நெருங்கிய உறவினர்களும், லூசியா போன்ற நெருங்கிய நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்
பிறகு கீழ்த்தளத்திலிருந்து கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறும் படிகளில் சுவரிலுள்ள
இரும்புக் குழாயைப் பிடித்தபடி படிகளில் மேலே ஏறத் தொடங்கினாள் லூசியா.
சற்றுப் பருமனான உடலாதலால் அந்தப் படிகளில் ஏறுவதற்கு கஷ்டப்பட்டாள். ஒருவருக்கும் லிப்ட் எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை.
ஆனால் மேலேதான் டொய்லட் இருந்தது.
கீழிருந்து யாரோ
" உதவிக்கு வரவா அன்டி?" என்று கத்தினார்கள்.
"இல்லை,
வேண்டாம் வேண்டாம்" என்று கூறியபடி மேலேறினாள் லூசியா.
லூசியா டொய்லெட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு கதவின்
ஓரத்திலிருந்த இடைவழியூடாக எவரும் பார்க்க
முடியுமா என்று சோதித்துப் பார்த்தபின் தன் முந்தானை விலக்கி விட்டு, இடுப்பில் கைக்குட்டைக்குள்
தற்காலிகமாக சொருகி வைத்திருந்ததை சிந்துஜாவின் அட்டியலை வெளியே எடுத்தாள். இரத்தச் சிவப்பு நிறத்திலும் கற்கள் பதித்த அட்டியல் அது.
இடுப்பிலிருந்து அதை எடுத்து வலப்பக்க ரவிக்கைக்குள் கையை
விட்டு மார்பகத்துக்கு கீழே பிராவுக்கு அடியில் திணித்தாள். முந்தானையை சரி செய்தபின் முகத்தில் எந்த தடயமும்
தெரியாதபடி இயல்பாக வைத்துக்கொண்டு டொய்லட்டை வேண்டுமென்றே அழுத்தி தண்ணீரை பிளாஷ்
செய்து விட்டு கதவைத் திறந்து மெல்லப் படிகளால்
இறங்கத் தொடங்கினாள் லூசியா.
லுஸியா படிகளால் இறங்கித் தரைக்கு வரவும் சிந்துஜா வெளியிலிருந்து
வரவும் சரியாகவிருந்தது.
சற்றுத் திடுக்கிட்ட
லூசியா
" அதற்குள் போன் பேசி முடித்து விட்டீர்களா?"
" இல்லை அவர் எடுக்கவில்லை. அதை விட உள்ளேயும் வெளியேயும்
சத்தமாகவிருக்கிறது. இன்னொருமுறை வெளியே கொஞ்சதூரம் போய் பேசிப் பார்க்கிறேன்"
" நானும் வருகிறேனே"
" இல்லை ஆன்டி. வெளியே குளிராகவிருக்கிறது. நீங்கள்
போய் இருங்கள். நான் உடனே வந்து விடுவேன்"
"வெளியே தனியே நிற்க கூடாது" அவள் குரலில் அதீதமான
பரிவைக் காட்டினாள்.
'பரவாயில்லை அன்ரி' என்றவாறே வாசலை நோக்கி நடந்தாள் சிந்துஜா.
லூசியா சிந்துஜாவை வாசல் வரை பின் தொடர்ந்தாள்
உள்ளே ரொக் ம்யூசிக்கின் உரத்த சத்தம் காதை அடைத்தது. பேசும்
எல்லாரும் சும்மா வாயசைத்துக் கொண்டிருப்பது போல அந்த சத்தம் ஆக்கிரமித்திருந்தது.
ரிசப்ஷன் மண்டபத்துக்குள் நோக்கிப் போகும் வழியில் சிந்துஜாவின் கற்கள் பதித்த மென்னீல
நிறச் சேலையிலும் வர்ண ஒளிப்பொட்டுகள் பட்டுத் தெறித்துச் சென்றன.
சிந்துஜா கைத்தொலைபேசி அழைப்பை எடுப்பதற்காக மீண்டும் வெளியே
ஏரிக்கரையின் மரத்தளத்துக்கு வந்தாள்.
இப்போது குளிர்க்காற்று அதிகமாகியிருந்ததால் வெளியே மேசைகளில் எவருமில்லை.
ராஜனுடைய நம்பருக்கு மீண்டும் போன் பண்ணிய போது அவன் எடுக்கவில்லை.
இந்த முறை நீண்ட நேரம் ரிங் டோன் போய்க்
கொண்டிருந்தது . இரைச்சல் வேறு. உள்ளிருந்து
வந்த இரைச்சலைத் தவிர்க்க தடுப்புக் கம்பியின் ஒரு இடை வெளியினூடாக மரத் தளத்தின் விளிம்பு வரை போக வேண்டியிருந்தது.
ராஜன் போன் எடுக்கும் அறிகுறி தெரிந்தது. பிறகு தண்ணீருக்குள் கல்லொன்று விழுந்ததைப் போல 'க்ளுக்' என்ற சத்தம். அது கீழே
ஏரித் தண்ணீருக்குள்ளிருந்தா வந்தது.?
பன்னிரண்டு வருடங்கள்
கடந்து விட்டிருக்கின்றன.
இப்போது இந்த ஹோட்டலின் மனேஜிங் டிரக்ட்டர் நான். எனக்கு
கீழே பன்னிரண்டு பேர் வேலை செய்கிறார்கள்.
காலையில் எனது அறையை விட்டு வெளியே வந்து இந்த ஏரியைப் பார்த்தவாறு
நிற்பது எனது வழக்கம். அதிகாலையின் மூடுபனிப்புகை
ஏரித் தண்ணீரின் மேல் பட்டும் படாமலும் மிதந்து அசைந்து கொண்டிருப்பதை உறுதியான
கம்பி வலை போட்ட அரைச் சுவரில் சாய்ந்தபடி
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பன்னிரண்டு
வருடங்களின் முன்பு இடுப்பளவு
உயரத்தில் ஒரு உலோகக் கம்பிக் குழாயைத்தான் தடுப்புக்காக வைத்திருந்தார்கள். மரத்தளத்தின்
விளிம்பு வரை சென்று கீழே தண்ணீரைக் குனிந்து பார்ப்பதற்காக இடையிடையே வழி வைத்திருந்தார்கள்.
பனிப்புகை தொட்டும் தொடாமலும் அசைந்து கொண்டேயிருந்தது. தண்ணீர்
கண்ணாடித் தகடு போல அசைவற்றுக் கிடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சூரியக் கதிர்கள் வந்து விழத் தொடங்கி குளிர்த் தண்ணீரைத் சூடாக்கினால் பனிப்புகை மறைந்து விடும்.
பன்னிரண்டு
வருடங்களுக்கு முந்தைய அந்த இரவின் நினைவுகள் மன ஆழத்திலிருந்து மீண்டும் மேலெழுந்து வருகின்றன.
நினைவுகளை
தூசி தட்டி மீட்டெடுக்கிறேன்.
அன்று நான் டெசர்ட் ரவுண்டுக்குப் பிறகு பிளேட்டுகளை எடுப்பதற்காக
வெளியே மரத்தளத்தில் நடந்து ஒரு சுற்று சுற்றி வர வேண்டியிருந்தது.
போகும்போது ஒரு சில்லுப்பூட்டிய ட்ரொலியையும் கொண்டு சென்று
ஒவ்வொரு மேசையாக துப்புரவு செய்து வர பத்து நிமிடத்துக்குள் ஆகிவிடும். ட்ரொலியை உள்ளுக்குள் கொண்டு போக முடியாது அவ்வளவுக்கு நெருக்கமாக மேசைகளை அடுக்கி வைப்போம்,
அதுவும் அன்றைக்கு உள்ளே இருபத்தெட்டு மேசை
போட்ட விருந்து. அவ்வளவுதான் உள்ளே போடமுடியும். அதை விட வெளியே மரத் தளத்தில் குளிருக்கு
உயரத்தில் காஸ்மேட் கணப்பு சூடாக்கிகளுடன் பதினெட்டு மேசைகளையும் போட்டிருந்தோம்.
ஹோட்டலுக்கு இரண்டு வாசல்கள்தான். பிரதான விருந்தினர் வாசல் ஏரிக்கு மேலாகச் செல்லும்
பாலத்தைப் பார்த்தபடியிருந்தது. இரண்டாவது
வடக்குப் புறமாக கார் பார்க்கிங் இற்கு செல்வதற்கென்று வசதியாக ஏரியின் கிழக்குப் புறமாகவிருந்தது.
அன்று நான் பிரதான வாசலைக் கடந்து வெளி மேசைகளைத் துப்புரவாக்கச்
சென்றபோது மரத்தளத்தில் ஏரியின் விளிம்பில் நீண்ட கூந்தலுடன் ஒரு பெண் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு சென்றேன். அப்படியே கிழக்கு வாசல் வரை ட்ரொலியைக் கொண்டுபோய் பிளேட்டுகளை சேகரித்துக்
கொண்டு திரும்புகையில் அந்தப் பெண் அங்கே இல்லை.
ஏதோ பொறி தட்டியது போல
கீழே தண்ணீரைப் பார்த்தேன். வழமைக்கு
மாறாக அலை ததும்பிக் கொண்டிருந்தது. அரையிருட்டில் கூர்ந்து பார்க்க தண்ணீரில் நீர்குமிழிகள் மேல் வந்த வண்ணமிருந்தன.
ஒரு வேளைஉள்ளேயிருந்து வந்த இசையின் இரைச்சலில் அவள் விழுந்த சத்தம் எவருக்கும் கேட்டிராது. மனது உந்திய ஊகிப்பைக் கொண்டு உள்ளே
குதித்தேன்.
வெயில் எறிக்கும் பகலில் கூட எரித் தண்ணீரில் மூன்று மீட்டர் ஆழத்தில் மங்கல் வெளிச்சமேயிருக்கும். அந்த இரவில் உள்ளே கும்மிருட்டாகவிருந்தது. ஒரு
வேளை உண்மையில் அவள் விழுத்திருக்கிறாளா அல்லது
எனது பிரமையில் நான் எடுத்த முட்டாள்தன முடிவா? எந்த திசையில் தேடுவதென்று திகைத்த ஒரு கணத்தில் ஒரு
வெளீரென்ற சிறு வெளிச்சத்தின் திசையை நோக்கி நீந்திப் போனேன்.
ஒரு கரிய நிழலொன்று கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கிட்டப்
போய் அதன் தலையைப் பிடிக்கப் போனேன். அதன்
கழுத்திலிருந்துதான் அந்த வெள்ளொளி வந்து கொண்டிருந்தது. பாம்பு போல நீரில் அலைந்து கொண்டிருந்தது அதன் தலை
முடி. இது பிரமையல்ல. என் மூச்சுத் திணறத் தொடங்குமுன் அவள் கூந்தலை ஒரு கையால் பற்றியிழுத்தேன். மூச்சைப் பிடித்துக் கொண்டு மறு கையாலும் , இரு கால்களாலும் தண்ணீரை உந்தித் தள்ளி
செடார் மரக் கப்புகளை நோக்கி மேலே வரத் தொடங்கினேன்.
நான் மேலே அவளைக் கொண்டு வந்த போது மயக்கமடைந்திருந்தாள். இதற்கிடையில் உள்ளே, போதையிலும்
நடனத்திலும் எஞ்சி நின்ற கூட்டம் வெளியே அரையிருட்டில் குழுமி நின்றது. டங்கன் எல்லாரையும்
தூர போகுமாறு கலைத்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ் வந்து அவளை
ஏற்றிக் கொண்டு போய் விட்டது.
டெசர்ட் ரவுண்ட்
முன்னரே முடிந்திருந்ததால் பெரும் பகுதி
சனக்கூட்டம் ஏற்கனவே வீட்டுக்குப் போய் விட்டதால் ரொக் இசைக்கு கூச்சலிட்டபடி நடனமாடிக்
கொண்டிருந்த இளசுகளின் கூட்டமும் மணமக்களின் சில நெருங்கிய உறவுகளுமே எஞ்சியிருந்தனர்
.
அன்று அந்தப் பெண் அன்று நீரில் மூழ்கி இறந்திருந்தால் ஹோட்டலைச் சுற்றி
பாதுகாப்பு வேலி போடாததற்காக ஹோட்டல் நிர்வாகம் பெரிய
நட்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்திருக்கும். மேலும் பத்திரிகைகளில் முன் பக்கச் செய்தியாக வந்து
ஹோட்டல் பிஸினஸும் சரிந்திருக்கும்.
அடுத்த நாள் எனக்கு பின்னேர வேலை. வார நாட்களில் டங்கன் மதியத்துடன்
வீட்டுக்கு சென்று விடுபவன் அன்று எனக்காக காத்திருந்தான். டிமிட்ரிஸ் வரச் சொன்னதாக அவரது அறைக்கு என்னைக் அழைத்துச் சென்றான். எனக்காக
காத்திருந்த டிமிட்ரிஸ் எழுந்து நின்று எனக்கு கைகுலுக்கினார். என்னை கிச்சினிலிருந்து
விடுவித்து ஹோட்டலுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்த்தப் போவதாக.
அன்று எல்லா வேலையாட்களையும் கூப்பிட்டு அறிவித்தார்.
பிறகு மெல்ல மெல்ல நான் அவர் உட்கார்ந்திருந்த கதிரையில் உட்காரும்
வரை கடுமையாக உழைத்தேன்.
டங்கன் வைற் இரண்டாம்
திருமணம் செய்து கொண்டு வேலை விட்டு விட்டு சிங்கப்பூரில் குடியேறி விட்டான். டிமிட்ரிசுக்கு பக்கவாத நோய் வைத்து
அவர் முடங்கிப் போய்விட ஹோட்டலின் சொந்தக்காரன் என்னை மேனேஜிங்
டிரக்ட்டராக நியமித்தான்.
நீண்ட நேரம் நிகழ்ந்ததையும், அறியாததையும் சேர்த்து நானே
முடிச்சுக்களைப் போட்டுப் பார்த்தேன்.
ஒருவேளை அவள் தண்ணீருக்குள் குதித்திருப்பாளா? ஆனால் அவள்
மயக்கத்திலிருந்து நினைவுக்கு வந்ததும் தவறி வீழ்ந்ததாகவே அம்புலன்ஸ் வைத்தியர்களிடம்
அவளது உறவினர்கள் சொல்லிருந்ததாக அறிந்திருந்தேன். வைன் அருந்தியிருந்ததை வைத்தியர்களும் உறுதி
செய்திருந்தனர். அப்போது
சிசிடிவி கமரா பாவனையில் இருந்திருந்தால் ஒருவேளை தெரிய வந்திருக்கும்.
எது எப்படியிருந்தாலும் எனது பதவி உயர்வு அவளால் நிகழ்ந்திருக்கிறது.
ஹோட்டலுக்கு எதிரே ஓடும் வீதியில் வீதியில் போக்குவரத்து அதிகமாகி நீண்ட கார் வரிசையொன்று நிற்கிறது.
இராட்சதத் தொழிற்சாலையொன்றைப் போல நகரம் இனிப்
பரபரப்பாகிவிடும்.
பனிப்புகாரின்
போர்வைக்குள்ளிருந்து சூரியன் வெளித்தெரியாமலே காலை விடிகிறது. ஏரித்
தண்ணீரின் மேல் பனிப்புகை தொட்டும் தொடாமலும் இன்னும் அசைந்து கொண்டேயிருந்தது.
No comments:
Post a Comment