புட்டினை கொல்ல உக்ரைன் முயன்றதாகக் குற்றச்சாட்டு
உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் அஜய் பங்கா
சூடானில் இருந்து 800,000 பேர் வெளியேறும் அச்சம்
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல்
சூடானில் மோதலுடன் போர் நிறுத்தம் நீடிப்பு
அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது தாய்வான்
புட்டினை கொல்ல உக்ரைன் முயன்றதாகக் குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை படுகொலை செய்யும் நோக்குடன், கிரம்லின் மாளிகை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய அரசினால் கடந்த புதன்கிழமை (03) இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதோடு இது பற்றி அந்நாட்டின் பல அரச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் இடம்பெறும்போது புட்டின் கட்டடத்தில் இருக்கவில்லை என்றும் கிரம்ளினுக்கு பொருட்சேதம் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கிரம்லின் மாளிகைக்கு மேலே பறந்துசென்ற பொருள் வெடித்துச் சிதறும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பார்க்கமுடிகிறது.அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. மின்னியல் ரேடார் கருவிகள் மூலம் இரண்டு ஆளில்லா விமானங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ரஷ்யா கூறியது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யா கடந்த ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்தது. அதன் பின் ஆக்கிரமிக்கப்பட்ட தனது சொந்த வட்டாரங்களை விடுவிப்பதில் உக்ரைன் கவனம் செலுத்திவருவதாக உக்ரைனிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறினார். நன்றி தினகரன்
உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் அஜய் பங்கா
- ஜூன் மாதம் முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு செயற்படுவார்
- இந்தியாவில் பிறந்த முதல் உலக வங்கி தலைவர்
இந்திய வம்சாவளி அமெரிக்கரான அஜய் பங்கா, 2023 ஜூன் 02, முதல் 5 வருட காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, உலக வங்கி அறிவித்துள்ளது.
நேற்றையதினம் (03) கூடடிய அதன் நிர்வாக பணிப்பாளர்களால் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, உலக வங்கியின் 14ஆவது தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் பிறந்த முதலாவது உலக வங்கி தலைவராகவும் அவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
மாஸ்டர் கார்ட் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான, 63 வயதான அஜய் பங்கா இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், Kraft Foods மற்றும் Dow Inc. ஆகியவற்றின் உயர் பதவிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.
உலக வங்கி வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் மால்பாஸின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதற்கு முன்னர் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். அதனால் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் அவரது பதவிக்காலம் நிறைவு செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பதவிக்கு யாரை நியமனம் செய்வது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடத்திய ஆலோசனையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்காவை, ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
குறித்த பதவிக்காக அஜய் பங்கா குறித்த பதவிக்காக மனு தாக்கல் செய்த வேளையில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு நிதியுதவியை சமாளிக்க அதிக தனியார்துறை நிதியைத் திரட்ட வேண்டும். தனியார் துறை பங்கேற்பு இல்லாமல் போதுமான நிதி திரட்ட இயலாது. உலக வங்கியின் இலக்குகளை அடைய ஆபத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய தனியார் நிதிகளைத் திரட்டும் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 29ஆம் திகதியுடன் உலக வங்கி தலைவர் பதவிக்கான மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், அஜய் பங்கா மட்டுமே அதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதோடு, அவருக்கு எதிராக எவரும் அப்பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் பதவியேற்கும் அஜய் பங்கா 5 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
ஜூன் 02, 2023 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு, உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள், உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை தெரிவு செய்துள்ளனர்.
அஜய் பங்கா சமீபத்தில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தில் பிரதித் தலைவராக பணியாற்றினார். முன்னதாக, அவர் சுமார் 24,000 ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பான Mastercard நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் இருந்தார்.
அவரது தலைமையின் கீழ், மாஸ்டர்கார்டு உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மையத்தைத் தொடங்கியது, இது உலகெங்கிலும் சமமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. அவர் சர்வதேச வர்த்தக சபையின் தலைவராக இருந்தார், 2020-2022 வரை தலைவராக பணியாற்றினார். அவர் 2021 இல் ஜெனரல் அட்லாண்டிக்கின் காலநிலை-மையப்படுத்தப்பட்ட நிதியான BeyondNetZero க்கு ஆலோசகராக ஆனார்.
எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸில் உள்ள பின்தங்கிய மக்களிடையே பொருளாதார வாய்ப்பை மேம்படுத்துவதற்காக செயல்படும் தனியார் நிறுவனங்களின் கூட்டணியான மத்திய அமெரிக்காவின் கூட்டாண்மையின் இணைத் தலைவராக பங்கா பணியாற்றினார். அவர் முன்னதாக அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ், டவ் இன்க் சபைகளில் இருந்தார்.
அஜய் பங்கா தி சைபர் ரெடினெஸ் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனராகவும் நியூயோர்க்கின் பொருளாதார கிளப்பின் துணைத் தலைவராக இருந்துள்ளார். அவருக்கு 2012 இல் வெளியுறவுக் கொள்கை சங்கப் பதக்கம், 2016 இல் இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ரீ விருது, எல்லிஸ் ஐலண்ட் மெடல் ஆஃப் ஹானர் மற்றும் 2019 இல் சர்வதேச புரிந்துணர்வுக்கான வணிகக் கவுன்சிலின் உலகளாவிய தலைமைத்துவ விருது மற்றும் 2021 இல் சிங்கப்பூர் புகழ்பெற்ற நண்பர்கள் பொதுச் சேவை ஸ்டார் எனும் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
2011 இல் பங்குதாரர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தெரிவு செயல்முறையை நிர்வாக பணிப்பாளர்கள் பின்பற்றினர். இந்த செயல்முறையானது திறந்த, தகுதி அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான நியமனத்தை உள்ளடக்கியது, இதில் வங்கியின் உறுப்பினர்களில் எந்தவொரு நாட்டினரையும் எந்தவொரு நிர்வாக பணிப்பாளரும் அல்லது ஆளுநரும் ஒரு நிர்வாக பணிப்பாளர் மூலம் முன்மொழியலாம். இதைத் தொடர்ந்து முழுமையான கவனத்துடன் மற்றும் நிர்வாக பணிப்பாளர்களால் பங்கா பற்றிய விரிவான நேர்காணல் நடைபெற்றது.
ஏப்ரல் 2023 வசந்தகால கூட்டத்ததில் கலந்துரையாடப்பட்ட, உலக வங்கி குழு பரிணாம செயல்முறை மற்றும் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடினமான வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தில் உலக வங்கி குழுவின் அனைத்து இலட்சியங்கள் மற்றும் முயற்சிகள் குறித்தும் பங்காவுடன் இணைந்து பணியாற்ற சபை எதிர்பார்க்கிறது .
புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் (IBRD) நிர்வாக பணிப்பாளர்கள் குழுவின் தலைவராகவும், உலக வங்கி குழுமத்தின் தலைவர் உள்ளார். சர்வதேச அபிவிருத்திச் சங்கம் (IDA), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), முதலீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தின் நிர்வாக சபை (ICSID) ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளின் உத்தியோபூர்வ தலைவராக உலக வங்கி தலைவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சூடானில் இருந்து 800,000 பேர் வெளியேறும் அச்சம்
சூடானில் உக்கிர மோதல் தொடரும் நிலையில் 800,000 பேர் வரை அங்கிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி தலைநகர் கார்டூமில் மீண்டும் குண்டுச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. சூடானில் மூன்றாவது வாரமாக வன்முறை தொடர்கிறது.
அருகிலுள்ள எகிப்து, சாட், மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு 10,000 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றுவிட்டனர்.
சூடானில் இராணுவத்துக்கும், அதன் துணை இராணுவ ஆதரவுப் படைக்கும் இடையிலேயே மோதல் நீடிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் துறை அதிகாரி மார்ட்டின் கிரிபித்ஸ் நேற்று (2) பின்னேரம் சூடானை சென்றடைந்தார்.
சூடானில் வசிக்கும் மில்லியன் கணக்கானோருக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான வழிகளை அவர் ஆராய்வார். சூடானில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து பேரழிவை எட்டுவதாக கிரிபித்ஸ் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல்
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக சூரியோதயத்திற்கு முன்னர் நேற்று (01) ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைனின் பதில் தாக்குதல் நடவடிக்கை ஒன்று எதிர்பார்க்கப்படும் வேளையில் ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
டினிப்ரு நகர மையத்திற்கு அருலுள்ள பவ்லோஹார்டில் இருக்கும் ஏற்பாட்டியல் மையம் ஒன்றின் மீது சரமாரி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பல டஜன் வீடுகள் சேதமடைந்திருப்பதோடு 34 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் கீவ் உட்பட நாடெங்கும் வான் தாக்குதல் எச்சரிக்கை சமிக்ஞைகள் வெளியிடப்பட்டுள்ளன. 15 தொடக்கம் 18 வரையான க்ரூஸ் ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதில் முன்னரங்குப் பகுதியில் இருந்து சுமார் 70 மைல் தொலைவில் இருக்கும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பல்லோஹார்ட் நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ரஷ்யா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய இது போன்ற சரிமாரி வான் தாக்குதல்களில் உக்ரைனில் 23 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சூடானில் மோதலுடன் போர் நிறுத்தம் நீடிப்பு
சூடானில் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கும் வகையிலான போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியிலும் தலைநகர் கார்டூமில் கடுமையான வான் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. எதிராளியான துணை இராணுவப் படையை தலைநகரில் இருந்து வெளியேற்றுவதற்காக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டதாக போர் தரப்புகள் கூறியபோதும் தொடர்ந்து உக்கிர மோதல் நீடித்து வருகின்றன.
இந்த மோதல்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டபோதும் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் மிக அதிகமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கார்டூமில் தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும் துணை இராணுவப் படையான விரைவு உதவிப் படை தலைவர் முஹமது ஹம்தான் டகாலோ இடையிலான அதிகாரப் போட்டியே இந்த மோதலுக்குக் காரணமாகும். குறிப்பாக துணை இராணுவப் படையை இராணுவத்துடன் இணைப்பது தொடர்பில் முரண்பாடு வெடித்துள்ளது.
அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐ.நாவின் தீவிர இராஜதந்திர முயற்சியை அடுத்தே இரு ஜெனரல்களும் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கினர். அந்தப் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டபோதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபிய மத்தியஸ்தர்கள் அங்கு சென்றிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு பற்றி தெளிவின்றி உள்ளது.
கடந்த ஞாயிறன்று (30) போர் நிறுத்தத்தை நீடிக்கும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், நகர மையத்தின் வடக்கில் உள்ள துணைப் படை துருப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் துணைப் படைக்கு எதிராக இராணுவம் ஆளில்லா விமானம் மற்றும் போர் விமானங்கள் மூலம் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் அங்கு விநியோகங்கள் ஸ்தம்பித்து, மருத்துவ சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. நன்றி தினகரன்
அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது தாய்வான்
சீனாவின் வான் ஆற்றலுக்கு தாய்வான் ஈடாகாது என்றும் தெரிவிப்பு
தாய்வானின் விமானப்படைக்கான உதிரிப்பாகங்களையும் சேவைகளையும் பெற்றுக்ெகாள்ளும் வகையிலான இரண்டு இராணுவ ஒப்பந்தங்களை அந்நாடு அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ளது. 323 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலாவது ஒப்பந்தம் விமான உதிரிப்பாக விநியோகத்துக்காகவும் இரண்டாவது, விமான பராமரிப்பு தொடர்பானதாகவும் அமைந்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ள வொய்ஸ் ஒப் அமெரிக்கா, ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி 420 மில்லியன் டொலர்கள் என்றும் 2028 வரை இவை செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.தாய்வான் மாகாணம் சீனப் பெரு நிலத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்று சீனா கூறிவரும் நிலையில் தாய்வான் விமானப்படையை மேம்படுத்தும் இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ளன.
இதேசமயம் பென்டகனில் இருந்து கசிந்த சில இரகசிய தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, ஒரு சீன விமான தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் தாய்வான் இல்லை என்றும் தாய்வானின் விமான தளங்கள் மற்றும் ராடார் நிலையங்கள் அனைத்துமே சீன ஏவுகணை பாய்ச்சலுக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளவை உண்மை நிலைக்கு மாறானவை எனவும் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment