உலகச் செய்திகள்

 இந்தியா – ரஷ்யா உறுதி

கைது செய்தமை சட்டவிரோதம்; இம்ரான் கானை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 இஸ்ரேல் தாக்குதல்கள் நீடிப்பு: காசாவில் பலி 30 ஆக உயர்வு

அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு

பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த இராணுவம் விரைவு


இந்தியா – ரஷ்யா உறுதி

ரஷ்யாவும் இந்தியாவும் தங்களுக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவை பல தளங்களிலும் ஒத்துழைப்புடன் வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்றுள்ள உயர் மட்டக் கூட்டமொன்றில் இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய மற்றும் இந்திய பிரதிநிதிகள் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கூட்டு செயற்குழுக் கூட்டம் மொஸ்கோவில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு ரஷ்ய தரப்பில் வெளிவிவகாரப் பிரதியமைச்சர் ஒலெக் சிரோமோலோடோவ்வும் இந்தியத் தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் (மேற்கு) சஞ்ஜை வெர்மாவும் தலைமை தாங்கியுள்ளதோடு சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.   நன்றி தினகரன் 




கைது செய்தமை சட்டவிரோதம்; இம்ரான் கானை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 08 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைதுசெய்யப்பட்மை சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இம்ரான் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது, அவரைச் சுற்றி வளைத்து துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்து சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதனால் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள வீதிகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன .   நன்றி தினகரன் 





இஸ்ரேல் தாக்குதல்கள் நீடிப்பு: காசாவில் பலி 30 ஆக உயர்வு

காசா மீது இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை (09) தொடக்கம் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30ஆக அதிகரித்திருப்பதோடு 90க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்களுடன் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ரொக்கெட் படை தளபதி மற்றும் பிரதித் தலைவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

மறுபுறம் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன தரப்புகள் தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்தத் தாக்குதலில் கடந்த வியாழனன்று (11) இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எகிப்தின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மோதல் தீவிரம் அடைந்திருப்பதோடு அந்த மோதல் நேற்று நான்காவது நாளை எட்டியது.

“தற்காப்பு மற்றும் தாக்குதல் என்ற இரண்டிலும் நாம் உச்ச நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வீடியோ பதிவு மூலம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். “யார் எமக்கு தீங்கு செய்ய வந்தாலும் அவரது இரத்தம் பறிக்கப்படும்” என்றும் நெதன்யாகு எச்சரித்தார்.

பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ரொக்கெட் படை தலைவர் அலி காலி மற்றும் பிரதித் தலைவர் அஹமது அபூ டக்கா உடன் அந்த அமைப்பின் ஐந்து முக்கிய புள்ளிக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கும் எகிப்து, இதுவரை அந்த முயற்சி பயனற்றது என்றே நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்த நிபந்தனையில் தமது தளபதிகள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் ரொக்கெட்டுகள் மற்றும் தளபதிகள் இன்றி அந்தப் போராட்ட அமைப்பு தானாக தாக்குதல்களை நிறுத்தும் என்று இஸ்ரேல் நம்புகிறது.

இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் ஐந்து கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாகவும் 300க்கும் அதிகமான தொடர்மாடி கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஊடக அலுவலகத் தலைவர் சலாமா மாரூப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தொடக்கம் எல்லையைத் தாண்டி செல்லும் பொருட்கள் மற்றும் மக்கள் நடமாட்டத்தை மூடி இருப்பதாகவும் அவசர மனிதாபிமான தேவைகளுக்குக் கூட பயணத்தை முற்றாக முடக்கி இருப்பதோடு காசாவில் கிடைக்கப்பெறாத மருத்துவ சிகிச்சைகளை பெறுவதில் இருந்தும் நோயாளிகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் கிடைக்கப்பெறாத மருத்துவ சிகிச்சைகளை பெறுவதில் இருந்து சுமார் 292 நோயாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புற்று நோயாளர்கள் என்பதோடு மற்றவர்கள் மேற்குக் கரை அல்லது இஸ்ரேல் மருத்துவமனைகளால் வழங்கப்படும் உயிர் காக்கும் சிகிச்சைகள் தேவைப்படுபவர்கள் என்று இஸ்ரேலிய உரிமைக் குழுவான கிஷா தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு

அரபு லீக் அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்தப்பட்ட சிரியாவை மீண்டும் அந்த அமைப்பில் இணைப்பதற்கு அதன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

கெய்ரோவில் உள்ள தலைமையகத்தில் கடந்த ஞாயிறன்று (07) இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே சிரியாவை இணைக்க ஆதரவு கிடைத்துள்ளது.

எதிர்வரும் மே 19 ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள அரபு லீக் உச்சிமாநாட்டை ஒட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதோடு சிரியாவுடனான பிராந்திய நாடுகளின் உறவு அண்மைக்காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரபு லீக்கின் இந்த முடிவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க கடந்த 2011 மார்ச் மாதத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உத்தரவிட்டதை அடுத்தே அரபு லீக் சிரியாவை இடைநிறுத்தியது. இந்த ஒடுக்குமுறை சிரியாவில் சிவில் யுத்தமாக வெடித்தது.

இந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் கொல்லப்பட்டு மேலும் 23 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

சிரியாவின் உள்நாட்டுப் போரால் உருவான நெருக்கடிக்கு இன்னமும் தீர்வுகாணப்படாத நிலையிலேயே அது மீண்டும் அரபு லீக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அரபு லீக் தலைமைச் செயலாளர், ஜோர்தான், சவூதி அரேபியா, ஈராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட அமைச்சர் நிலைக் குழு அமைக்கப்படும். அது சிரியாவுடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும்.

பிராந்திய பிரச்சினைகள் உட்பட, பூசலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பெருந்திட்டத்தை ஜோர்தான் வரைந்துள்ளது. நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகாண்பதில் சிரியா ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஜோர்தான் வலியுறுத்தியது.   நன்றி தினகரன் 





பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த இராணுவம் விரைவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிரம் அடைந்திருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு இராணுவத்தை உதவிக்கு அழைத்திருப்பதோடு இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மூன்று கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு அதில் ஒருவர் கடந்த புதனன்று (10) உச்ச நீதிமன்றத்திற்கு வெளியிலும் மற்றும் ஒருவரான கான் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் இன்றைய (11) தினத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான நகரங்களில் துணை இராணுவப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

துருப்புகள் நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தை அடைந்ததாக அந்த நகர பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் கைபேசி தரவுச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதோடு பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் இரண்டில் பாடசாலை மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

கிழக்கு நகரான லாஹூரில் உள்ள உயர்மட்ட இராணுவ ஜெனரல் ஒருவரின் வீடு மற்றும் இராணுவ கட்டடங்களை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏனைய பகுதிகளில் அரச கட்டடங்கள் மற்றும் சொத்துகள் மீதும் தீ வைத்தனர்.

இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

வன்முறைகளில் இதுவரை ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். கானின் சொந்த மாகாணமாக பஞ்சாபில் 1,650க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை எட்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு அதன் பின்னர் அவரால் பிணையில் விடுதலை பெற முடியும்.

இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடக்கம் அவர் மீது 100க்கும் அதிகமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   நன்றி தினகரன் 




No comments: